தொகுப்பு: Clayman (2000)

இசைக்குழு: In Flames


In Flames – இருபது வருடங்களுக்கு மேலாக Metal இசையின், குறிப்பாக Melodic Death Metal வகைமையின் அடையாளமான குழுக்களுள் ஒன்று. இத்தகைய நீண்ட இசைப்பயணம் வாய்க்கும் கலைஞர்களுக்கே உரித்தான இசைவடிவ/ஒலிநய மாற்றங்கள் நிரம்பிய இசைவரலாறு இவர்களுடையது. இத்தகைய இசை உருமாற்றங்களில் ஒரு பாலமாகவும், அதே வேளையில் அவர்களின் சிறந்த தொகுப்புகளுள் ஒன்றாகவும் அமைந்த தொகுப்பு Clayman. Sweden நாட்டைச் சேர்ந்த குழு In Flames.

Metal நம் காலத்தின் மிக முக்கியமான, அதே வேளையில் மிக அதிகமான முன்முடிவுகளோடு அணுகப்படும் இசை. காட்டுக்கூச்சலும் கொடூரத் தோற்றங்களும் வன்முறையும் Metal இசையின் அடையாளங்களாக்கப்பட்டுவிட்டன. இதற்கு மிகமுக்கியமான காரணமான, Metal இசையின் ஒரு வகையான Extreme Metal, Norway, Sweden நாடுகளை உள்ளடக்கிய Scandinavian பகுதியிலிருந்து பிரபலமானது.

Led Zepplin, Black Sabbath குழுக்களால் பொது புத்திக்கும், இசைக்கும் எதிர்துருவமாக ஆரம்பித்த Metal இசை, ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு நிறத்தைக் கொண்டது. உதாரணமாக அமெரிக்காவின் ஆரம்ப Metal இசை கட்டற்ற சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இவ்வகையில் Scandinavian extreme metal மிக முக்கியமாகக் கருதியது கிறித்தவ எதிர்ப்பையே. தங்களை ஆயிரம் வருடங்களாக அடிமைப்படுத்திய, தங்கள் பழமையான Norse, Pagan கலாச்சாரத்தை அழித்த கிறித்தவதிற்கு எதிராக, சாத்தானை முன்னிருத்திய Metal இசை இப்பகுதியில் வெளிவரத்தொடங்கியது. ஆனால் அதனோடு நில்லாமல் 90களில், குறிப்பாக Norway நாட்டில், Metal குழுக்களால் நிகழ்ந்தேரிய தேவாலய எரிப்புகளும், சக கலைஞர்களுக்குள் கொலையும், வன்முறையும் Metal இசையின் என்றும் அழிக்கவியலா கரிய பக்கங்கள். இது மட்டுமன்றி இத்தகைய Metal இசையில் தெறிக்கும் கொடிய சாடிசத்தன்மையும், அப்பட்டமான இனவாதமும், இன்னபிறவும் பரிபூரணமாக இவ்விசையைக் கொண்டாடத் தடையாக உள்ளன என்பதை மறுக்கவியலாது.

9b8526858be5bf2099abcf80b39

தான் எரித்த தேவாலயத்தின் படத்தை தனது தொகுப்பின் முகப்பாக வெளியிட்ட Burzum

ஆனால் இவை Metal இசையின் ஒரு பகுதி மட்டுமே. Metal  என்ற மாபெரும் இசையுலகத்தை இவை மட்டுமே அடையாளப்படுத்துவது நியாயமற்றது. Metal இப்படி ஒற்றைப்படையாக அணுகக்கூடிய இசையும் அல்ல. இசையின் தீவிரம் மட்டுமே பொதுவாக, ஆனால் வேறு எந்த வகையிலும் தொடர்பற்ற பல்வேறு சிந்தனை முறைகளைத் தாங்கிய கலைஞர்களையும், களங்களையும் (Scenes) கொண்டது Metal.

குறிப்பாக இந்த நூற்றாண்டின் Metal, வேறெதையும் விட, இசையினை  அதிகமாக முன்னிருத்துகிறது. Prog Metal, Post Metal, Alternate Metal என இன்று முன்னணியில் திகழும் Metal வகைமைகள் இசையை மையப்படுத்துபவை. வறட்டு அதிர்ச்சி மதிப்பீடுகளுக்கு இனி பெரிய இடமில்லை என்றே தோன்றுகிறது. Metal என்ற தனிக்கலாச்சாரத்தின் (Subculture) அங்கத்தினராக இல்லாமல், அதே வேளையில் அனைத்திசை ரசிகனாக (muscial omnivore) Metal இசையை அணுகுபவர்களுக்கு நவீன Metal இசை பல்வேறு அற்புதங்களை அளிக்க வல்லது. இத்தகைய ஒரு அனுபவமே Melodic Death Metal வகைமையும், In Flames இசைக்குழுவும்.

in_flames_wallpaper_no_2_by_addiena

ஒரு இசைரசிகனாக Metal வகைமையின் உண்மையான அடையாளமாகத் தோன்றுவது தீவிரம், நுட்பம், இசைக்கலைஞர்களின் பேராற்றல், குலைவிசை (distorted) இவையே. இந்த அடையாளங்களோடு Melodic இசையைக் கலந்தால் என்ன என்று தோன்றியதன் விளைவே Melodeath வகைமை.இது அவ்வளவு சாதாரணம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் Thankless Job வகையறா. ஏனெனில் இயல்பிலேயே முரணான இரு விஷயங்களைக் கையாளுதலின் சிக்கல் மற்றும் எப்படிப் பார்த்தாலும் Metal தூய்மைவாதிகளுக்கு இம்முயற்சி அளிக்கக் கூடிய வெறுப்பு. ஆனால் Sweden நாட்டின் குழுக்களுக்கு இது முயன்று பார்க்க வேண்டிய இசையாகத் தோன்ற ஒவ்வொரு குழுவாக இந்த இசைவடிவத்தை 90களில் வளர்த்தெடுக்கிறார்கள். அதாவது Death Metal இசைக்கே உரித்தான அதிவேக தாளம்( blast beats), Guitar வாயிலான குலைவிசை, மற்றும் குடலைப்பிரட்டும் அலறற்குரல், இவற்றோடு மெல்லிசைக்காக  guitar harmonies, கோரஸ், சில வேளைகளில் நேரடியான குரல் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். சுருக்கமாகச் சொல்வதானால் முணுமுணுக்கக் கூடிய Metal பாடல்கள் என்று இவற்றை வகைப்படுத்தலாம்.

.At the Gates, Dark Tranqulity, In Flames ஆகிய Sweden நாட்டின் Gothenburg நகரைச் சேர்ந்த குழுக்கள், முறையே Slaughter of the soul, The Gallery, Jester Race ஆகிய மூன்று தொகுப்புகளை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெளியிட்டன. இன்று வரை இவை Melodeath வகைமையின் மிகச்சிறந்த தொகுப்புகளாகக் கொண்டாடப்படுபவை. அந்த இசைக்கான காலம் புற அக சூழலினால் அன்று கனிந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.At the Gates குழுவின் Slaughter of the soul ஒரு கறாரான Melodeath இசை. DeathMetal தன்மையே பிரதானம்.Dark Tranquility குழுவின் The Gallery தொகுப்பு நுட்பமும், சிக்கலான வடிவமும் கொண்ட இசை. இதில் மெல்லிசைக்கும், Death Metal இசைக்கும் இடையில் தத்தளிக்கும் குழுவென்றால் அது In Flames தான். ஆகையினால்தான் இவர்களின் சில பாடல்கள் Pop பாடல்களா என சந்தேகம் வரும் அளவிற்கு மோசமாக உள்ளன. அதே வேளையில் Melodeath வகைமையின் 9th symphony என்று சொல்லத்தக்க பாடல்களும் உள்ளன.

