<>
ராஜாவின் பாடல்கள் வாசிக்க கடினமானவை என்பது இசையைக் கற்பதற்கு முன்னால் இருந்த முழுமுடிவு. பிரமிப்பான எதுவுமே நமக்கு அப்பாற்பட்டதாகவும், அவ்வாறு அப்பாற்பட்டதாக இருந்தால்தான் நமக்கு பிரமிப்பும் என்பதுதானே வழக்கு.
ஆனால் உண்மையில் இசை கற்கத்துவங்கிய சில மாதங்களிலேயே ஆற்றொழுக்கொடு இல்லாவிட்டாலும், பாடலின் சுரங்களை ஒருவாறு அனுமானித்து சேர்த்து, அவரது பாடல்கள் வாசிக்கக் கைக்கூடின. இங்கே குறிப்பது பாடல்களின் மையக்குரலிழை (vocal melody) மட்டுமே. முன்னிசை, இடையிசை, பாடல் பின்னணியிசை போன்றவை கருவியிசைக்கென அமைக்கப்பட்டவை, ஒப்பிட தேர்ச்சியைக் கோருபவை. ஆனால் மையப்பாடலோ பாடுவதற்காகத் தானே. அதுவும் அப்பாடல்களை அவரவரின் குரல்வளத்திற்கு ஏற்ப பாடிக்கொண்டுதானே இருக்கிறோம். எனவே வாசிக்கவும் எளிமையாக வருவதில் வியப்பில்லை என்று புரியத்துவங்கியது.
இதன் மூலம் சில கருதுகோள்கள் கைக்கூடத்துவங்கின. ராஜாவின் பாடல்களில் ஒரு சுரத்தைப் பிடித்துவிட்டால், முழு பல்லவியின் சுரங்களும் பக்கத்தில்தான் இருக்கப்போகின்றன என்பது சீக்கிரத்திலேயே தெளிந்துவிட்டது. சுரவரிசைகளில் நின்று இசையமைக்கும் அவரது குழப்பமற்ற அணுகுமுறை என்பதாகப் இப்புரிதல் வளர்ந்தது. அவரது பல்லவிகள் பெரும்பாலும் மூன்று முதல் ஐந்து சுரங்களில் முடிந்துவிடுபவை. பல்லவிகளை, நாம் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றொரு குறிப்பிட்ட இடம் செல்லும் வழியாக கற்பனை செய்து கொண்டால், ராஜாவின் பல்லவிகள், சீராக ரயில்வண்டி போல ஒவ்வொரு சுரத்தையும் நிறுத்தமாக திருத்தமாக நின்றுச் செல்பவை. அவற்றில் இடம்பெறும் ஒவ்வொரு சுரமும், பல்லவியின் போக்கிறகு இன்றியமையாததாகவும், தங்களது நிறத்தை பல்லவிக்குத் தவறாமல் வழங்கியும் செல்பவை. நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் வித்தைகளான, நம் முன்னால் சென்று கொண்டிருக்கும்போதே, சரேலென பாதைமாறி கதிகலக்கும் சென்னை சாலை சாகசங்களை, அவற்றில் பார்க்க முடியாது.
இவ்வாறு வாசிப்பு மற்றும் போக்குவரத்தில் எளிமை கொண்டதாக அவரது பல்லவிகளை உணர்ந்த போது நியாயமாக அதன்மேலான பிரமிப்பு குறையவேண்டும். ஆனால் கலையழகின் மீதான பிரமிப்பிற்கு வழக்கமாகக் குறிக்கப்படும், அல்லது கட்டமைக்கப்படும் அதன் அமானுஷ்ய மாயை காரணமில்லை போலும். நேர்மாறாக அம்மாயை விலகும்போதுதான், அதன் மேன்மை (மேன்மையான ஒன்றாக இருந்தால்) மேலும் பளிச்சிடுகிறது.
