மாஃலரின் சிம்ஃபொனி – இறப்பும் இருப்புமான குழப்பமற்ற தெளிவின்மை

“நாற்றிசையும் நீளும் கதிர்கொள்ளிகள் நடுவே அணையாது எரியும் பரிதி இருள்” – சாவு (பிரமிள்)


மாஃலரைப் (Gustav Mahler 1860-1911) போன்ற இசைஞரின் உலகிற்குள் முழுவதுமாக சென்றடைதல் எவ்வாறு அல்லது எப்போது கைக்கூடுகிறது?


மிகச்சிறந்த இசைஞர்கள் சிறிது சிறிதாக கட்டியெழுப்பும் தனித்துவமான நுண்ணுலகம் நாளடைவில் கிட்டத்தட்ட தூலமானதாகிவிடுகிறது. அழகியல், வடிவமைப்பு, ஒலிநயம் என இசைமொழி துவங்கி, அதன் அகவெளிக்குள் நுழைவது என்பது ஒரு வேற்றிடத்திற்கு குடிபெயர்ந்து பழக்கப்படுவதைப் போன்ற சிக்கல்களையும் சுவாரசியங்களையும் கொண்டது.

சில இசையுலகங்களில் இந்த குடிபெயர்வு எளிதாக சாத்தியமாகிறது (பிராம்ஸ், பீத்தோவன், ஷூபர்ட் போன்றோர்). வேறு சிலவற்றில் முரண்டு பிடித்தாலும், இசைமொழி பழகப்பழக நாம் ஒருவழியாக வந்தடைகிறோம்(சாஷ்டகோவிச், க்ளாட் டபூசி போன்றோர்). ஆனால் சில இசையுலகங்களின் திரை நகர, அதற்கென பிரத்யேகமான கேள்வித்தருணம் வாய்ப்பது அவசியம் போலும்.

உதாரணமாக மாஃலரின் முதல் சிம்பொனியை எடுத்துக் கொள்வோம். இதைக் கேட்கும் போது, பொதுவாக என்ன அனுபவம் கிட்டுகிறது?

  1. இதில் நமக்கு பீத்தொவன், மொஸார்ட், ஷூபர்ட் போன்றோரிடம் உடனடியாகக் கிட்டும் பாடத்தக்க பதங்கள் இல்லை (Singable/Cantible melodies). முழு சிம்பொனியிலும் ஒருசில வரியாவது மனதில் தங்குமா என்பது சந்தேகமே.
  2. நம் மனதில் தங்குவதற்கு மாஃலர் மெனக்கிடுவது மாதிரியும் தெரியவில்லை. பெரியளவில் மீள்பதங்கள் இல்லை (repetition of melodies). பிறகெங்கே பதிவது.
  3. இதில் நீங்கள் டபூசி, அல்லது ஷூன்பர்க் போன்றோரின் வித்தியாசமான இசைமொழியைக் கேட்கவில்லை. ஒரு வழக்கமான மேற்கத்திய சேர்ந்திசையே கேட்கிறது. எனவே உடனடி சுவாரசியமும் கோரவில்லை.
  4. திடீரென பேரொலியும், உடனே தொடரும் மிகச்சன்னமான ஒலியும், வேகமும் திடுமென நிதானமுமாக மேடுபள்ள தாளகதியும், கும்பலில் வரிசை கட்டி பேசும் கருவிகளும் என இவ்விசையே ஒரு பிடிமானமற்ற வெறும் கவர்வித்தையாகவும் தோன்றலாம்.
  5. பலனாக சிறிது நேரத்தில் நாம் அயர்வுற்று கவனம் சிதறி இசையிலிருந்து வெளியேறலாம்.

மொத்தததில் ஒரு ஏமாற்ற உணர்வு தோன்றினால் அதிசயமில்லை.

பெரும்பாலானவர்க்கு மாஃலரின் இசையில் இதுவே முதலில் நேருமெனத் தோன்றுகிறது. எனவேதான் அவர் வழங்கும் இசையனுபவம் குறித்து இரு வகையான கருத்துக்களைக் காணமுடிகிறது. முதல் வகையினர் அதில் தனிச்சிறப்பாக எதும் பிடிபடவில்லையே என்பவர்கள். இப்படியே சொல்லிக்கொண்டிருந்த இரண்டாம் வகையினருக்கோ, வழக்கமான ஒரு நழுவிச்செல்லலின்போது, ஒரு குமிழி உடையும் தருணத்தில் மின்னலாக, அவரது உலகு காட்சி தருகின்றது.


