இசைக்குழு: Between the Buried and Me
இந்த நூற்றாண்டின் Metal, இசையை மட்டும் முன்னிறுத்தும் மாற்றத்தை நிறைவேற்றி இருப்பதற்கு சிறந்த உதாரணம், Between the Buried and me குழுவின் Colors தொகுப்பு. பல்வேறு Metal சார்ந்த பட்டியல்களில் இத்தொகுப்பு முக்கியம் பெற்றிருப்பதைக் காணலாம். அதே வேளையில் MetalHeads என்றழைக்கப்படும் Metal கலாச்சாரக்காவலர்கள் இதனைப் புறக்கணிப்பதையும் காணலாம். காரணம் இல்லாமல் இல்லை.இசைமொழியில், அமைப்பில், உணர்வுநிலையில், வகைமை கலப்பில் என இத்தொகுப்பு Metal இசையையே பிரதானமாக இருந்தாலும், அதே வேளையில் Metal அடையாளங்களை பெரிதாக விலகியும் செல்கிறது.
Metal தனது எதிர்முகத்திற்கு, தீவிரத்திற்கு, வன்முறைசார் இசைக்கு ஒரு இசை மொழியை 40 ஆண்டுகளாக வளர்த்தெடுத்திருக்கிறது. சென்ற பதிவில் குறிப்பிட்டதைப்போல இந்த இசைமொழியின் பொதுவான அம்சங்கள் Blast Beats, அலறற்குரல், Guitar குலைவிசை இவையே. இவற்றோடு Metal இசையில் தெறிக்கும் வன்முறையான உணர்வு நிலை. பொதுவாக Metal இசைமொழியிலேயே இந்த உணர்வு நிலை சாத்தியமாகிவிடும்.
Colors தொகுப்பின் இசைமொழி நிச்சயமாக Metal தான். இன்னும் சொல்லப்போனால் ஒரு அதீதமான Metal இசைமொழி.
தொகுப்பு ஆரம்பிப்பது ஒரு Piano இசையில், மென் குரலில்..இதில் ஏமாந்தால் முடிந்தோம். சிறிது நேரத்திலேயே Drums இந்த தொகுப்பின் தன்மையை உணர வைக்க ஆரம்பிக்கிறது. பொதுவாக Blast Beats வேகம் 200 Beats/minute என்றால் இதில் 400 b/m இருக்க வேண்டும். அதை விட முக்கியமாக நிமிடங்கள் என்றில்லாமல் பாடல் முழுதும், தொகுப்பு முழுதும் Blast Beats. இவ்வளவு வேகம் சார்ந்த இசையைக் கேட்பது அரிது. மென்குரல் அலறலாகவும், Guitar குலைவோசையும் சேர்ந்து தொகுப்பு முழுதும் நிறைக்கிறது. கருவிகளும் , குரலும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வேகமும், ஒலி அளவும் தாங்கள் கேட்கப்படுவதற்கு போட்டியிடும் வகையில் அமைந்துள்ளன. மாறிக்கொண்டே இருக்கும் தாளக்கட்டுகள் வேறு.இத்தொகுப்பின் இசைமொழியின் அடையாளம் இதுதான். இடநெருக்கடியில் செவியைத் திணறவைக்கும் இசையனுபவம். வெளியேற வழியில்லா ஒரு மாபெரும் Metal இசைச்சுழலில் நாம்.
Colors தொகுப்பின் முதல் ஆச்சரியம், இவ்வாறான அதீதமான Metal இசைமொழியாக இருந்தும் துளிகூட தோன்றாத Metal உணர்வு நிலை. கிட்டத்தட்ட ஒரு உணர்வற்ற இசையாகவே, அல்லது ஒரு கொண்டாட்டமான உணர்வு நிலை வாய்த்துவிடுகிறது. இது விபத்தா அல்லது முன்முடிவா எனத்தெரியவில்லை. தனிப்பட்ட அனுபவமாகக் கூட இருக்கலாம். ஆனால் இத்தகைய அதீத இசைமொழியில் நிகழவேண்டிய உக்கிரம் இதில் இல்லை.
இந்த நெருக்கடியான, பெரிதும் உணர்வற்ற இசையே இத்தொகுப்பை உடனடியாக நாம் புரிந்துகொள்வதில் பெரிய சிக்கல். இத்தொகுப்பை முதல் கவனிப்பிலேயே புரிந்துகொள்ள அல்லது ரசிக்க முடியும் என்று தோன்றவில்லை. அதிக பட்சம் இதன் ஆற்றல்(technical) மிக்க இசையில் நாம் வியக்கலாம். ஆனால் முதல் முறை மிக எளிதாக நடக்கக் கூடிய விசயம் உடனடியாக கேட்பதை நிறுத்துவது தான். அதுவும் இவ்வகை இசையில் பழக்கமில்லை எனில் மிகநிச்சயமாக இதுதான் நடக்கும். இடநெருக்கடியும், ஒலி அளவுகளும் போக இந்த தொகுப்பை ரசிப்பதன் இன்னொரு சிக்கல் உள்ளது.இந்த தொகுப்பின் இசையமைப்பே அது.