ராஜாவின் பல்லவிகளைக் காணும் போது, இந்த சுரங்கள் எல்லாம் இவ்வளவு அருகில் தான் இருக்கின்றன. இவற்றை மேலும் கீழும் யாராலும் எளிதாக இசைத்து விட முடியும். ஆனால் அதிசயம் என்னவென்றால் நம்மிடம் இருக்கும்போது வெறும் சுரக்குவியலாகத் தோன்றும் இச்சுரங்கள், அவரிடம் அர்த்தமும் அழகும் கொண்ட மொழியாக உருவெடுக்கின்றன. நாம் தினமும் செல்லும் சாலைவழி என்றாலும், நம் கண் பார்த்தும், அவர் இசைக்கும் போது மலர்கின்றன.
<>
பல்லவி எனும் புதிர்
ராஜாவைப் போன்ற ஒரு இசையமைப்பாளருக்கு, பல்லவி என்பது சிக்கறுபட வேண்டிய புதிர். சுவாரசியம் என்னவென்றால் புதிரின் சிக்கலையும் இசையமைப்பாளர்கள் தான் தோற்றுவிக்க வேண்டும்.
தோற்றம், வளர்ச்சி,முடிவு என்ற மூன்று நிலைகளாலான பிரபஞ்ச போக்கிற்கு இசைப்பாடல்களும் அவற்றின் உறுப்புகளும் விதிவிலக்கல்ல. இசைபாடல்களும் (Musical Forms), பல்லவி போன்ற பாடல்களின் உறுப்புகளும் – எடுப்பு,தொடுப்பு, முடிப்பு (exposition, development, recapitulation) எனும் மூன்று நிலைகளால் ஆனது. எழுவாய், பயனிலை,செயப்படுபொருள் என்று, மொழி புரிதலுக்கான தனது சொற்றொடர் வடிவத்தை வந்தடைந்ததைப் போல, இது இசையின் சொற்றொடர் வழக்கு.
ஒரு பல்லவியின் எடுப்பு-பகுதி ஒரு புதிரை, கேள்வியைத் துவக்குகிறது. பல்லவியின் தொடுப்பு-பகுதி அந்த கேள்விக்கான விடை காண முயல்கிறது, அல்லது புதிரை வளர்த்தெடுக்கிறது, அல்லது சிக்கலாக்குறது, அல்லது முடிவை நோக்கி ஆற்றுப்படுத்துகிறது. பல்லவியின் முடிப்பு-பகுதி புதிருக்கான விடையாக அமைந்து, அதுகாறும் புதிரால் விளைந்த நிலையின்மையை தீர்த்து சமன்படுத்துகிறது. எனவேதான் பல்லவியின் முடிவில் நாம் சற்று ஆசுவாசமடைகிறோம்.
காட்டுமல்லி பாடலின் பல்லவியை எடுத்துக் கொண்டு இதனைப் பார்க்கலாம். இப்பாடலின் பல்லவி நான்கு இசைச்சீர்களில் (bars) அமைந்துள்ளது.
இதனை மேற்கண்ட பல்லவியின் பகுதிகளாகப் பிரித்தால் (இவ்வாறு பிரிக்க, ஒவ்வொரு இசைச்சீராக தனித்தனியாகக் கேட்கும்போது அவற்றின் எடுப்பு-தொடுப்பு-முடிப்பு செயல்பாட்டை உணரலாம்)
வழிநெடுக – எடுப்பு – ஒரு கேள்வியின் துவக்கம்
காட்டுமல்லி – தொடுப்பு – ஒரு தற்காலிக பதில்
கண்பார்த்தும் – தொடுப்பு – கேள்வி மீண்டும் (முடிவான தீர்வை வேண்டி)
கவனமில்ல – முடிப்பு – புதிரின் தீர்வு. நாம் ஒரு சமதளத்திற்கு வந்து சேர்கிறோம்.