சமீபத்தில் படித்த ஒரு உண்மைச் சம்பவம், மாஃலரின் உலகை நோக்க பொருத்தமானது.

இங்கிலாந்தில் (என்று நினைவு) ஒரு மருத்துவரிடம், ஒரு சிறுமிக்கு அதிகமாக விக்கலெடுக்கிறது என்று அதன் தாய் அழைத்துவருகிறார். மேலோட்டமான சோதனைகளைச் செய்து மருத்துவர்’ ஒன்றுமில்லை, சிறிது நேரத்தில் நின்றுவிடும்’ என்று மற்றவர்களைப் பார்க்கச் செல்கிறார். சில மணி நேரங்கழித்து வந்தவர் தாயும்,சிறுமியும் அங்கேயே இருப்பதைக் கண்டு விசாரிக்க, இன்னும் விக்கல் அடங்கவில்லை எனத்தெரிகிறது. கொஞ்சம் புதிரடைந்து மருத்துவர் அடுத்த கட்ட பரிசோதனைகளைத் துவங்குகிறார். ஒவ்வொரு சோதனையாக தலை முதல் பாதம் வரை அனைத்து சோதனைகளையும் செய்தாகிவிட்டது. விக்கல் நின்றபாடில்லை. பிற மருத்துவர்களிடமும் விஷயம் பரவ, பரிசோதிக்க என சிக்கல் அடர்கிறது. ஆனால் தீரவில்லை.

இந்த கலவரத்தைக் கண்டு மேல்தளத்திலிருந்த மருத்துவர் ஒருவர் கீழிறங்கி வருகிறார். அவர் மனோத்ததுவ நிபுணர். சிறிது நேரம் கவனித்த அவர், சிறுமியை அழைத்துச் சென்று விளையாடுகிறார். கவனம் சிதறும் போது சிறுமிக்கு விக்கல் வருவதில்லை எனக்காண்கிறார். பிறகு நைச்சியமாக பேச்சுக் கொடுக்க..’ஒரு கொடிய உருவம் தன் கனவில் வந்து, விக்கலை நிறுத்தினால் உன் தாய் இறந்துவிடுவாள்’ எனச் சொன்னதாக சிறுமி சொல்கிறாள். நாள்முழுதும் அல்லோப்பட்ட மருத்துவமனைக்கு அதிர்ச்சியோடு கலந்த நிம்மதி கிட்டுகிறது.

மருத்துவர்களின் பரிசோதனை முறைகள் மற்றும் கருவிகளைப் போலவே, மேற்கத்திய இசையை அணுகுபவர்களுக்கு பல்வேறு சட்டகங்கள் துணை புரிகின்றன. இசைவியல் (harmony), தொனியியல் (tonality), பின்னை/அ-தொனியியல் (post/atonality) போன்ற பாணிச்சார்பு, பல்வேறு வடிவங்கள், வடிவமைப்பு முறைகள் இத்தியாதி என இச்சட்டகங்கள் இசையை, இசைஞர்களை அணுகத் துணைபுரிபவை. ஆனால் மாஃலர் போன்ற குழந்தையை எடுத்த எடுப்பிலேயே இச்சட்டகங்கள் மூலம் அணுகினால் முதல் பிரிவினருக்கு நேரும் ஏமாற்றமே மிஞ்சலாம். மாறாக மாஃலரின் உலகைக் காண அவரது துர்கனவுகளுக்குள்தான் நாம் முதலில் செல்ல வேண்டும்.


மாஃலர் தனது முதலிரண்டு சிம்பொனிகளில், தனது வாழ்க்கையை வடித்து வைத்திருப்பதாகச் சொல்கிறார். அதிலும் நாம் மேலே கண்ட அவரது முதல் சிம்பொனி, அவரது குழந்தைப் பருவம் முதலான சரிதம். துரதிருஶ்டமாக துர்கனவுகள் அவரது குழந்தைப் பருவத்திலிருந்தே துவங்குபவை.

