இசைக்குழு: Unwound
ஒரு இசை வகைமையின் காலசுழற்ச்சியில் பல்வேறு இசைக்குழுக்கள் முக்கிய இடம்பெறுகின்றன. அதன் தோற்றத்திற்குக் காரணமான குழுக்கள், அதன் செழுமைக்குக் காரணமான குழுக்கள், அதனை மக்களிடம் எடுத்துச் சென்றவை, அதனைத் தோல்வியுறச் செய்தவை என பல்வேறு குழுக்கள், ஒரு வகைமையின் அடையாளமாகின்றன. இதில் ஒரு வகைமையின் உச்சிகாலத்தில் அதன் போக்கில் மூழ்கிவிடாமல் அதிலிருந்து விலகி தனித்து, முற்றிலும் வேறு கோணத்தில் அவ்வகைமையினை அணுகும் குழுக்கள் விசேஷமானவை. அவையே அந்த வகைமையின் பரிணாம வளர்ச்சிக்கு வித்திடுபவை. Slint குழுவின் Spiderland, Alternate Rock வகைமையில் அத்தகைய அதிர்வை நிகழ்த்தியதாகச் சொல்லப்படுகிறது.
Unwound இசைக்குழுவின் Leaves Turns Inside You (என்னவொரு அட்டகாசமான தலைப்பு) இவ்வகையில், Hardcore வகைமையின் வேற்று கோணத்தை நிகழ்த்திக் காட்டிய தொகுப்பு. முதலில் இதை Post-Hardcore என வகைமைப்படுத்தியதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஏன் இதைச் சொல்லுகிறார்கள்? கூச்சலிடும் கிடார் இல்லை, கத்தல்கள் இல்லை, மிதமான தாளகதியிலான பாடல்கள்..இது எப்படி Post-Punk வகையிலாகும் எனப் புரியாமலேயே இருந்தது. முதலிலேயே தொகுப்பு மிகவும் பிடித்துவிட்டாலும் இது கொஞ்சம் கவர்ச்சிகரமான Rock இசை என்றே தோன்றியது.ஆனால் பலமுறை கேட்ட பிறகு தான் இதன் அருமை மேலும் புரிகிறது. Punk இசையின் அதே கட்டற்ற தன்மை, அதே உள்ளார்ந்த அரசியல், அதே வெறுமையும், குலைவையும் தரும் இசையனுபவம். ஆனால் ஆர்ப்பாட்டமின்றி, மெல்லிசையாக, கோர்வையாக, ஒரு முடிவுறாத உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையிலான கனவுவெளியாக..
Unwound குழுவின் கலைஞர்கள் Trosper (பாடகர்/guitar), Verm (bass guitar), Sara (Drummer) இவர்கள் கூட்டணியிலான இக்குழுவின் ஆரம்பகால இசைச் சூழலை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இக்குழு 90களின் துவக்கத்தில் அமெரிக்காவின் வடமேற்குப் பிரதேசத்தில் உருவான குழு. இத்தகைய குழு ஒன்று இதைவிட பொருத்தமான காலகட்டத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுக்க முடியாது என்றும் சொல்லலாம் அல்லது அதுதான் இவ்விசையின் முகாந்திரம் என்றும். 80களின் இறுதியில் இசையின் வணிகத் தன்மைக்கும் புனித தன்மைக்கும் எதிரான அரசியல் பேசும் Punk இசை தனக்கு முன்னால் நின்ற Prog-Rock இசையின் பம்மாத்தை புறம் தள்ளி கோலோச்சத்தொடங்கியது.பிறகு 90களின் துவக்கத்தில் உலகப் புகழ்பெற்ற nirvana மற்றும் Grunge குழுக்களின் துவக்கம். Riot Girrl என்ற வகைமையில் பெண் கலைஞர்களின் கலகக்குரல். இதற்கு இன்னொரு தூரத்தில் Twin Peaks என்ற David Lynchன் தொடரில் Badalamenti வழங்கிய சூழலிசை. இவை அனைத்தும் அமெரிக்காவின் வடமேற்குப் பிரதேசத்தில் உருவாகி வந்தவை..இப்படி ஒரு ஆர்ப்பாட்டமும், புரட்சியும் அதே வேளையில் உள்ளார்ந்த அனுபவமும் அளிக்க வல்ல இசைச் சூழல். இதை வைத்து Unwound குழுவை அணுகினால் அவர்கள் வழங்கும் இசையனுபவத்தின் பின்னணியைப் புரிந்து கொள்ளலாம். Unwound ஒரு பேட்டியில் சொல்வதைப் போல இந்த சூழலில் கரைந்து விடாமல் இதனை உள்வாங்கியும் இதற்கான ஒரு எதிர்வினையாகவும் இவர்கள் இசை அமைந்திருக்கிறது.