<>
பல்லவியின் கச்சிதம்
எல்லா பாடல்களின் துவக்கத்தையும் நாம் பல்லவி என்று சொன்னாலும், எல்லா பல்லவிகளும் பல்லவிகள் அல்ல. பல்லவி எனும் கருவிக்கென பிரத்யேகமான செயல்பாடுகள் உள்ளன. எல்லாக் கலைகளையும் போலவே இவை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இசையையும் நாம் கட்டுபெட்டித்தனமாக வைக்க முடியாது என்றாலும், இன்றைய பல்லவியின் வடிவம் நெடுங்காலத்தால் வளர்க்கப்பட்டது. காலத்தில் வெற்றிபெற்ற ஒன்று தன்னிடத்தில் வெற்றிக்கான சூட்சமங்களைத் தக்கவைத்துக் கொள்வதைப் போலவே, தனது பணியினைச் சிறப்பாக செய்யும் ஒரு பல்லவியின் வெற்றி தடுக்கவே முடியாததாகிறது. எந்த கலைக்கருவியை விடவும் ஒரு கச்சிதமான பல்லவி மனிதர்களைப் பாடாய்படுத்தும் சக்திவாய்ந்தது.
ஆனால் வழக்கம்போல அது எளிதில் வாய்ப்பதில்லை. ஏனெனில் எளிதாகக் காட்சியளிக்கும் அதன் கச்சிதம்தான் சவாலானது.
இதனைப் புரிந்துகொள்ள நாமும் இசையமைப்பாளராகிப் பார்க்க வேண்டும்.
உதாரணமாக ‘வழிநெடுக’ என்று ஒரு எடுப்பு கிடைத்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அடுத்த சீராக காட்டுமல்லிக்குப் பதிலாக வேறொன்றைக் கற்பனை செய்து பார்த்தால்தான் நமக்கு ‘காட்டுமல்லி’ என்பது எவ்வளவு கச்சிதமான தொடுப்புச்சீர் என்பது தெரியவரும். சரி வழிநெடுக காட்டுமல்லி முடிந்துவிட்டது. அடுத்த சீரை எப்படி தொடங்குவது என்று யோசித்தால் ‘கண்பார்த்தும் கவனமில்லை’ எவ்வளவு பொருத்தமான சீர்கள் என்பது தெரியவரும்.
இவ்வாறு பார்க்கும் போதுதான் சாதுவாகக் காட்சியளிக்கும் இப்பல்லவியின் கச்சிதம் நம்மை தீவிரமாகத் தாக்கத்துவங்குகிறது. எடுப்பு (Theme) என்று நாம் சொல்லிவிட்டால் ஒரு இசைச்சீர் எடுப்பாகிவிடாது. தொடுப்பு என்று சொல்லுவதால் அது தொடுப்பாகி விடாது. அந்தந்த சீர்கள் அதற்கானப் பணியைச் செய்ய வேண்டும். எடுப்புச்சீரில் எடுப்பிற்கான புதிர்தன்மை/கேள்வி இருக்க வேண்டும். எவ்வாறு மொழியின் எழுத்து அசைச்சீர்களில் சென்று அமர்கிறதோ, அது கேள்வியாகவோ, பதிலாகவோ வாக்கியமாகவோ ஒலிப்பு பெறுகிறதோ, அதைப்போலவே பொருத்தமான சுரங்கள் பொருத்தமான தாளஅசையில் சென்று அமர வேண்டும். அப்போதுதான் அவை எடுப்பாகவோ முடிப்பாகவோ ஒலிப்பு பெறுகின்றன.
எவ்வளவோ பல்லவிகள் வெற்றி பெறுகின்றன. ஆனால் கூர்ந்து கவனித்தால், அந்த வெற்றி பல்லவியின் துவக்க தாளக்கட்டினாலோ, அல்லது ஒரிரு சீர்கள் கவர்வதாலோ அமையலாம். அல்லது அரிதாக நிகழ்தகவின் சாத்தியமாக ஒரு கச்சிதமான பல்லவி எந்த இசையமைப்பாளருக்கு வேண்டுமானாலும் சிக்கலாம். ஆனால் கச்சிதமான பல்லவி என்பது, ஒரு தேர்ந்த இசையமைப்பாளருக்கு மட்டுமே தொடர் சாத்தியம் ஆகிறது.