ஒரு பாடலில் நினைவு கொள்ளத் தக்க பதங்கள் பொதுவாக இருக்கும். எவ்வளவு கடினமான பாடலாக இருந்தாலும் அதன் ஒரு சில பதங்கள் பிடிபட்டு விடும். கொஞ்சமாவது திரும்ப ஒலிக்கும் பதங்கள் (repetitive phrases) இருக்கும். இப்படி இருந்தால் தான் மெல்லிசைப் பாடல்களே பிடிபடும் எனும் போது, இது போன்ற இசை பிடிபடாமல் போவதில் வியப்பில்லை. ஏனெனில் இதில் நினைவில் நிற்கும் பதங்கள் என்று எதுவும் இல்லை. எதுவும் திரும்ப இசைக்கப்படுவதில்லை.ஆரம்பம், இடையிசை, முடிவிசை என எதுவும் இல்லை. தாளக்கட்டுக்களில் தொடர்ச்சியில்லை. அதே நேரத்தில் முன், பின் நிகழ்ந்தவையும் தேவையில்லை. நுண்ணிய (subtleties) கவனிப்புகள் தேவையில்லை. எல்லாம் அந்த நொடி நிகழ்பவையே, நமக்கு நேரடியாகக் கேட்பவையே. இத்தொகுப்பின் ஒரு பாடலின் தலைப்பு போலவே (Prequel to the Sequel). எனவேதான் இத்தொகுப்பை முழுதுமாகப் புரிந்து கொள்ள கிட்டத்தட்ட முழு தொகுப்பையும் மனனம் செய்ய வேண்டி இருக்கிறது. அப்போதுதான் நம் ரசனைக்கு ஏதுவாக பதங்கள் குறித்த ரசிப்பும், எதிர்பார்ப்பும், பாடலின் அமைப்பும் பிடிபடுகிறது. ஒரு உதாரணத்திற்கு Temple Run விளையாட்டின் முதலிலேயே முழு வேகத்தோடு ஓடுவது போல இது. முதலில் நிச்சயம் விழத்தான் செய்வோம். திருப்பங்கள் நினைவுக்கு வரத்துவங்குமளவு பழகிய பிறகுதான் கொஞ்சம் நம்மால் தாக்கு பிடிக்க முடியும்.
இத்தொகுப்பின் இன்னொரு முக்கிய கூறு இது சாதித்திருக்கும் கலந்திசைதான். தொகுப்பின் துவக்கம் ஒரு மெல்லிசையில் ஆரம்பித்து Metal இசையாக இரு பாடல்கள் வரை நீடிக்கிறது. பிறகு Informal Gluttony பாடல் ஒரு Tribal beats மற்றும் Middle eastern இசையில் துவங்குகிறது.பிறகு ஒரு metal மழை. அதன் உச்சத்தில் சடாரென ஒரு zenதனமான choral பகுதி. அது மறுபடி Tribal beatsல் முடிகிறது. அடுத்த Sun of Nothing பாடலில் நிகழ்வது மேலும் சுவாரசியம். இதற்கு மேல் ஒரு வேகம் சாத்தியமில்லை என்ற நிலைக்கு Drums பொழிந்து தள்ளிக்கொண்டிருக்கும் போது ஒரு திடீர் Polka இசை. முதல் முறை கேட்கும் போது கொஞ்சம் விக்கித்துப் போகச்செய்யும். ஒரு அதிவேக ராட்டினத்தில் சுழலும் போது திடீரெனத் தோன்றும் நிதானம்தான் தாளமுடியாத அனுபவம். அது போன்ற அனுபவமே இதிலும். இப்படி இத்தொகுப்பு முழுதும் மிகுந்த கற்பனை வளமிக்க கலந்திசை நிகழ்ந்துள்ளது. பொதுவாக இது போன்ற கலந்திசை கொஞ்சமாவது தொடர்புடைய (ஒலி அல்லது உணர்வு ரீதியாக) வகைமைகளில் நிகழும். ஆனால் சம்பந்தமேயில்லாத கூறுகளைக் கொண்ட கலந்திசை இது. இசையளவில் இத்தகைய விபரீத கலப்பிசை ஒரு தடையற்ற தொடர்ச்சியைக் கொண்டிருப்பது ஒரு சாதனைதான். இவர்களுக்கு ஒப்பான பல technical குழுக்களுக்குள் (Dream Theatre, Meshuggah) இவர்களைத் தனித்துவமாக்குவது இது.
Colors சுமார் 65 நிமிடங்கள் ஒலிக்கும் தொகுப்பு. ஒரு பாடல் முடிவடையும் இடத்திலிருந்து அடுத்த பாடல் தொடங்க்குகிறது. இத்தொகுப்பை ரசிப்பது ஒருமுகமாகவே சாத்தியம். தொகுப்பில் விழுந்தால் முடியும் போதுதான் எழ வேண்டும், முடியும். இவற்றை கேட்டு முடிக்கும் போது நமக்கு இதன் வேகமும், ஆற்றலும் குறித்த பிரமிப்பு அடங்காது. அப்போது இந்த தொகுப்பை அவர்கள் முழுதுமாக, பிசகாமல், நேரடி இசை நிகழ்ச்சிகள் செய்திருக்கிறார்கள் என்பதையும் நினைத்துப்பார்க்க வேண்டும்.
தொகுப்பின் இணைப்பு: