சென்ற கட்டுரையில் இன்று தமிழில் இசை சார்ந்த அணுகுமுறைகளின் சிக்கலைக் குறித்துக் கண்டோம்.
ஒரு கலையனுபவம் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று யாரலும் வரைமுறைப்படுத்த முடியாது. அதுவும் இசை போன்ற கலையில், கேட்பவருக்கு கிட்டும் பல்வேறுபட்ட அனுபவங்களை நாம் நிச்சயம் மறுக்கவும் முடியாது. நிச்சயமாக இசையில் அதன் அழகியல், அது வழங்கும் நாஸ்டால்ஜியா உள்ளிட்ட பல்வேறு உளவியல் சார்ந்த அனுபவங்கள், இசை வழங்கும் பண்பாட்டு, வாழ்வியல் சித்திரங்கள், வரலாறு என இசை கணக்கற்ற முறையில் கேட்பவரை பாதிக்கவும், மதிப்பிடவும் தூண்டுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஒரு இசையின் முழுமையான இயக்கமும், அது சார்ந்த மதிப்பீடும் இவற்றையும் தாங்கியது என்பதிலும் சந்தேகமேயில்லை.
ஆனால் அதே வேளையில் இவையனைத்தும் இசைக்கு வெளியிலானவை. இசையின் விளைவுகள். இந்த விளைவுகளை இசை அதன் மூலப்பொருட்களையும் அவற்றின் இயக்கத்தினையும் கொண்டு எவ்வாறு உருவாக்குகிறது என்பதே நாம் சிந்திக்க வேண்டியது, ஆராய வேண்டியது. இவ்வாறு இசையை அதன் மூலப்பொருட்களையும், அவற்றின் கூட்டு இயக்கத்தையும் கொண்டு சிந்திக்க, அணுக, புரிந்து கொள்ள, மதிப்பிட முயலாததே நமது மையச் சிக்கலாகிறது. அதுவும் ஒரு முழுமையான இசையமைப்பாளரான இளையராஜாவை இவ்வாறு அணுகாததே தமிழில் அவர் குறித்து நிலவும் தவறான பார்வைகளுக்கும் புரிதல்களுக்கும் அடிப்படையாகிறது. இச்சிக்கல் இளையராஜவை அணுகுவதில் துவங்கி, அவரைப் போன்ற ஒரு விபத்து நடக்காவிடில் தமிழ் எனும் இசைநிலம் மீண்டும் ஒரு வறண்ட இசைக்காலத்திற்குள் செல்லும் அபாயத்தைத் தாங்கியது. ஏனெனில் இசை குறித்து தொடர்ந்து சிந்திக்காத, அதன் இயக்கத்தை புரிந்து கொள்ள முயலாத சமூகத்திலிருந்து எவ்வாறு மேம்பட்ட இசையியக்கங்கள் பிறக்க முடியும்? எனவே இச்சிக்கலை நாம் எதிர்கொள்வது மிக அவசியமானதாகிறது.
ஏன் இளையராஜாவின் இசை இத்தகைய அணுகுமுறையை நம்மிடம் கோருகிறது?
ராஜாவின் இசை வழங்கும் இசைக் கேள்விமுறை:
ராஜாவின் இசையில் மேற்கூறிய எந்த இசைவழங்கும் அனுபவத்திற்கும் பஞ்சமில்லை. தன் காலகட்டத்தின் அழகியலில் துவங்கி, பண்பாடு, வாழ்வியல், உளவியல் கூறுகள், கணக்கற்ற உணர்வு நிலைகள் எனவும் திரைப்படத்தின் அங்கமாதலால் அதன் கதைகளத்தின் கூறுகள் என ராஜாவின் இசை பலதரப்பட்ட அனுபவங்களைத் தரவல்லது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இவை அனைத்தையும் நீக்கினாலும் தனித்த இசையாக, ஒலியின் ஒழுங்கமைவாக, செயலாற்றவும் வல்லது. ராஜாவின் இசையைக் கொஞ்சமேனும் கூர்ந்து கவனிப்பவருக்கும் இது உணரக் கூடியதே.
மேற்கத்திய இசை பயிற்சிக்கு மாணவர்களை தயார்படுத்த, மேற்கிசை ஆசிரியர்களுக்கு ஒரு சிக்கல் உண்டு. மேற்கிசை என்றல்லாமல் செவ்விசை பயிற்சிக்கான பொதுவான சிக்கல் இது. பயிலவரும் மாணவர்களுக்கு அவர்களுக்கு இசை குறித்து கோட்பாட்டு ரீதியாக விளக்கினாலும், அதன் பயனை அவர்கள் புரிந்து கொள்ள, மாணவர்களை செவ்விசை கேள்விமுறைக்கு (musical hearing) தயார்படுத்த வேண்டியுள்ள சிக்கல் இருக்கிறது. ஆனால் தமிழில் செவ்விசைக்குத் தேவையான ஒரு இசை கேள்விமுறையை ராஜாவின் இசை மிகப்பரவலாக வழங்கியிருக்கிறது என்றே கருதுகிறேன். இசை கற்றவர்களும் கல்லாதவர்களும் என வேறுபாடின்றி ராஜாவின் இசை சில அடிப்படையான இசையறிதல் முறைகளை அனைவருக்குமாக வழங்குகிறது.
அவரது இசையைக் கொஞ்சமேனும் கூர்ந்து கவனிக்கும் அனைவரும் பின்வருபவனவற்றை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். அவரது இசை நம்மை அது வழங்கும் வெளிப்புறமான உணர்வனுபவங்களிலிருந்து அதன் உள்ளீடான அமைப்பை நோக்கி நகர்த்துகிறது. அவரது இசையில் நாம் ஒரு துல்லியமான நகர்வை உணர்கிறோம். அதன் திசை மிகத் தெளிவானது. அவரது இசை பல இழைகளைத் (layers) தாங்கியிருந்தாலும், பல தளங்களில் விரிந்தாலும், அதற்குள் இழையூடும் ஒரு ஒழுங்கைக் காண்கிறோம். அவரது இசைத்துணுக்கோ, பாடலோ துவக்கத்திலிருந்து முடிவு வரை தொய்வின்றி பயணித்தும், ஒரு முழுமையை உணர்த்தியும் செல்கிறது. அவரது இசை நமது இசையறிதலை, இசையின் நகர்வு, திசை மற்றும் வடிவ ஒழுங்கை நோக்கி நகர்த்துகிறது (Sense of musical movement, direction and structure ).
இவ்விளைவினை இக்காலகட்டத்தில் இவ்வளவு பரவலாக மக்களிடம் உருவாக்கியுள்ளது அவரது மிகப்பெரிய கொடைகளுள் ஒன்று.
அடிப்படையில் இசையென்பது காலத்தில் நிகழ்வது (Music happens in time). நாம் இசையை காலத்தில் நிகழும்போதே அனுபவிக்கிறோம்.
ஒரு நல்ல இசை என்பது இத்தகைய அனுபவத்தில் தான் நிகழும் பொழுதில் சில அற்புதமான தருணங்களைத் தரவல்லது. ஆனால் ஒரு அற்புதமாக வடிவமைக்கப்பட்ட இசை நிகழும் போது நாம் அதனை தருணங்களாக அனுபவிப்பதில்லை. மாறாக அதனை ஒரு முழுமையான அனுபவமாக உணர்கிறோம். அதில் விசேஷமான தருணங்கள் வாய்த்தாலும் அவை அதன் முழுமைக்குள் நிற்பவை. ஒரு அற்புதமான இசை, கவனமாக ஒவ்வொரு கருத்தும் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி ஆற்றொழுக்கோடு செய்யப்படும் தர்க்கத்தைப் போன்றது. ஒரு சொல்லும் நீக்கமுடியாத ஒவ்வொரு சொல்லும் அதன் இயக்கத்தில் இன்றியமையாத அற்புதமான இலக்கியப் படைப்பைப் போன்றது.
இலக்கியத்தில் சொற்களைப் போல, சொற்றொடர்களைப் போல, அதனால் வெளிப்படும் சிந்தனைகளைப் போல இசையிலும் அதன் பல்வேறு மூலப்பொருட்களின் அமைப்பின் வாயிலாக இசையும் நம்மிடம் உரையாடுகிறது. இசையின் பல்வேறு மூலப்பொருட்களான சுரங்கள், தாளம், chords உள்ளிட்டவை, ஒரு அற்புதமான இசையில் நோக்கமின்றி இடம் பெறுவதில்லை. மேற்கிசைச் சிந்தனையாளர் Salzerன் வார்த்தைகளில் சொல்வதானால்
“A musical masterpiece does not sound like a vaguely arranged sequence of chords and progressions but like an organic whole in which every chord, every melodic event convincingly leads to what follows”
(இதிலுள்ள Organic, Whole, Convincingly அடிக்கோடிடப்பட வேண்டியவை)
ஆக காலத்தில் நிகழும் ஒரு அற்புதமான இசை, அதன் உருவாக்கத்திலும், நிகழ்விலும் தர்க்கப்பூர்வம் நிறைந்தது (logical). இதனை நம்மால் உணர முடிகிறது. ஆனால் எவ்வாறு இதனை அணுகுவது, புரிந்து கொள்வது அல்லது விளக்குவது ?
இதற்கு மேற்கிசையின் சிந்தனைத்துறை நமக்குப் பெரிதும் உதவக்கூடியது. மேற்கில் இசையின் வளர்ச்சிக்கு இணையாக, சாதகமாக இசை குறித்த சிந்தனை முறைகளின் வளர்ச்சி தொடர்ந்து (ஒரு ஓரத்தில் நிகழ்ந்தாலும்) நிகழ்ந்து கொண்டே இருந்திருக்கிறது. மேற்கத்திய செவ்விசைக்கு இணையாக இசைகுறித்த சிந்தனைத்துறை ஒரு அற்புதமான அறிவுத்துறையாக விளங்குகிறது.
மேற்கிசை தனது பொற்காலத்தில் நுழையத் துவங்கிய காலம் முதல் பரவலாக இசை குறித்த சிந்தனைமுறைகளை வளர்த்திருக்கிறது, அதனை எழுத்தாக்கி பதிவு செய்திருக்கிறது, Fux இயற்றிய gradus ad parnassum (1725) எனும் Counterpoint குறித்த பயிற்சிமுறை புத்தகத்தில் துவங்கி, JS Bach மகனான CPE Bach எழுதி Essays on the art of playing keyboard instruments, Ramaeauவின் Harmony என 18ம் நூற்றாண்டு முதல் இன்றைய காலகட்டத்தின் schoenburg, Hindemith போன்றோரின் இசையமைப்புக் கோட்பாடுகள் (Theories on composition) வரையில் இசை குறித்த சிந்தனை முறைகள் தொடர்ந்து எழுதப்பட்டு வந்துள்ளன. ஒவ்வொரு காலகட்டத்தின் இசைவளர்ச்சியை இவை பதிவு செய்கின்றன. தங்கள் காலகட்டத்தின் அறிவியல் வளர்ச்சியை, தத்துவங்களை இவை உள்வாங்கியிருக்கின்றன. மேற்கத்திய செவ்விசையின் வளர்ச்சிக்கு இவை முக்கிய பங்காற்றியிருக்கின்றன. வரும்காலத்திலும் இவை மேற்கிசைக்கு பங்களிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. இன்று மேற்கத்திய செவ்விசையும் அதன் பொற்காலங்களை ஒப்பிடும் போது படைப்பாற்றலின் வறட்சியில் சிக்கியிருந்தாலும் அதனை மீட்டெடுக்கும் வாய்ப்புகளைத் தாங்கியதாகவே மேற்கிசை சிந்தனை முறை இருக்கிறது.
இதனோடு ஒப்பிடும் போது நம்மிடம் நிலவும் வெற்றிடம் தெளிவாகிறது. நம் இசை வளர்ச்சி பெற்ற தடைகளைப் போலவே, அல்லது அதற்கு இணையாக இசை சார்ந்த சிந்தனைமுறைகளின் வளர்ச்சி அமையவில்லை. ஆனால் நாம் ஒரு சமூகமாக இதனை சமீபமாகத்தான் இழந்திருக்கிறோம் என்பதை நமது இசைவரலாற்றை நோக்குபவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளாலாம். கிரேக்க இசைச் சிந்தனை முறைக்கு இணையான ஒரு இசைச்சிந்தனை முறையாகவும், சிலப்பதிகார தேவார காலங்களில் ஒரு முன்னோடி இசைச்சமூகமாக இருந்து இன்று நாம் இசையை சிந்திப்பதற்கான கருவிகளை இழந்து நிற்கிறோம் என்றே சொல்ல வேண்டும். கர்னாடக இசை அதன் பொற்காலத்தில் நுழையும் போது அதற்கு சங்கீத ரத்னாகரம் ஆதாரமான நூலாகச் சொல்லப்படுகிறது. பிறகு வேங்கடமகியின் புத்தகம் மேளகர்த்தா முறைக்கான அடிப்படை நூலாகிறது. ஆனால் பிற்காலத்தில் இவ்வாறான முயற்சிகள், இசை சார்ந்த சிந்தனைமுறைகள் அருகி (திரு சாம்பமூர்த்தி, திரு ராமநாதன் போன்ற மிக்சசிலரின் முயற்சிகளே உள்ளன) கர்னாடக இசையிலும் இத்தகைய வெற்றிடமே உள்ளது.
நம்மிடம் நிலவும் இத்தகைய வெற்றிடத்தாலும், ராஜாவின் இசையமைப்பு மேற்கத்திய இசையமைப்பின் தத்துவங்களைத் தாங்கியதாகவும் இருப்பதாலும் நாம் மேற்கிசை சிந்தனை முறைகளை நாட வேண்டியது அவசியமாகிறது. பரவலாக ஒரு இசைக்கேள்வி முறையை வழங்கியுள்ளதைப் போலவே இசை குறித்த சிந்தனைமுறையில் நம்மில் நிலவும் இத்தகைய வெற்றிடத்தை சுட்டுவதும் கூட ராஜாவின் முக்கியமான பங்களிப்புகளுள் ஒன்று. அவரது இசையை அணுகும் கருவிகள் நம்மிடம் இல்லாதலால் அதற்குத் தேவையான இசைச்சிந்தனை முறைகளை தேடித்திரிய வேண்டிய அவசியத்தை அவரது இசை நம்மில் உருவாக்குகிறது.
ஆனால் இசையின் முழுமையை அணுகுவதற்கு முன்னர், அதன் பல்வேறு கூறுகளைக் காண வேண்டியது அவசியமானது. வாக்கியங்களைப் புரிந்து கொள்ள சொற்களைப் புரிந்து கொள்வது அவசியமானதைப் போல. மேற்கிசையமைப்பின் பல்வேறு கூறுகளில் இத்தகைய இசை இயக்கம் சார்ந்த பார்வையில் இளையராஜாவின் Counterpoint பயன்பாடு குறித்து முதலில் காண்போம்.
Leave a Reply