<>
இந்த நான்கு சீர்களும் ஒன்றுக்கொன்று எவ்வளவு பொருத்தமானவை, அதே நேரத்தில் சவாலானவை என்று யோசிக்கும் போதே, நேர்மாறாக இதனை சர்வநிச்சயமாக ராஜா தனது ஹார்மோனியத்தில் ஒரே அழுத்தில் பெற்றிருக்க வேண்டும் என்பதும் நாம் கற்பனை செய்யக்கூடியதே. அதாவது சவாலான ஒன்று அவருக்கோ உள்ளுணர்வு நினைத்த மாத்திரத்தில் இசையாக மாறுகிறது.
ஒரு கலைஞனின் உள்ளுணர்வு மிகப்பிரத்யேகமான (personal) ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது இசையாக மாறுவது என்பதற்கு இசையின் தேர்ச்சி மட்டுமே உதவ முடியும். இன்னும் குறிப்பாக உள்ளுணர்வை இசையாக மாற்றுவதற்கு, இசையின் மூலப்பொருட்கள் மிகப்பெரிய தடைகளையே உருவாக்குகின்றன.
இசையின் சுரங்களும், தாளமும், ஒத்திசைவும் என இசையின் பல்வேறு மூலப்பொருட்களும் தங்கள் விசைச்சக்திகளோடு இயங்குபவை. கிட்டத்தட்ட ஒரு வாகனம் ஓட்டுவதைக் காணும் போது வெகு சாதாரணமாகத் தென்பட்டாலும், முதன்முதலில் முயன்று பார்க்கும்போது பதறி காலை ஊன்றச் செய்துவிடுவதைப் போலவே, அதன் விசைச் சக்திகளுக்கு பழக்கப்படும் வரையில் இது தொடர்வதைப் போலவே, இசையின் விசைச்சக்திகளில் தேர்ச்சி பெறாதவர்களால், அவற்றை முழுமையாக தங்கள் கட்டுக்குள் கொண்டு வர இயலுவதில்லை. மாறாக அவற்றில் கொள்ளும் தேர்ச்சியே, ராஜாவைப்போன்ற இசையமைப்பாளர்களுக்கு தங்களது சிந்தனையை, உள்ளுணர்வை, அழகியலை இசையின் மூலம் நேரடியாக நம்மிடம் கடத்த முடிகிறது. Hindemith சொல்வதைப் போல
“..The inner vision that the composer has glimpsed makes itself clearer to another only if the resistance of tones and refractoriness of the tonal progressions does not come in between the impulse of the composer and its expression in sound. An immense mastery of the music material is needed to translate tones into what the heart dictates”
இதுவே ஒரு பொருத்தமான புதிரை (theme) எடுப்பாகக் கொண்டு ஒரு பல்லவியை உருவாக்கவும், அதனை வளர்த்தெடுக்கவும், நிறைவு செய்யவும் முடிகிறது. திரைச்சூழலை மனதில் கொண்டும், திரளான மக்களை சென்று சேர்வதை கருத்தில் கொண்டும் அதனை அமைக்க முடிகிறது. அமைத்த பின்னர் அதன் அழகை “பார்த்து—ம்” என்று சுர இடைவெளிகளை, சுர உச்சரிப்புகளைக் கொண்டும்,பொருத்தமான தாளக்கட்டைக் கொண்டும் மெறுகேற்ற முடிகிறது. இவை அனைத்தும் அவர் நினைத்தபொழுதில், நம் கண்பார்க்கும் போதே தான் நிகழ்ந்து வந்திருக்கிறது.
Leave a Reply