உதாரணத்திற்கு Moonshield என்ற Jester Race தொகுப்பில் இடம்பெற்ற இப்பாடலை எடுத்துக்கொள்ளுங்கள்.

முதலில் மெல்லிசையாக ஆரம்பிக்கும் இரண்டு Acoustic Guitar. பிறகு அதிலிருந்து தொடங்கும் அபாரமான இரு இணைந்த Electirc Guitarகளின் பதம். குழுவின் பாடகர் Anders குரலின் தீவிரம் சேர்ந்து கொள்ள பாடல் ஒரு பிரமாண்டத்தை அடைகிறது. அட்டகாசமான Drums மற்றும் பாடல் வரிகள்.

“Tired of dull ages, I walk the same ground–Collecting the tragedies still–Hollow ambitions in a hollow mind–Carried my cross to the hill–And how I lust for the dance and the fire”

இது போன்ற வரிகளை Anders கர்ஜனையில், Guitarன் பேரிசையில் கேட்பது மிரள வைக்கும் அனுபவம். MelodicDeathMetal இசையின் சாத்தியங்களின் சான்று இப்பாடல்.

Clayman தொகுப்பின் முதல் பாடலான Bullet Ride * பாடலும் இவ்வகையைச் சார்ந்ததே. ஒரு  ஆர்ப்பாட்டமான Electric Guitar பதத்தில் ஆரம்ப்பித்து, வழக்கம்போல Anders குரலின் ஜாலத்தில், Guitar, Drums பேரிசையில் கொண்டாட வைக்கும் பாடல்.  In Flames குழுவிற்கே உரித்தான கச்சிதமான இசை அமைப்பும், தெளிவான Guitar பதங்களும் இப்பாடல் முழுதும், இத்தொகுப்பு முழுதும் நிறைந்திருக்கிறது.

In_Flames_Clayman

இத்தொகுப்பில் மிகமுக்கியமான மாற்றம் என்பது Inflames மெல்லிசைக்கு கொடுக்கும் முக்கியத்துவமே. அது சில பாடல்களைக் கெடுத்து விடுகிறது என்றாலும்,  Under the weak, Satellites and Astronauts போன்ற அற்புதமான பாடல்களைக் கொடுத்திருக்கிறது. இன்னொன்று இத்தொகுப்பில் Keyboard பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது. வழக்கம் போல இதற்கும் பல Metal ரசிகரிகள் எதிர்ப்பு. In Flames குழு ஒரு பேட்டியில் தாங்கள் முதலில் ஒரு Live Music குழு என்று சொல்கிறார்கள். Moonshield பாடலின் ஆரம்பத்தில் இரு Acoustic Guitar பயன்படுத்தப்பட்டதைப் பார்க்கலாம். ஆனால் இதை நேரலையாக வாசிக்கும் போது இந்த பகுதிக்கு Acoustic Guitar வாசித்து உடனடியாக Electric Guitar வாசிக்க மாறுவது இயலாது. எனவே இப்பாடலின் நேரலை வடிவத்தில் முதல் Acoustic பகுதி இடம் பெறாது. இது போன்ற விஷயங்கள் இக்குழுவை வெகுவாக பாதிக்கின்றன. எனவேதான் நேரலையாக வாசிக்க உகந்த வகையில் தங்கள் இசையமைப்பையும் கருவிகளையும் தேர்வு செய்கிறார்கள். Keyboard இடம் பெருவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

இப்படி பல்வேறு காரணகாரியங்களோடு உருமாறியிருக்கும் In Flames இசையின் கடைசி “In Flames தனமான” தொகுப்பு இது என்று சொல்லப்படுகிறது. இதற்கு பிறகு வந்த தொகுப்புகளில் மேலும் மெல்லிசையும், Keyboard பகுதிகளும் பாடல்களை Metal அனுபவமற்றதாக்குகிறது. ஆனால் இப்படி வேறு வகைமைகளுக்குள் செல்வதால் மட்டும் இவர்களைப் பிடிக்காமல் போவது நியாயமாகாது. அப்படிப் பார்த்தால் Melodeath இசையே நிகழ்ந்திருக்காது.

சில தேர்வுகள்

1. Bullet Ride

* குறிப்பில் இடம் பெற்ற பாடல்

2. only for the weak

3. Satellites and Astronauts

தொகுப்பு: Ágætis Byrjun (2000)

குழு: Sigur Ros


மிகப்பெரிய திறமைகளும், இசை விற்பன்னர்களும் நிறைந்த நவீன மேற்கத்திய இசையுலகில், புதிய முயற்சிகளுக்கும், இசை அனுபவங்களுக்கும் பஞ்சமில்லை. எனவே இதில் புதிய என்பது ஒருவகையில் வழக்கமான ஒன்று தான். இல்லாவிட்டால் தான் அதிசயம். இத்தகைய முனைப்பான சூழலில் முற்றிலும் தனித்துவமாக ஒரு முயற்சி அமைந்து அசரடிப்பது மிக உற்சாகமான ஒரு நிகழ்வு. அதுவும் நாம் எதிர்பார்க்கும் குழுக்களும், ஜாம்பவான்களும் புதிய இசைக்காக தவமாய்தவமிருக்கும் போது, விளையாட்டாக (Sigur Ros போல) முற்றிலும் எதிர்பாராத திசையில், வகையில் நம்மை ஒரு இசை கொள்ளை கொள்ளும்போது நேரும் உற்சாகம் அளவற்றது. நவீன இசையின் போக்கில், வல்லமையில் மேலும் நம்மை நம்பிக்கை கொள்ளச் செய்யும் நிகழ்வு.

Sigur ros என்ற இந்த Iceland நாட்டின் குழுவிற்கு எல்லாமே விளையாட்டுதான். அவனவன் தன் குழுவிற்கும், இசைதொகுப்புக்கும் பெயரிட Immanual kant, Occultism, Pagan mythology தொடங்கி மண்டையை உடைத்துக்கொள்ளும் போது, இவர்கள் செய்திருப்பதை பாருங்கள். குழுவின் முன்னணி இசையமைப்பாளரான Jonsi தனது தங்கையின் பெயரை குழுவிற்கு வைத்ததுவிட்டார். Sigur என்றால் Victory, ros என்றால் Rose. Icelandic சொல் என்பதால் Exotic ஆகி தப்பிவிட்டார்கள். தொகுப்பின் முதல் பாடலை ஒத்திகையின்போது கேட்ட ஒருவர், இது நல்ல துவக்கம் என்று சொல்ல அதையே தொகுப்பின் பெயராக்கிவிட்டார்கள். இவர்களின் கொடுமையான ஒற்றைவரி பேட்டிகள் வேறு. மோசமான இசை பேட்டிகள் பட்டியலில் இவர்களுக்குத் தனியிடம் உண்டு.