Leaves Turns Inside you என்ற இந்த இசைத்தொகுப்பு இருஇணை தொகுப்புகளால்(Double Album) ஆனது. மொத்தம் 14 பாடல்கள். எனவே தொகுப்பு ஒடும் நேரம் அதிகம்தான். ஆனால் உள்ளடக்கம் இதை ஒரு பிரச்சனையாக்காமல் இதனை ஒரு பேரிசை அனுபவமாக்குகிறது. இவ்வளவு நீளமான தொகுப்பு ஒரு துணிச்சலான முயற்சி. பலர் இதனை தனித்தனித் தொகுப்புகளாக வெளியிட்டிருப்பார்கள். இவர்கள் இதனைச் சேர்த்து வெளியிட்டிருப்பது ரசிகர்கள் மேல் உள்ள நம்பிக்கையையும் இன்னொன்றையுமே குறிக்கிறது. அது பற்றி இறுதியில்..
இதன் இசையமப்பு முன்னரே சொன்னது போல Punk வகைமையிலிருந்து மாறுபடுகிறது. நிதானமான சீரான தாளகதி இதன் முதல் தனித்துவம். அருமையான கூட்டணீயாக lead Guitar/Bass Guitar/Drums..ஓரு உதாசீனமான குரல். ஆனால் இவற்றிற்கு இடையில் பல இசைக்கருவிகளின் பங்களிப்பு இருக்கிறது. Cello/Violin/Mellotron இன்னும் பல எலக்டிரானிக் கருவிகளின் சேர்ந்திசை. ஆனால் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு துல்லியமான Punk உணர்வுநிலையை கொண்டுவந்து விடுகின்றன்.
இந்த தொகுப்பின் துவக்கமே ஒரு முக்கியமான அறைகூவல். இந்த தொகுப்பு தொடங்குவது We invent You பாடலில். துவக்கமே ஒரு Drone இசையில் ஆரம்பிக்கிறது. சரி என்று கேட்டால், Drone முடியாமல் போய்க்கொண்டே இருக்கிறது. பொதுவாக இசைத்தொகுப்புகளின் துவக்கங்கள் நம்மை அந்த அலைவரிசைக்கு எடுத்து வரும் முயற்சி. இதில் அது மட்டுமல்ல என்பது என் எண்ணம். Eyes wide shut படத்தில் Kubrick துவக்க நிமிடங்களிலேயே Kidmanஐ நிர்வாணமாகக் காட்டி அதிர்ச்சியளிப்பார். இதைப் பற்றி அவர் சொன்னாதாக ஒரு நியாபகம் உண்டு. நிர்வாணத்தை வேறு எந்த மதிப்பீட்டிற்காகவும் பயன்படுத்தவில்லை என்பதற்கும் முதலிலேயே அதனை தாண்டிச் செல்வதற்கும் பயன்படுத்தியதாக. கிட்டத்தட்ட அதே அணுகுமுறைதான் இதுவும். இந்த Drone சரியாக 2 நிமிடம் ஒடுகிறது. அதற்குள் இந்த இசைக்காக தயாராகுங்கள் அல்லது விலகி விடுங்கள் என்று சொல்வதாகவே படுகிறது.
தொகுப்பின் பாடல்களை மூன்று வகைப்படுத்தலாம். ஒன்று கருவியிசை பிரதானமான பாடல்கள். இவை ஒரு minimalistic அணுகுமுறை என்று சொல்லத்தக்க வகையில் நிதானமாக Punk உணர்வனுபவத்தில் நம்மை மூழ்கடிக்கினறன. உதாரணமாக Below the salt பாடல். இரண்டாவது Punk இசைக்கே உரிய குரல்-guitar சேர்ந்திசை. இவை கூச்சலின்றி, ஆர்ப்பாட்டமின்றி ஆனால் Punk இசையினை எதிரொலிக்கின்றன. இந்த வகையின் எடுத்துக்காட்டாக Scarlette பாடலைச் சொல்லலாம். மூன்றாவது வகை பிற இசைக்கூறுகளின் கலப்பிசை. இது தரும் ஒருவித அதிர்ச்சி மற்றும் சூழலிசை அனுபவங்கள். இதற்கு உதாரணமாக Terminus பாடல். வித்தியாசமான lead/Bass guitar வாசிப்பில் ஆரம்பிக்கும் இப்பாடல் இடையில் ஒரு Cello நுழைகிறது, பிறகு Violin ஒரு சோகத்திற்குள் செல்ல, கடைசி துணுக்கு பாடலை இனிமைக்கு மடைமாற்றுகிறது.
ஆனால் இத்தொகுப்பின் சிகரமாக கருதுவது Look a Ghost பாடல் தான். கடந்த சில ஆண்டுகளில் இதை விட அதிகமாகக் கவர்ந்த guitar பாடல் எதுவுமில்லை. இப்பாடலின் சன்னமான குரல் பகுதியும் அதன் பின்னணியில் அடுக்கடுக்காக பின்னப்படும் guitar பதங்களும், இவை இரண்டினைச் சேர்க்கும், முன்னகர்த்தும் கற்பனையும் நம்மை பரவசத்தில் ஆழ்த்துகின்றன். இத்தொகுப்பிலும் unwound குழுவின் இசையிலும் இப்பாடல் ஒரு மகுடம் தான்.
முன்னர் சொன்னது போல இதுபோன்ற Magnum Opus தொகுப்புகள் வருவது இன்னொரு கலக்கத்தை ரசிகர்களுக்கு உண்டாக்கும். பல்வேறு குழுக்கள் முடிவுக்கு வருவது இதற்குப் பிறகுதான். பலதரப்பட்ட காரணங்கள் இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு வெற்றியின் கனம் பல குழுக்களைச் சிதைத்திருக்கிறது. Slint குழு Spiderland தொகுப்பிற்குப் பிறகு அழிந்த கதை இப்படித்தான். குழுவினரின் மனச்சிதைவு மற்றும் போதைப்பொருட்களின் உபயோகம் கட்டுக்கடங்காமல் போனது.
Unwound குழுவும் இந்த தொகுப்பிற்குப் பிறகு பிரிந்தது. இதில் Vernன் போதைப்பொருள் உபயோகமே பிரச்சனை. மிக அபாய கட்டத்திற்கு போயிருக்கிறது Vernன் பழக்கம் என்பது சமீபத்தில் துவங்கிய இவர்களின் தளத்தில் வாயிலாகத் தெரிந்தது.. ஆனால் ஒரு வித்தியாசம் இது இத்தொகுப்பிற்கு முன்னரும் பலமுறை நிகழ்ந்த ஒன்று. எனவே இதனை தாள முடியாமல் எப்படியும் பிரியத்தான் போகிறோம் என்று தெரிந்து இந்த தொகுப்பில் தங்களை கொட்டியிருக்கிறார்கள் இக்குழுவினர். ரசிகர்களுக்கு இது தெரியாது. தொகுப்பு வெளிவந்து ஒரு ஆண்டு கழிந்து April 1, 2002 அன்று தாங்கள் பிரிவதாக அறிவிக்கிறார்கள். பிறகு பல்வேறு முயற்சிகள் நடந்தாலும் குழிவினரால் மீண்டும் சேர்ந்தியங்க முடியவில்லை.
இத்தொகுப்பும், Fugazi குழுவின் The Argument தொகுப்பும், தங்கள் மாறுபட்ட அணுகுமுறையால் Punk இசையின் அடுத்த நீட்சியான Post-Punk வகைமைக்கான துவக்கங்களை செதுக்கிய அடையாளத்தொகுப்புகளாக நீங்கா இடம் பெற்றுவிட்டன.
ஆனாலும் ஒரு பேட்டியில் சாரா இவ்விதம் கூறி இருப்பது இது முடிவிற்கு வந்திருக்க வேண்டாம் என்று தோன்ற வைக்கிறது.
I’m pretty sure a day doesn’t go by that I don’t think about Unwound or some Unwound-related experience, even just in passing..The musical connection I had with those guys is something I don’t know I’ll ever find again..
சில தேர்வுகள்
- Look a Ghost
2. Scarlette