Sigur_Ros_1378736448288

ஆனால் இவர்களின் Agaetis Bryjun தொகுப்பைக் கேட்டவுடன் எத்தனை குழுக்கள், “இந்த இசையை அடையத்தானே நாம் இத்தனை காலம் மெனக்கிட்டுக்கொண்டிருந்தோம்” என்று புலம்பியிருக்குமோ. 1999ஆம் வருடம் வெளிவந்து Iceland நாட்டில் பிரபலம் பெற்றது இத்தொகுப்பு. பின்னர் வாய்மொழியாகவும், இணையத்தின் மூலமும் வெளியுலகிற்கு தெரிய வந்தது. RadioHeadன் Thom Yorke வியந்து பாராட்ட, பிற பிரபலங்களும் சேர்ந்து கொள்ள, 2001ல் உலக அளவில் மறுவெளியீடு செய்யப்பட்டது. பல்வேறு பட்டியல்களில் இந்த நூற்றாண்டின் சிறந்த தொகுப்புகளுள் ஒன்றாக Agaetis Bryjun கொண்டாடப்படுகிறது.

sigur_ros-agaetis_byrjun-frontal

இந்த தொகுப்பின் Intro இசையை cassette வடிவில் கேட்டிருந்தால் நிச்சயம் tape சிக்கியிருக்கிறதோ என்றுதான் நினைத்திருப்பேன். அப்படி ஒரு துவக்கம். பிறகு Jonsiன் குரல் கொஞ்சம் தெளிய வைக்கிறது. ஆனால் கட்ட கடைசியில் சரியாகத்தான் கேட்கிறோமா என ஆரம்பிக்கும் மணியோசை நிமிரவைக்கிறது. பின்னர் அதுவே தீர்க்கமாக ஒலிக்க, அதனை அடியாகக் கொண்டு முதல் பாடல், Svefn-g-englar. முழு உன்மத்தம். புத்தருக்கு போதி மரத்தடியில் இந்த இசைதான் கேட்டிருக்கும் என்றும், பிரபஞ்ச தோற்ற, முடிவில் ஒலிக்கும் இசை இப்படித்தான் இருக்கும் என்றும் இவ்விசை குறித்து இணையத்தில் ரசிகர்கள் புலம்பக்காணலாம். வேறு வழியில்லை. இசை அதுவும் இது போன்ற இசை தரும் அனுபவங்களை பிதற்றலல்லாமல் எப்படி விவரிக்க. நவீன வாழ்க்கையின் பிசுபிசுப்புகளுக்கு இடையில், வேலையும், அலைச்சலும், மிச்ச மீதியை குடும்பமும் துவைத்து எடுத்த பிறகான ஆயாசத்தில்,வீட்டின் மூலையில், கலைந்து கிடக்கும் அறையில், இரு வளையங்களை காதில் மாட்டிய சில நிமிடங்களில் பிரபஞ்சம் கடக்கும் உணர்வை அளிக்கவல்ல இசையை எவ்வளவு போற்றினாலும் தகும்.

Agaetis Bryjun தொகுப்பின் குறிக்கோள் அலாதியான இசையனுபவமே. இது போன்ற இசையின் சவாலென்பது, ரசிகனை தான் எதிர்பார்க்கும் தளத்திற்கு கடத்துவதும், பிறகு கொஞ்சமும் நகர விடாமல் ஆணியடித்து அத்தளத்தில் அமர வைப்பதுமே. இத்தொகுப்பு இரண்டாம் சவாலில் முழுமை அடைந்திருப்பதாக சொல்ல முடியாது. ஆனால் முதல் சவாலை ஊதித்தள்ளுகிறது. மிக எளிதாக ரசிகனை தான் எதிர்பார்க்கும் மோன நிலைக்கு கடத்துகிறது. இதை சாத்தியமாக்குவது இசையின் அமைப்பபைவிட அதன் ஒலிநயமே. சூழலை உருவாக்கும் eletronic இசை, பியானோ, Jonsiன் பெண்குரல் இதற்கு வித்திடுகின்றன. போதா குறைக்கு விசித்திர கருவிகள் வேறு. Jonsi உபயோகிக்கும் Cello bow guitar எழுப்பும் பேரொலி மிரட்டுகிறது. இவ்வாறான கலவையில் அமைந்த ஒலிநயமே இவ்விசையின் பலம். இதுவே கனவுலக, சூழலிசையின் இந்நூற்றாண்டின் அடையாளமாக Sigur Ros கொண்டாடப்படும் காரணம். பல புனைவு திரைப்படங்களிலும், இயற்கை சார்ந்த ஆவணப்படங்களிலும் Sigur Ros இசை ஒலிக்கும் காரணம்.

Jonsi Birgisson of Sigur Ros Bestival 2012 held at Robin Hill Country Park - Day Four Isle of Wight - 09.09.12 Mandatory Credit: WENN.com

இந்த தொகுப்பு கொடுத்த அனுபவத்தை இதற்கு முன்பு கொடுத்த தொகுப்பென்றால் அது Pink Floyd குழுவின் Dark Side of the Moon தொகுப்பு தான். Pink Floyd உருவாக்கிய Space Rock பாணியிசையின் இக்காலத்தின் நாயகர்கள் என்றே Sigur Ros பற்றி நினைக்கத் தோன்றுகிறது. இந்த இரு தொகுப்புகளும் ஒரு இசையனுபவத்தின் இரு துருவங்களாகவே எனக்குத் தோன்றும். Floyd எதிர்மறையான இசை. வெறுப்பும், பித்தும் தாங்கியது. Sigur Ros இசை நேர்மறையானது. அழகும், தியானமும், விளையாட்டுத்தனமும் நிரம்பியது. இரண்டிற்கும் பொதுவான மாயநிலையே  இரு இசைகளின் கண்ணி. இருவரின் இவ்விரு அற்புத பாடல்களை எடுத்துக்கொள்வோம்.

 

Pink Floyd இசை வியட்நாம் போரின் பின்னணியில், குழுவைச் சேர்ந்தவரின் மனநலமின்மையின் விளைவு. Sigur Ros இசையின் பின்னணி உலகின மிக அழகான, இயற்கை எழில் நிறைந்த Iceland நாடு. எரிமலையும், பனியும், Northern Lights  மற்றும் மிக முக்கியமாக தூய்மையான தண்ணீர் நிறைந்த Iceland. அதன் அற்புத அழகே இத்தொகுப்பெங்க்கும் வியாபித்திருப்பதாகத் தோன்றுகிறது.

எனவே ஒன்று Dark Side of the moon. இத்தொகுப்பு the other glorious side….

சில தேர்வுகள்

1.Svefn-g-englar

2. Staralfur

தொகுப்பு: Bath (2001)

குழு: Maudlin of the well


ஒவ்வொரு இசைக்குழுவும் தட்டுத்தடுமாறியோ அல்லது சில வேளைகளில் படிப்படியாகவோ தனது இசைவடிவின் உச்சத்தை வந்து அடைய கொஞ்சம் காலமாகிறது. ரசிகனுக்கு ஒரு நுட்பமான இசைக்குழுவைச் சரியாகப் புரிந்து கொள்ள இன்னும் காலமாகிறது. இந்த இருவரும் இந்த கடினமான காலகட்டத்தை தாண்டிய பின்னர், ஒரு அருமையான பொற்காலம் இருவருக்கும் அமைகிறது. தனக்கு கைவரப்பெற்ற கலையாற்றலின் உச்சத்தில் குழுவும்,  அதன் மதிப்பு தெரிந்து அனுபவிக்கும் ரசிகனும்  என இருவருக்குமான ஒரு பொற்காலம் அது.

பல்வேறு காரணங்களால் இசைக்குழுக்கள் கலைந்தாலும், ஒரு இசைக்குழு கலைவதற்கு மோசமான காலகட்டம் என்றால் இந்த பொற்காலம் தொடங்க இருக்கும் வேளைதான். தங்களது உச்சத்தை அடைந்த உடனோ அல்லது அதற்கு சற்று முன்பாகவோ, இசைகுழுக்கள் கலையும் போது, அந்த குழுவின் இசைவடிவத்திற்கு பழக்கப்பட்டு, ருசி கண்ட ரசிக மனம், நிகழ்ந்திருக்கக் கூடிய சாத்தியங்களை எண்ணிப் புலம்பாமல் இருக்க முடிவதில்லை. Maudlin of the well இப்படி நடுவழியில் கலைந்த ஒரு இசைக்குழு.

Maudlin of the wellன் முதன்மையான கலைஞர் Toby Driver சிறு வயது முதலே பல்வேறு இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்றவர். இவருக்குத் தெரிந்த இசைக்கருவிகளை விட தெரியாத கருவிகளை கணக்கெடுப்பது எளிதெனத் தோன்றுகிறது. Metal இவருக்குப் பிடித்த வகைமை. 18 வயதில் குழுவை ஆரம்பித்து தொகுப்புகள் வெளியிடத்தொடங்குகிறார். இளரத்தம். புதுமை செய்யாமல் இருக்க முடியுமா? தனக்குப் பிடித்த metal இசையும் தனக்குத் தெரிந்த செவ்வியல் இசையுமென ஒரு கலவையாக இவர்களது இசை ஆரம்பிக்கிறது. முதலிரண்டு தொகுப்புகள் படிப்படியான வளர்ச்சியா, இல்லை தடுமாற்றமா எனத்தெரியவில்லை. ஆனால் Bath ஆரம்பித்த நொடியிலிருந்து தெரிந்து விடும். இது ஒரு மடைதிறப்பானத் தொகுப்பு என்று. இதன் இரட்டைத் தொகுப்பான Leave your body map (இத்தொகுப்பின் அட்டைப்படம் Bath தொகுப்பிலும், அதன் அட்டைப்படம் இதிலும் இருக்கும்) உடன் சேர்த்து ProgMetalல் ஒரு புதிய பாய்ச்சல் என்றே சொல்ல வேண்டும்.

இதற்கு அடுத்த இவர்களின் தொகுப்புகளைக் கேட்க பேராவலாக இருந்த போது இவர்கள் இத்தொகுப்போடு நின்று விட்டார்கள் என்று தெரிந்தது பெரிய ஏமாற்றம்.

16_photo

இத்தொகுப்பிற்குப் பிறகு, பல்வேறு காரணங்களால் மூன்று தொகுப்புகளை மட்டுமே வெளியிட்டு இருந்த இக்குழு Kayo Dot என, பெயர் மற்றும் இசைவடிவத்திலும், மாற்றம் அடைந்தள்ளது. இது நடந்து ஆண்டுகள் ஆனாலும் MOTW குழுவை ரசிகர்கள் மறந்த பாடில்லை. Kayo Dot நிகழ்ச்சிக்குச் செல்லும் ரசிகர்கள் தவறாமல் MOTW பாடல்களை இசைக்க விண்ணப்பிக்கிறார்கள். இது பொதுவாக நடப்பதுதான் என்றாலும் MOTW விஷயத்தில் இன்னும் ஒரு படி மேலாக ஒரு ரசிகர் புதிதாக ஒரு தொகுப்பை செய்ய முழுவதுமாக சொந்த காசை கொடுத்து 2009ல் நான்காவது தொகுப்பை MOTW வெளியிட்டது.

முந்தைய பதிவில் குறிப்பிட்ட Porcupine Tree, (Rock இசையில்) Progressive பாணியை கையாளும் முறை, வழக்கமான ஒன்று. அதாவது ஒரு வகைமையில், பிற வகைமையின் கூறுகளையும், இசைக் கலைஞர்களின் நுணுக்கத்தையும், பாடல்களின் அமைப்பில் மாற்றங்களையும் கொண்டு ஒரு நகர்வை நிகழ்த்துவது. இது அவ்வகைமைக்கு உள்ளிருந்து மாற்றங்களை முயன்று பார்க்கும் செயல். Metalஐ பொருத்தவரையில் Between the Buried and Me குழுவின் Colors இவ்வகையில் பிரமாதமான தொகுப்பு.

MOTW இதற்கு மாறாக Metalஐ அதற்கு வெளியில் நின்று அணுகுவதாகச் சொல்கிறார்கள். இதனை நான் இவ்வாறு புரிந்து கொள்கிறேன். Deadwing, Colors தொகுப்புகளை கேட்டவுடன் இது rock என்றும், இது Metal என்றும் நம்மால் சொல்ல முடியும். அதே நேரத்தில் வழக்கமான Rock, Metal அல்ல என்றும் சொல்ல முடியும். ஏனெனில் அதில் பெரும்பாலும் Rock/Metal கூறுகளே. ஆனால் பிற கூறுகள் ஒரு மாற்றுக் கண்ணோட்டத்தைக் கொண்டு வருகின்றன. ஆனால் Bath தொகுப்பை கேட்பவர்க்கு இது Jazz என்றோ, Indie Folk என்றுதான் தோன்றும். இசைக் கருவிகள், பாடல் முறை இப்படி பலவும் நேரடியாகப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் இவற்றின் மூலமாக அவர்கள் உருவாக்கும் அல்லது உருவாக்க நினைக்கும் சூழலே இதனை Metal ஆக்குகிறது.

Bath_Coverspread_original

முதல் பாடலான Blue Ghost ஒரு நல்ல முன்னோட்டம். பாடல் ஆரம்பிப்பது ஒரு அருமையான Jazz தடத்தில். போதா குறைக்கு Sax வேறு. ஆனால் சுமார் 6.40 நிமிடங்களில் இதே வரியை Electric Guitar வாசிக்கும் போது முதல் மெல்லிசையின் வன்மை புரிகிறது. கிட்டத்தட்ட இதே சிந்தனையினை தொகுப்பு முழுதும் காணலாம். Acoustic Guitar, Sax, Keyboard இவற்றில் மெல்லிசையாக ஆரம்பித்து வல்லிசையாக electric guitar, Drums பாடலைக் கடத்துகிறது. ஆனால் முன் பாதியில் வரும் Jazz பாணியிலான பகுதி பெரும்பாலும் ஒரு வன்மையும், பதட்டத்தையும், அசாதாரண அமைதியும் கொண்ட பகுதி. பாய்ச்சலுக்கு முன்பான பதுங்குதலைப் போல. இதுவே ஒரு கனத்த சூழலை உருவாக்க, Metal கூறுகள் அதை நிறைவு செய்கின்றன. இந்த தொகுப்பின் பிரபலமான பாடலான Heaven and Weak இதற்குச் சிறந்த உதாரணம்.

சில விதிவிலக்குகளும் உண்டு. ஒரு முழு தாலாட்டுப்பாடல் உட்பட. Metal தொகுப்பில் என்னவெல்லமோ கேட்டு இருந்தாலும், இது ஒரு உலக சாதனைதான்(இதையெல்லாம் எப்படி தைரியமாக metal நிகழ்ச்சிகளில் பாடினார்களோ!!).

இந்த தொகுப்பைக் கேட்கும் போது இது வழக்கமான வகையில் உருவாக்கம் அடைந்திருக்கும் என்று தோன்றியது. அதாவது ஒரு மைய இசைவரியை வைத்துக்கொண்டு, கலைஞர்கள் நிகழ்த்திய(impromptu) இசையாகத் தோன்றியது. Jazz பாணியிலான சுதந்திரம் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்பட்டதாகத் தோன்றியது. ஆனால் இவர்கள் பேட்டியில் இது முழவதுமாக  இசைஅமைக்கப்பட்டதாகவும், கொஞ்சம் கூட பதிவின் போது மாற்றப்படவில்லை என்றது நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

பொதுவாகவே மேற்கின் இசைக்குழுக்களின் சித்தாந்தங்கள் விபரீதமாக இருக்கும். இந்த இசைத்தொகுப்பை செய்ய Astral Projections, Lucid Dreams போன்றவற்றை இவர்கள் சொன்னார்கள். சொன்னார்கள் எனச் சொல்லக்காரணம் இது பற்றி இப்போது கேட்டால் Toby Driver சிரிக்கிறார். ஆமோதிக்கிறாரா, மழுப்புகிறாரா தெரியவில்லை.

இத்தொகுப்பின்,ஏன் MOTW இசையின், உச்சமாக எனக்குத் தோன்றும் Girl with a Watering Can பாடல், முதல் பாடலின் இசையோடு ஆரம்பிக்கிறது. பிறகு வரும் பெண் குரல் தெய்வீகம் (Maria Stella Fountoulakis). ஆனால் அது முடிந்தவுடன் Toby Driver குரலில் ஒரு பகுதி வருகிறது. இதைக் கேட்கும் போது Toby இது Astral projection, Lucid Dreams என்ன, கடவுள் தோன்றினார் என்றாலும் நான் தலையாட்டவே செய்வேன்.

சில தேர்வுகள்:

1. Girl with a watering can

2. Heaven and Weak

[

குழு குறித்து:

Toby Driver (front man), Jason Byron, Massi போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இக்குழு மேற்குறிப்பிட்டது போல தற்சமயம் Kayo Dot ஆக உருமாற்றமடைந்துள்ளது. Bath தொகுப்பின் மூலம் தனது இருப்பை என்றென்றைக்குமாக நிறுவியுள்ளது.

தொகுப்பு: In Absentia (2003)

குழு: Porcupine Tree


Progressive Rockன் பொற்காலம் 1960s,1970s தான். King Crimson, Yes, ELP, Genesis என இவ்வகைமையின் முக்கிய கலைஞர்கள் கோலோச்சிய காலம் அது.

ஒவ்வொரு வகைமையும் அதற்கு முன்பிருந்த பாணியின் போதாமைகளைக் கொண்டே உருவாகிறது, நிலைபெறுகிறது. தனக்கே தெரியாமல் தன்னிலும் ஒரு போதாமையை உருவாக்கி விடுகிறது.

Classical Rock இசையின் வெகுஜனத்தன்மை, கலையம்சத்தின் போதாமை – இவையே Progressive Rockன் மூலாதாரம். ஆனால் இதன் ஆரம்பங்கள் Classical Rock குழுக்களான Beatles, BeachBoys போன்றோரிடமும் இருந்தன. இக்குழுக்களும் தங்களது இசையினை மேலும் நுட்பமாக்கவும், psychedlic போன்ற அசாதாரண உணர்வு நிலைகளை வேண்டியும் தங்களது இசையில், அணுகுமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வரத்தொடங்கின. Sgt Pepper, Pet  Sounds போன்ற தொகுப்புகள் இந்த போக்கை ஆரம்பித்து வைத்தன.

Classical Rock இசையின் வெகுஜனத்தன்மைக்கு மாற்றாக, கலையம்சமமும், இசைநுட்பமும் முதன்மையாகக் கொண்டு வெளிவந்த Rock இசையே Progressive Rock என்றழைக்கப்பட்டது. இசைவடிவத்தில், தாளஅமைப்பில், வித்தியாசமான கருவிகளின் சேர்ப்பில், பாடல் வரிகளில், உணர்வுகளில், வாத்தியக்கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தில் என சிக்கலாகவும், புதிராகவும், ஆழமாகவும் Rock இசை ProgRockஆக உருமாறியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இம்முயற்ச்சிகள் ஆரம்பித்தாலும் King Crimsonன் In the court of King Crimson கரைகளை உடைத்த தொகுப்பு.  பிறகு ProgRock இசையின் பொற்காலம்.

Prog-rock-Jiro-Bevis-006

பிறகு இந்த நுட்பமே அளவுக்கு மீறி நஞ்சாகி ProgRockன் வீழ்ச்சிக்குக் காரணமானது. நுட்பம் என்ற பெயரில் பம்மாத்து முதன்மையானது. இசையமைப்பு ஏதுமின்றி பாடல்கள் நீண்டுகொண்டே இருந்தன. வெகுஜனஇசை ரசிகர்களைக் குறி வைத்து செய்யும் கேலிக்கூத்துகளுக்கு கொஞ்சமும் குறைவின்றி ProgRock குழுக்கள் நடந்து கொண்டன. தங்களைச் சுற்றி மாய பிம்பங்களை, தொகுப்புகளைச் சுற்றி வெற்றுப் புதிர்களை கட்டமைத்து ஒரு போலியான அறிவுஜீவித்தனத்தை வளர்த்தெடுத்தன. இந்த மேட்டிமைத்தனத்திற்க்கு எதிராக உருவான கலாச்சாரம் Punk Rock  இசையாகி ProgRock அலையை முடிவுக்குக் கொண்டுவந்தது.

ஆனாலும் காலம் ProgRockஐ மறக்கவில்லை. தற்போது நாம் ஒரு ProgRockன் மறுமலர்ச்சி காலத்திலிருக்கிறோம் என்றே சொல்லலாம். தினமும் ஒரு புதிய தொகுப்பு இவ்வகைமையில் வெளிவருகிறது. ProgRock முன்னிருத்தும் நுட்பமும், சுதந்திரமுமே இந்த கவர்ச்சிக்குக் காரணம்.

இத்தகைய மறுமலர்ச்சிக்குக் காரணமான குழுக்களுள் முதன்மையானதாக Porcupine Treeஐ சொல்லலாம். Porcupine Tree தொகுப்புகளுள் முக்கியமானதாக In Absentia என்ற இத்தொகுப்பைச் சொல்லலாம்.

ProgRock தவிர பிறிதொன்றை Porcupine Treeன் முதன்மையாளரான Steve Wilson செய்ய வாய்ப்பே இல்லை. ஏனெனில் 80 களில் இசை கேட்கத்தொடங்கிய Steve Wilsonனுக்கு கனவுலகமாகத் திகழ்ந்தது 60,70 களின் ProgRock இசையே. ஆனால் அவர் இசைக்க வரும் 90 களிலோ அது காணாமல் போன ஒன்று. அதனை மீட்டெடுக்கும் முயற்ச்சியில் தனியாகவும், குழுவாகவும் தொகுப்புகளை செய்து வந்த Steve Wilsonனுக்கு வெற்றியாக அமெரிக்காவின் பிரபலமான Lava Records இசைத்தொகுப்பு வெளியிட முன்வந்து In Absentia உருவானது.

porcupine tree

ஆனால் Lava Recordsஐ விட இந்த தொகுப்பினால் விளைந்த இன்னொரு கூட்டணி மேலும் முக்கியமானது. அது குழுவிற்கு புதிதாகச் சேர்ந்த Drummer Gavin Harrison தான். முதல் முறை அவர் வாசித்ததை கேட்டு குழுவே பரபரப்பானதாகவும், எல்லோரும் தங்கள் வாசிப்பற்றலை ஒரு படி உயர்த்திக்கொள்ள வேண்டி இருந்ததாகவும் Wilson குறிப்பிடுகிறார். சிக்கலான தாளஅமைப்புகள், வேகம், துல்லியம், இவற்றிற்கு ஊடே மிக மென்மையான கீற்றுகள் என Gavin நிகழ்த்தும் அற்புதம் நிச்சயமாக நவீன காலத்தின் தலைசிறந்த Drummerகளில் அவரை ஒருவராக்குகிறது. Steve Wilsonன் கற்பனை வளமிக்க Guitar சேர்ந்து கொள்ள இந்த தொகுப்பு நம்மை 70 களின் பொற்காலத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது.

ProgRock சட்டப்படி இதுவும் ஒரு Concept Album. In Absentia என்று எந்த இல்லாமயைக் குறிக்கிறது என்பதற்கு ஒரு பேட்டியில் Wilson ஆன்மா என்று குறிப்பிடுகிறார். பாடல்களும் கொலையாளிகள், குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றவாளிகள் அவர்களது மனப்பிறழ்வு குறித்து இருப்பதால் இத்தொகுப்பு ஆன்மாவை இழந்தவர்கள் பற்றியதாகிறது.

In the Absentia

இந்த தொகுப்பில் குறிப்பிட வேண்டிய இன்னொன்று இதில் வரும் Metal Guitar பகுதிகள். இந்த காலகட்டத்தில் தான் Steve Wilson மற்றும் Opeth குழுவின் முதன்மையாளரான Mikael Akerfeldt, இருவரின் நட்பும் உருவாகத் தொடங்கியது. அதன் பாதிப்பை நாம் இத்தொகுப்பில் தெளிவாகக் காணலாம்.

இவை போக தொகுப்பு முழுதும் Steve Wilsonனின் முத்திரைகள் நிரம்பி வழிகின்றன. அருமையான வாத்திய பகுதிகள், வசீகரமான chorus பகுதிகள், Keyboard பகுதிகள், Pink Floyd பாணியிலான Space Rock, புத்திசாலித்தனமான துவக்கங்கள் மற்றும் மடைமாற்றுகள் என ரசிக்க குறைவில்லாத் தொகுப்பு.

இந்த தொகுப்பின் பலத்தையும், பலவீனத்தையும் Trains என்ற ஒற்றைப் பாடலிலேயே கண்டு கொள்ளலாம். பாடல் Acoustic Guitarல் ஆரம்பிக்கிறது. ஆனால் வெகு நவீனமாக, மிக எளிமையாக. பிறகு Steve Wilson இரண்டு வரிகள் பாடுகிறார். வழக்கம் போல மிகச் சாதாரணமாகப் பாடுகிறார். பல அருமையான விஷயங்கள் இருப்பதால் Wilsonன் பாடலை மன்னிக்கலாம். ஆனால் குரல் பகுதிகளை மட்டுமே கேட்கும் ஒருவர் இது ஒரு Teenage Boy Band என்று நினைக்கக் கூடும். குரல் முடிந்ததும் ஒரு மிதப்பான Heavy Guitar. குரலும், Drums சேர்ந்து கொள்ள ஒரு நல்ல பாடலாகிற்து. இடையில் Guitarன் `அழகான தனி ஆவர்த்தனம். பிறகு மீண்டும் பாடல், ஒரு நல்ல Chorus. பிரமாதமாகப் போய் கொண்டிருக்கும் பாடலில் மகுடம் சூட்டினாற் போல சுமார் 3.20 நிமிடங்களில் அத்தனையும் நின்று ஒரு கைத்தட்டல், Banjo இசை. இதை முதல் முறை கேட்ட போது அசூயையிலிருந்து பரவசமாக மாறியதை மறக்கவே முடியாது. இது எப்படி சம்பந்தமில்லாமல் நுழைந்தது, ஆனால் பாடலின் ஜீவனாகியது, எப்படி இத்தனை நுட்பதிற்கு நடுவில் இந்த எளிமை நம்மை மெய்மறக்கவைக்கிறது, இத்தனை நவீன கருவிகளுக்கு இடையில் Banjos தோரணையாக வருகிறது என நினைக்க வியப்பளிக்கும் பகுதி இது.

இத்தகைய தருணங்களால் ஆனதே Porcupine Treeன் இசை.

சில தேர்வுகள்:

1. Trains

மேற்கூறிய பாடல்

2. The sound of Muzak

அசாதாரணமான ஆனால் Porcupine Tree குழுவிற்கே உரிய தாள மற்றும் Guitar இசை. “One of the wonders of the world ..going down”  என்ற தற்கால இசை குறித்த விமர்சன வரி அருமையான Chorus ஆகி அக்கருத்தை நிராகரிக்கிறது.

குழு குறித்து:

தனது இசைக்கான இன்னொரு தளமாக Steve Wilson 1992ல் இக்குழுவை ஆரம்பித்தார். Edwin (Bass), Barbieri (Keyboard), Harrison (Drums), Wilson (Guitar, song writing) என்ற நால்வர் குழுவாக இதுவரையில் பத்து ஆல்பங்களும் பிற வெளியீடுகளும் வந்துள்ளன. Steve Wilson தனியாக பல்வேறு முயற்ச்சிகளையும் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இது தவிரவும் பல முக்கியமான குழுக்களுக்கு இவர் இசை தயாரிப்பாளராக. தனது ஆதர்சமான 70 களின் கலைஞர்களோடும் சேர்ந்து பணியாற்றுகிறார். ஒரு இயக்கமாகவே திகழ்கிறார் Steve.

Steve Wilson இந்தியாவிலும் கொஞ்சம் பிரபலம். 2009ல் இந்தியாவில் இவரது இசை நிகழ்ச்சி நடந்தது IIT Mumbaiல். மேலே குறிப்பிட்ட Sound of Muzak அந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல்களுள் ஒன்று.

தொகுப்பு: The Mantle (2002)


தொகுப்பு: The Mantle (2002) குழு: Agalloch


Agalloch என்ற  இக்குழு, தெற்கு ஆசிய நாடுகளில் (இந்தியா உட்பட) அதிகமாக காணப்படும் Agallochum (நம் அகர்/அகில் மரம்) மரத்தின் பெயரைத் தமது பெயராகக் கொண்டுள்ளது. நறுமணம் கமழும் மரத்தோடு தங்களது இசையை அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது என இவர்கள் சொல்வது அதீதமாகத் தோன்றினால் அது “The Mantle” என்ற இந்த தொகுப்பை கேட்கும் வரையில் மட்டுமே. The Mantle WP

இந்த குழுவிற்கு கோபம் வரவைக்கும், ஆனாலும் ஒவ்வொரு பேட்டியிலும் தவறாமல் கேட்கப்படும் கேள்வி இதுதான். “உங்களது இசை எந்த வகைமையைச் சார்ந்ததாக கருதுகிறீர்கள்?” கேள்வி கேட்பதிலும் ஒரு நியாயம் இருக்கிறது.

The Mantle என்ற இந்த தொகுப்பு Ambient metal, doom metal, neofolk, atmosphericfolk, black metal, darkneofolkmetal, apocalyptic என பலதரப்பட்ட வகைமைகளில் விமர்சகர்கள், ரசிகர்களால் பந்தாடப்படுகிறது. எந்த வகைமையிலும் முழுதாக அடங்காத, அதே வேளையில் எல்லாவற்றின் கூறுகளையும் கொண்டுள்ள இந்த தொகுப்பின் இசைமொழியே இதற்குக் காரணம். சரி அவர்களிடமே கேட்டுவிடுவோம் என பேட்டி காண்பவர்கள் நினைக்கிறார்கள்.

Agalloch கோபப்படுவதிலும் நியாயம் இருக்கிறது. ஏனெனில் வகைமைப்படுத்துவது என்பது ஒரு வசதிக்காகவே என்பதைத் தாண்டி, வகைமையின் குறுகிய சட்டகத்திற்குள் நின்று கொண்டு விமர்சிக்கும் போக்கு  இக்குழுவிற்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது. எடுத்துக்காட்டாக இதில் guitar இசை அதிநுட்பமாக இல்லை என்ற சிலரது விமர்சனம், ஏன் இருக்க வேண்டும் என்ற எதிர்கேள்வி பற்றி யோசிக்காமல் வைக்கப்படுகிறது. இந்த விமர்சனம் காலம் காலமாக நுட்பமான guitar இசையே பிரதானமான Metal வகைமையில் ஊறிய ரசிக, விமர்சன மனதிலிருந்தே வருகிறது. இது ஒரு metal தொகுப்பு என்ற அடிப்படைத் தவறைச் செய்த பின்னர்.

இருக்கும் கோட்டைகளைக் கலைத்து புதிதாய் செய்வது, கலைஞர்களுக்கு எளிதாக இருக்கிறது.ரசிகர்கள் தான் திண்டாடுகிறார்கள்.

எனில் இதில் Metal இல்லையா, Folk இல்லையா என்றால்: இருக்கிறது. ஆனால் இவை இருப்பதற்கான காரணமே வேறு.அணுகுமுறையும் வேறு. இதை பின்வருமாறு புரிந்து கொள்கிறேன்.

இந்த இசையைக் கேட்டதும், இது ஐரோப்பிய இசை அதுவும் நார்டிக் இசை என பழகியவர்கள் கண்டுபிடித்து விடலாம். அது தவறு. ஆச்சர்யமான விஷயம் இவர்கள் அமெரிக்க குழுவினர். அமெரிக்காவில் இவ்வகை இசைக்குழுக்கள் அரிது. அமெரிக்காவின் மிக அழகிய இயற்கைப் பிரதேசம் என இவர்கள் கருதும் இவர்களின் சொந்த ஊரான Portlandஐ அதன் இயற்கையை பெரிதும் நேசிப்பவர்கள் இக்குழுவினர். மனித இனம் அடிப்படையில் சுயஅழிவிற்கான இனமாகவும், உலகின் நோயாகவும் கருதும் இவர்கள், இதிலிருந்து தப்பும் வழியாக இவர்கள் பாஷையில், “இந்த இனத்தால் வெளிரிப்போன ஒப்பற்ற தோழனான”, இயற்கையை வழிபடுகிறார்கள். இந்த உணர்வு நிலைகளைத்தான் இசையில் வெளிப்படுத்த முயல்கிறார்கள். 1781867_10152206414388606_561791592_n

ஆனால் இது போன்ற பார்வைகள் பலரில், அதுவும் Metalல் எளிதாகக் காணக்கிடைக்கும் பார்வைதான்.”The Mantle”ன் தனித்துவம், இந்த தொகுப்பு பெற்ற வெற்றி, இத்தனை ஆண்டுகள் பின்னரும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு மைல்கல் தொகுப்பாகத் திகழும் காரணம், இந்த பார்வைகளை இவர்கள் இசையில் கடத்திய விதமே. இன்னும் குறுக்கினால் இந்த உணர்வுகளை இசையாக மொழிபெயர்க்க இவர்களுக்கு சாத்தியமாயிருக்கும்,தொனியும் ஒலி நயமுமே (Tone and Texture).

இது எப்படி சாத்தியாமனது என்பதற்கு Agallochன் அணுகுமுறையைத் தான் சொல்ல வேண்டும். எல்லா குழுக்களையும் போல தங்களை பாதித்த இசைக்குழுக்களைப் பற்றி சொன்னாலும் (Ulver, Swans, Godspeed you Black Emperor,Katatonia, Nephilium, Sol Invictus, Death in June..என வாயைத் திறந்தால் ஒரு நூறு குழுக்களை அடுக்குவார்கள்), Agalloch தங்களது முதன்மையான பாதிப்பாகச் சொல்வது சினிமாவைத்தான். இந்த தொகுப்பில் கூட The Hawthorne Passage என்ற பாடலில் Bergmanன் The Seventh Seal படத்தின் புகழ் பெற்ற துவக்க வசனமான “Who are you – I am Death” இடம்பெற்றுள்ளது. Bergman, Jodowrsky, Tarr, Bava, Jarmusch, Tarkovsky, Lynch போன்ற இயக்குனர்களை ,  பேராசிரியர்களாகவும், அவர்கள் தரும் படிமங்களையும், சித்திரங்களையும் தங்களது மிகப்பெரிய பாதிப்பாகவும் குறிப்பிடுகிறார்கள். இதன் தொடர்ச்சியாகவே, இவர்களின் பார்வைகள் சார்ந்த ஒரு படிமத்தொகுதியாகவே இத்தொகுப்பு விளங்குகிறது. எனவேதான் இதில் நுட்பாமான Guitarக்கு வேலையிலலை. Agallochன் குறிக்கோள் படிம மற்றும் உணர்வு நிலை இசையே. அதற்குத் தேவையான இசைமொழியை வடிவமைக்க வாத்தியங்கள், வகைமைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்த தொகுப்பில் ஒவ்வொரு வாத்தியத்தியமும் வகைமையும் ஒரு பிம்பத்தையோ அல்லது உணர்வு நிலையையோ குறிக்கிறது.

Portlandன் பனிபெய்யும் கானகத்தை சில்லிடும் Acoustic Guitar இழைஇழையாக வடிக்கிறது. இவ்வகை Acoustic Guitar – NeoFolkன் கூறு.

கொடிய மனிதனையும், வெளிரிய இயற்கையையும் அலறற்குரல் குறிக்கின்றது. இவ்வகை அலறல்- Metalன் கூறு.

இந்த சூழலின் பதைபதைப்பை, தீவிரத்தை Drums நிலைக்கச் செய்கிறது. இது Doom, Ambient இசையாகிறது.

Minimalistic கதியில் இப்படிமங்களின் நகர்வு.. இப்படி மொத்த சித்திரத்தை வரைய வண்ணங்களே ஒவ்வொரு வாத்தியமும், வகைமையும். Accordion, Mandolin,trombone என ஒவ்வொரு வாத்தியத்திற்கும் தொகுப்பில் இடம் இருக்கிறது. The Lodge பாடலின் ஆரம்பத்தில் செவிகளுக்குள் கூழாங்கல்லை எறிவது போன்ற ஒரு சத்தம் வருகிறது. அருமையான Production Job என்று நினைத்தால், அந்த சத்தத்தை ஒரு மானின் மண்டையோட்டில் தட்டி உருவாக்கினார்கள் என பிறகே தெரிந்தது. agalloch

இந்த  உழைப்பும்,எண்ண ஒட்டங்களும், நேர்மையும் தொகுப்பில் நிதர்சனமாகத் தெரிகிறது.

Agalloch இக்கலவையான இசையின் மூலம் நம்மை Portlandன் பனிபெய்யும் கானகக்தில் நிறுத்தி விடுகிறார்கள். Agalloch எதிர்பார்த்தது இதைத்தான். ஆனால் அதற்கும் மேலாக இக்கலவையான இசைமொழி சிலவற்றை சாதித்திருக்கிறது. அந்தந்த வகைமையை ரசிப்பவர்களுக்கு முழுமையான நிறைவளிக்கவில்லையெனினும், அவர்களை பிற வகைமைகளுக்கு செவி சாய்க்க வைத்திருக்கிறது.பல ரசிகர்கள் தாங்கள் Metal இசைக்குள் நுழைய “The Mantle”ஐ காரணமாகச் சொல்கிறார்கள். இது போன்ற கலவையான இசைமொழி பொதுவாக, இசை மற்றும் வாத்திய நுட்பத்தில் சிறப்பாக இருக்கும். ஆனால உணர்வு ரீதியான ஒற்றைத்தன்மையைத் தருவது அரிது. ஏனெனில் வகைமைகள் தங்களுக்குள் தன்னியல்பான ஒரு உணர்வுநிலையைக் கொண்டுள்ளன. Agallochன் மிகப்பெரிய சாதனை இந்த தொகுப்பின் பல்வேறு விஷயங்களை ஒற்றை உணர்வுநிலையில் கட்டியமைத்த வித்தைதான்.

அதுவே இத்தொகுப்பை சாசுவதமாக்குகிறது.

சில தேர்வுகள்:

1. The Lodge மானெலும்பின் அதிர்வு, பிறகு ஒரு பூட்ஸ் சத்தம், பிறகு Acoustic Guitar…

2. I am the wooden Doors பேசும் ட்ரம்ஸிற்காகவும், 2.30 நிமிடங்களில் திடீரென மெல்லிசைக்குள் புகுந்து வெளியேறும் ஜாலதிற்காகவும்.

3. In the shadow of our pale companion

குழு குறித்து Agalloch முன்பே சொன்னது போல Portland, Oregonஐ சேர்ந்த இசைக்குழு. John Haughm தான் முதன்மையாளர். இத்தொகுப்பில் வரும் metal குரலுக்கு சொந்தக்காரர். இவரோடு Jason Walton, Anderson இணைந்துள்ளனர்.  Haughm ஒரு graphic designer, Anderson ஒரு இலக்கிய பேராசிரியர். இப்படி வேறு பட்ட பிண்ணயில் வரும் பரந்த அனுபவங்கள் இக்குழுவின் பலம். The Mantle மூலம் கொஞ்சம் வெளிச்சத்திற்கு வந்த  இக்குழு இது வரை 5 தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறது. இலக்கியம், சினிமா, ஓவியம், இயற்கை இவை கலந்த அனுபவமே.தங்களது இசை என்கிறது இக்குழு.

தொகுப்பு: Downtown battle mountain (2007)

 


குழு: Dance gavin dance


நவீன மேற்கத்திய இசையின் முதன்மையான அடையாளங்களில் ஒன்று இரைச்சல்.

இசை என்றாலே ஒலிகளின் இசைதல், இனிமை என்ற நேர்கோடான சிந்தனைக்கு மாற்றாக ஒவ்வாமையை, இரைச்சலை நவீன இசை முன்னிறுத்துகிறது. இது எல்லாவற்றையும் புரட்டிப்பார்க்கும் மனிதகுணத்தின் முயற்ச்சியாக ஆரம்பித்தாலும், இரைச்சல் மிக இயல்பான இசைமொழியாக மாறியிருக்கும் காலமிது. இனிமை இயல்பற்றதோ என சந்தேகம் வரும் அளவிற்கு.

இரைச்சலை பிரதானமாக கையாளுபவை Rock, Punk(Hardcore), Metal போன்ற வகைமைகளும் இவற்றின் உபகிளைகளுமே. இதில் ஒன்றான PostHardcore வகைமையினை வரையறுக்கும் குழுக்களுள் ஒன்றாக முக்கியத்துவம் பெறுகிறது DanceGavinDance இசைக்குழு. இந்த குழுவின் தனித்துவம் என்பது, நம்மை மண்டை காயவைக்க கூடிய இரைச்சலை, இவ்வளவு கொண்டாட்டமான பேரனுபவமாக மாற்ற முடிந்ததே. இதற்கு காரணமான இவர்களின் இசைமொழி, முந்தைய தொகுப்புகளில் உருவாகத்தொடங்கி, Downtown battle mountain என்ற இந்த தொகுப்பில் தான் முழுமை அடைந்திருக்கிறது.

ql9zg_802420364

இந்த தொகுப்பின் இசைமொழி Screamo பாணியின்படி, இரு கூறுகளாலானது. ஒன்று ஒவ்வாமையை உண்டாக்கும் முரணிசையும், கூச்சலும். மற்றொன்று அதை சமன்படுத்தும் சீரான குரல். இப்படி ஒழுங்கையும், ஒழுங்கின்மையையும் வண்டி வண்டியாக கையாளும் பாடல்கள் நியாயமாக நம்மை அயர்வடையச்செய்ய வேண்டும். ஆனால்  இசையமப்பும், கலைஞர்களின் ஆற்றலும் நம்மை மேலும், மேலும் நிலைகுலையவே வைக்கின்றன. dancegavindance2014

இந்த தொகுப்பின் பங்களிப்பை குறித்து பார்க்கையில், Mingusன் Drums கச்சிதமாக, துருத்தாமல் அதே வேளையில் தேவையான தீவிரமும்  கொண்டுள்ளது. தொகுப்பின் முதுகெலும்பாக Will Swan, Sullivan கூட்டணியின் கற்பனையும், வேகமும், துல்லியமும் கலந்த guitar இசை. John messன் வறட்டுக் கூச்சல் உணர்வற்றதாக குறைசொல்லப்பட்டாலும் அவருடைய கூச்சல் Rap Vocals போன்று ஒரு தாளகதியைத் தருகிறது. Drums, Guitar, கூச்சல் சேர்ந்து செவியையும், உணர்வுகளையும் அலைகழிக்க, கிடைத்த வாய்ப்பில் புகுந்து விளையாடுகிறார் தொகுப்பின் நாயகன், Jonny craig.

Jonny craig போன்ற RnB பாணியிலான பாடகர்(சில இடங்களில் ஜாக்சனை நினைவூட்டுகிறார்), இந்த வகைமையில் பொருந்தும் ரசவாதம் ஒரு அதிசயந்தான். கீழ், மேல் தொனிகளில், மென்மையும், உற்சாகமும், உணர்ச்சிப்பெருக்கும் கலந்து craig பாடுவது ஒரு மாயாஜாலம்.இந்த தொகுப்பை அற்புதத்தில் இருந்து இணையற்றதாக மாற்றுவது சந்தேகமின்றி Jonny Craigன் குரல் தான்.

தொகுப்பில் மொத்தம் 11 பாடல்கள்.எந்த அறிகுறியும் இன்றி திடீரென துவங்கும் அடைமழையின் ஆரம்ப தூறல் போன்ற ஒரு அறிமுக இசை. அறிமுக இசை முடிந்தவுடன் அதன் சரடைப் பிடித்து, பொட்டில் அறைவது போன்ற guitar இசையில், முதல் பாடல் தொடங்குகிறது. “But now you know that I am cold” என்று Jonny Craig ஆரம்பிக்கும் போது நாம் ஒரு  ராட்டினத்தின் தடுப்பு கம்பிகளை பற்றிக் கொள்கிறோம். அங்கு துவங்கி, ஒரு நொடி இடைவெளியின்றி, பற்றிய பிடி சிறிதும் விலகாமல், கேட்பவரைத் தனக்குள்  சுருட்டிக்கொள்கிறது இந்த தொகுப்பு.

Posthardcore எல்லாவற்றையும் பார்த்தாகி விட்டது என்று நினைத்த போது, DowntownBattleMountain ஆச்சர்யப்படுத்தியது. தனது தனித்துவமான இசைமொழியினால் இந்த தொகுப்பு தனக்கென ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறது.

சில தேர்வுகள்:

1. And I Told Them I Invented Times New Roman Johny Craigன் மாயம். அட்டகாசமான பாடல். தொகுப்பின் முதல் பாடல்.

2.”Turn Off the Lights, I’m Watching Back to the Future” John messன் கூச்சலும் Guitarம் சேர்ந்து உருவாக்கும் ஒரு மதிமயக்கும் அனுபவம். ‘

இசைக்குழு குறித்து Dance Gavin Dance என்ற இந்த குழு உண்மையில் யார்தான் Dance Gavin Dance என்று கேட்கும் அளவிற்கு (தர்மத்துக்கு சண்டையிட்டுக் கொண்டு) குழுவின் உறுப்பினர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். Will Swan தான் இதனை நிருவியவர். முதன்மை guitarist மற்றும் song writer. இவருடன் Matt Mingus, John Mess இருவரும் பெரும்பாலும் இணைந்துள்ளவர்கள். மொத்தம் 5 தொகுப்புகள் இது வரையில். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த இக்குழு, இந்த பாணியில் மிக அரிதாகி வரும் சுயமான குழுக்களுள் ஒன்று.