அவரது குழந்தைப்பருவத்தைக் காணும் போது நூற்றாண்டுகள் முன்பிலான மனித வாழ்வின் பரிதாபமான நிலையாமையும், மரணத்தின் ஓய்வில்லாக் கும்மாளமும் நம் முகத்திலறைபவை. ஆம் இதில் அவர் பெரிய விதிவிலக்கல்லதான். அவருக்கு நூற்றாண்டு முற்பட்ட ஜோசப் பாஃக்கின் பதிமூன்று குழந்தைகளில் ஆறு குழந்தைகளே தங்கியவை. ஆனால் ஒப்பீட்டில் இழப்பை மட்டுமே பெற்றுக்கொள்ளப் படைக்கப்பட்டதாகவே மாஃலருக்கு வாழ்வு அமைகிறது.

மாஃலரின் குழந்தைப் பருவத்தில் அவரது ஐந்து உடன்பிறந்தோர் இறக்கிறார்கள். ஆறாவது இறப்பு அவருக்கு மிகவும் பிடித்தமான சகோதரர். நோயுற்ற சகோதரருடன் மாதக்கணக்காக அருகிலேயே செலவிட்ட மாஃலர், அவர் இறந்ததும் முற்றிலும் உடைந்து போகிறார். சிறுவயது முதல் ஆரம்பிக்கும் இச்சகோதர மரணங்கள் அவர் வாழ்வு முழுதும் தொடர்கின்றன. இளமைப் பருவத்தில் மீண்டும் ஒரு சகோதரியின் மரணம், அவரையொத்த இசைஞரான ஒரு சகோதரரின் தற்கொலை. இறப்புக்களைத் தாண்டியும் குடும்பச் சூழல் கொடுமையானதாகவே அவருக்கு வாய்க்கிறது. தந்தையார் – பிள்ளைகளையும், தாயையும் வதைக்கும் முரடர்.

குடும்பச் சூழல் இப்படி என்றால், அதிலிருந்து வெளியேறி இசைகற்று வளரத்துவங்கி, வேலைக்குச் செல்லும் பருவத்தில் அடுத்த சிக்கல் அவரைத் தாக்குகிறது. காரணம் அவர் ஒரு யூதர். ஒருபுறம் அக்காலத்தில் நிலவிய யூதர்களுக்கு சாதகமான வாய்ப்புகள், மறுபுறம் கடுமையாகத் தலைதூக்கிய யூதர்களுக்கு எதிரான வெறுப்பு.

ஆனால் இவற்றையெல்லாம் கடந்து கொஞ்சம் கொஞ்சமாக மாஃலர் இசையுலகில் தனது முத்திரையைப் பதிக்கத் துவங்குகிறார். மாஃல்ரின் காலத்தில் அவர் மிகச்சிறந்த இசைநடத்துனராகவே (conductor) அறியப்பட்டவர். இன்று மேற்கத்திய இசையரங்குகளை இடையறாது நிறைக்கும் அவரது சிம்பொனிகள் அவரது காலத்தில் பெரிதும் கவனம் பெறாதவையே. அவர் மறைந்து அரைநூற்றாண்டு பிறகே அவரது இசையமைப்பு கவனம் பெறத்துவங்குகிறது.

இசையமைக்க வேண்டும் என்ற தணியாத ஆசை கொண்டவராக இருந்தாலும், வாழ்க்கையை நகர்த்த தனக்கு வாய்த்த இசைநடத்துனர் தொழிலில் முழுதும் தன்னை அர்பணித்துக் கொள்கிறார் மாஃலர். தனது கடுமையான பயிற்சிமுறைகளினால் ஒருபுறம் இசைக்குழுவின் கலைஞர்களிடையே வெறுப்பை வளர்த்துக் கொண்டாலும், அதன் பலனான இசையின் தரத்தின் மூலம் விரைவிலேயே இசையமைப்பாளர்கள் தேடி வரும் நடத்துனராக உருவெடுக்கிறார். உச்சமாக வாக்னரின் இசைநாடகங்களை நிகழ்த்துவதற்கு, வாக்னரையே விட மோசமாக யூதர்களை வெறுத்த வாக்னரின் மனைவி, மாஃலரையே தேர்தெடுக்கிறார்.

தனது இசைநடத்துனர் பணியில் கிட்டும் சொற்ப இடைவெளிகளில் தான் மாஃலர் தனது சொந்த இசையையே எழுத முனைகிறார். எனவேதான் அவரது இசை வெளியீடுகள் பிறரோடு ஒப்பிடக் குறைவானவயே. ஒன்பது சிம்பொனிகள், சில இசைபாடல் தொகுப்புகள் அவ்வளவுதான். கடுமையான பணிச்சுமைக்கு நடுவே இசையமைக்க வேண்டியிருந்ததால், ஒரு ஓய்வு வீட்டைக் கட்டி அங்கு தனது இசையமைப்பை மேற்கொள்கிறார். ஆனால அங்குமே அவருக்கு நிம்மதி வாய்க்கவில்லை. காதலிலும் தோல்வி மேல் தோல்விகளை சந்தித்த அவர் தன்னைவிட இருபது வயது குறைவான ‘அல்மா சிண்ட்லரை’ மணம் செய்து கொள்கிறார். ஆனால் சில நாட்களிலேயே மணவாழக்கையில் சிக்கல்கள் துவங்கின்றன. உச்சமாக அவர் தனது ஓய்வு வீட்டில் இருக்கும் போது நோய்வாய்ப்பட்டு அவர்களது இருமகள்களில் ஒருவர் இறந்தும், மாஃலரின் உடல்நிலையும் கவலைக்கிடமாகிறது.


சுருக்கிப் பார்த்தால் மாஃலருக்கு ஒரே ஒரு இசைவடிவம் தான். சிம்ஃபொனி மட்டுமே அவரது இசைவடிவம். சிம்ஃபொனி என்பது அடிப்படையில் இசைக்கருவிகளின் சேர்ந்திசை மட்டுமே. கருவிக்கோள்களின் கூட்டியக்கமே சிம்ஃபொனி பிரபஞ்சம். அதில் மூன்று பாடல்கள், நான்கு பாடல்கள், இப்படி ஆரம்பித்து இப்படி முடியும், இத்தனை கருவிகள் இடம்பெறும் என்பதெல்லாம் விபரங்கள்தான். ஒரு மிகச்சிறந்த இசைநடத்துநருக்கு கருவிகளின் சேர்ந்திசையே விருப்பமான வடிவ மற்றும் நயமாவதில் வியப்பில்லையே.

‘சிம்ஃபொனி என்பது ஒரு முழு உலகின் மாதிரியாக வேண்டும்’ என்றவர் மாஃலர். மேற்கண்ட அவரது சிறிய வாழ்க்கைக் குறிப்பிலிருந்து நமக்குத் தெரிய வருவது – மாஃலரின் ‘முழு உலகில்’ நிலையானது இறப்பும், இழப்புகளும், இசையும் என்பதே. மாஃலரின் ஒன்பது சிம்பொனிகளும் மீண்டும் மீண்டும் கட்டியெழுப்புவது இறப்பின், இழப்பின் வெவ்வேறு சுவைகளையும், அதற்கு இடைப்பட்ட இருப்பு வேட்கையின் வெற்றி தோல்விகளையும் இவை இரண்டின் குழப்பமற்ற தெளிவின்மையையுமே.

இப்போது மீண்டும் மாஃலரின் முதல் சிம்ஃபொனியை எடுத்துக் கொள்வோம். இந்த சிம்பொனிக்கு மாஃலர் சில விளக்கக் குறிப்புகளை வழங்கியிருந்தார்.

சிம்பொனியை இரு பகுதிகளாகப் பிரித்த அவர் முதல் பகுதிக்கு “இளமைப் பருவம் – அதன் கனிகளும், முட்களும்” எனத் தலைப்பிட்டிருந்தார். இப்பகுதிக்கு இரு பாடல்கள்.

முதல் பாடலுக்கு ‘முடிவற்ற வசந்தம்’ என்று குறிப்பெழுதுகிறார். பாடலின் நகர்வுகளை பின்வருமாறு பிரித்துக் கொள்ளலாம்.

  1. துவக்கம் (1.00 – 1.40)

‘முடிவற்ற வசந்தப் பாடல்’ என்று பெயரிட்டாலும் பாடல் என்னவோ ஒரு மெல்லியபதட்டமாகவே துவங்குகிறது . அதன் துவக்கத்தில் (1st Violins, 2nd violins, viola) தந்திக்கருவிகள் ஒரு அடரிசையை வழங்குகின்றன. பிறகு (flute, oboe, clarinet) குழற்கருவிகள் ஒரு புதிர்த்தன்மையிலான மையப்பதத்தை (theme) வழங்குகின்றன. இது ஒரு புலர்வின் முன்னான, துர்கனவின் நிழல்படிந்த யாமமாக தோற்றப்படுகின்றது.

2. புலர்வு (1.40 – 5.10)

யாமம் வைகறைப்புலர்வை நோக்கி நகரும் போது மையப்பதத்திலிருந்து (main theme) ஒரு துகளை எடுத்து குயிலொன்றிற்கு கூவ வழங்குகிறார் மாஃலர். கிளாரினெட் குயில் கூவுகிறது ( 1.41 – clarinet). பாடல் முழுதுமே இந்தக் குயில் துணை வருகிறது. குயிலோசை வழியே பொழுதுபுலரத் துவங்குகிறது. ஒரு ரம்மியமான புலர்வை, செல்லோவின் இசையில் கேட்கிறோம் (3.40 – cello).

3. வசந்தகால ரம்மியம் (5.15-8.00)

பிறகு புலர்விலிருந்து விழித்தபின் , காலையின் பரபரப்பு கேட்கிறது (5.15 – சேர்ந்திசை), தொற்றிக் கொள்கிறது. இந்தப் பரபரப்பு மாஃலரின் இல்லமும், அதனை சுற்றிய சதுக்கத்தில் நிலவிய கொண்டாட்டம், பரபரப்பான சூழலை, பல்வேறு ஒலிகளைக் குறிப்பதாக அமைகிறது.

4. தெளிவுமறியாது முடிவும் தெரியாது (8.00 – 11.00)

ரம்மியமாகப் போய்க்கொண்டிருப்பதா மாஃலரின் இசை. துவக்கத்தின் அடர் தந்திசை மீண்டும் இக்கட்டத்தில் வரவே, இப்போது பதட்டமான சூழல் துவங்குகிறது. பிறகு ஒரு செல்லோ இசைப்பகுதி (8.23 – Cello) இச்சூழலில் நாயகனுக்கு நேரும் ஆழ்சிந்தனையைக் குறிக்கிறது. ஆனால் அந்தச் சிந்தனை கொண்டு செல்லும் ஆழம் அச்சமளிக்கும் சிடுக்குகள் நிறைந்ததாகிறது (8.45 -Cello). அங்கிருந்து தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்கும் நிலை மேலிடுகிறது. பின்னணியில் குயில் மட்டும் கூவிக்கொண்டே இருக்கிறது.

5. இருப்பின் மீட்சி (11.00 – 15.25)

இத்தகைய ஆழ்மனக்கிலேசத்திலிருந்து மாஃலரை விடுவிப்பது ஒரு சன்னமான கொம்பிசை (11.10 – Horn). படைவீரர்களின் அணிவகுப்பிசை அவரது இல்லத்தின் அருகிலான சதுக்கத்தில் தொடர்ந்து ஒலிக்குமாம். மாஃலரை மனச்சிக்கலிருந்து சிறுவயது கொண்டே தொடர்ந்து விடுவித்தது ஒலிகளே போலும். கொம்பிசையை கேட்டவுடன், சென்ற பகுதியில் ஆழ்மனதின் அச்சமாக மிரட்டிய செல்லோ இசை என்ன அற்புதமாக உருமாறுகிறது (11.23 – Cello) பாருங்கள். மனிதன் தன் ஆழ்மன அச்சங்களை எதிர்கொள்ளாமல், நைச்சியமாக ஆடையைப் போல் உதறியோ, ஒத்திவைத்தோ தினசரி இருப்பில் தப்பிக்கொள்வதன் அழகியல் மிகச்சில பதங்களில் வெளிப்பட்டுவிடுகிறது. இதுவே இருப்பின் கருணை என்பதாக. பிறகென்ன, வெவ்வேறு ஒலிகளில் மீண்டும் மெதுவாக உற்சாகமும், துடிப்பும் மீட்சி பெறுகிறது. மீண்டும் வசந்தத்தின் ரம்மியத்தில் இணைந்து கொள்கிறோம் (12.45 – சேர்ந்திசை). ஆனால் பாருங்கள் அதுவும் நிலைப்பதில்லை. மீண்டும் ஒரு சிக்கலான பொழுதை எதிர்கொள்கிறோம் (13.30-14.30 violins). ஆனால் இப்போது நாம் சிக்கல்களுக்கு பழகியாயிற்று. எவ்வளவு பெரிய சிக்கலோ அதனைப் பொறுத்தால், அவ்வளவு ஆர்ப்பாட்டமான தப்பித்தல் (14.40 – Horns). இவ்வழியைப் பற்றினால் வசந்தத்திற்கு முடிவே இல்லை தானே.


இளமையின் துள்ளல் (16.27 – 25.30)

சிம்ஃபொனி தொகுப்பின் பாடல்களில் பொதுவாக ஒரு பாடலாவது நடனவடிவைக் கொண்டதாக இருக்கும். அனைத்து தரப்பையும் மகிழ்விப்பதில் சிம்ஃபொனி மட்டும் தப்ப முடியுமா. மாஃலரின் இரண்டாவது பாடல் இத்தேவையை பூர்த்தி செய்யும் நடன இசை கொண்டது. மேலும் அவர் எடுத்துக் கொண்ட இளம் பருவத்தின் வனப்பையும் அதன் தங்கு தடையற்ற துள்ளலான ஓட்டத்தையும் குறிப்பதற்கு பொருத்தமாகிறது. இப்பாடலுக்கும் அவர் தனது சிறுவயதில் மதுவிடுதிகளில் (tavern songs) கேட்ட துள்ளிசை பாணியை எடுத்துக் கொள்கிறார். பாடலோடு சிம்ஃபொனியின் முதல்பகுதியான இளமைக்காலம் முடிகிறது.


ஒரு மரண ஊர்வலம் (25.30 -35.55)

சிம்ஃபொனியின் இரண்டாம் பகுதிக்கு மாஃலரின் தலைப்பு “மனிதனெனும் நகைச்சுவை”. இப்பகுதியின் முதல் பாடலுக்கு (சிம்பொனியின் மூன்றாம் பாடலுக்கு) நாம் வரும்போது மாஃலரின் மையச்சரடான ‘இறப்பு’ முதன்முதலாக காட்சி தருகிறது.

இப்பகுதியில் நாயகன் இறந்தானா, இறந்ததாகக் கனவா தெரியாது. ஆனால் நாயகனின் இறப்பின் ஊர்வலத்தைக் குறிக்க மாஃலர் எடுத்துக்கொண்ட மையப்பதம் (main theme) அன்றும், இன்றும், என்றும் அரங்கங்களைத் திகைக்கச் செய்வது. ஆம், மரண ஊர்வல இசையாக அவர் எடுத்துக் கொண்டது சிறார் பாடலான “are you sleeping, brother john” பாடலையே. அதனை மைனர் ஸ்கேலில் கையாண்டு மரணத்தின் கீதமாக்குகிறார் மாஃலர்.

கொஞ்சம் தப்பினாலும் சிறுபிள்ளைத்தனமாக மாறிவிடும் அபாயம் நிறைந்த சிறார் பாடல் இசையை, தனது கருவித்தேர்வு மற்றும் ஒலியின் வார்ப்புகளில் (dynamics) கவனமாகக் கையாள்கிறார் மாஃலர். இந்த மரண ஊர்வல இசை நம்மை உலுக்கிக் கொண்டிருக்கும் போதே, இணைகோடாக ஒரு நாட்டாரிசை துவங்குகிறது (27.42 -oboe).

தனது பிற்காலத்தில் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான மாஃலர், மனநல ஆலோசனைக்கு தன் சக நாட்டவரான சிக்மண்ட் ப்ராய்டை அணுகுகிறார். அப்போது அவர் தன் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வாக ப்ராய்டிடம் ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். ஒருமுறை அவரது தந்தை குடித்துவிட்டு தாயைத் துன்புறுத்த, ஆறு வயது மாஃலர் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் அலைந்த போது, ஒரு கருவி இசைஞர் ஒரு பாடலை வாசித்துக் கொண்டிருப்பதைக் கேட்கிறார். அச்சூழலின் பாதிப்பு அவரிடம் நீங்காமல் தங்கிவிடுகிறது. அவரது முதல் சிம்ஃபொனியின் மரண ஊர்வலப் பாடலின் நடுவில் தந்திரமாகக் தோன்றி ஒலிக்கும் காற்றிலாடும் துள்ளிசையும் அத்தன்மை பெற்றதே.

மாஃலருக்கு மிகத்துயரான இசைப்பொழுதுகளின் இடையில் முரணான இசையை சிக்கலின்றி அடுக்க முடிகிறது. அது தோற்ற மயக்கத்தைக் குறிப்பதுவா, இறப்பின் நிலையாமையா, கூடவே செல்லும் இருப்பின் அபத்தத்தையா, அவலச்சுவையா, ஒருவகை வன்மமா – தெளிவில்லை. ஆனால் இந்த தெளிவற்ற பகுதிகளுக்குள் தயங்காமல் செல்வதே மாஃலரின் உலகின் தனிச்சிறப்பு.


நொறுங்கிய இதயத்தின் இறுதி இசை (35.55 -56.00)

ஆனால் அடுத்து வரும் நான்காம் பாடலில் தெளிவிற்குப் பஞ்சமில்லை. இதற்கு மாஃலர் வைத்த குறிப்பு “ஒரு நொறுங்கிய இதயத்தின் மடைதிறந்த வெளிப்பாடு”. ஆனால் நொறுங்கிய இதயம் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதோ நூறு கருவிகளின் சீற்றத்தில், உருக்கத்தில், பிரவாகத்தில். இப்பாடல் துவங்கி சுமார் நான்கு நிமிடங்கள் (35.55 -39.00) தொடரும் சேர்ந்திசையில், கருவிகள் தங்கள் மூச்சடங்கும் வரை தன்னழிவில் கரைகின்றன. இதற்கிணையான நாதப்பிரவாகம் சிம்ஃபொனியுலகில் சொற்பமே இருக்க முடியும்.

இப்பகுதி முடிந்ததும் தண்மையான சோகமும், வெடிப்பின் பேரொலியுமாக தீற்றித் தீர்கிறது நொறுங்கிய இதயம். பாடல் முடிவுறும் போது மாஃலர் முதல் மூன்று பாடல்களின் மையப்பதங்களின் துளிகளை மீண்டும் எடுத்தாள்கிறார். அப்பதங்களைக் கொண்டு பாடல் நிறைவுப்பகுதியை நோக்கிச் செல்கிறது. தனது முதல் சிம்ஃபொனி ஆதலால், இறுதிப்பகுதியை இழப்பிலிருந்து மீளும் வேட்கையின் கொண்டாட்டமாகவே நிறைவு செய்கிறார் மாஃலர்.


இவ்வாறு காணும்போது, மேற்பார்வையில் முதலில் சுவாரசியமற்றதாகக் காட்சிதரும் மாஃலரின் இசை, அதன் அகத்திற்குள் சென்றவுடன் தனது முழுப்பரிமாணத்தையும் வெளிப்படுத்தி நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. அதன் பிறகுதான் நமக்கு அவரது புறவயமான இசைமொழியின் பாய்ச்சல்களும் துலங்கத் தொடங்குகின்றன். இது வெறும் உணர்ச்சிப் பிழம்பான இசைமட்டுமல்ல. மாறாக தனக்கேயான பிரத்யேக மாஃலரிய கட்டுமானங்களைக் கொண்ட இசையுலகு. சுருக்கமாகக் குறித்தால்

  • மாஃலரின் மிகப்பெரிய சாதனை கருவிச்சேர்ப்பில்தான் (orchestration). அவரே மேற்கிசையின் கருவிச்சேர்ப்பின் உச்சம் எனச்சொல்லலாம். அவரோடு ஒப்பிட பீத்தோவனின் கருவிச்சேர்ப்பு கூட ஒரு மாற்றுக்குறைவாகத் தோன்றுமளவு.
  • தேர்ந்த இசைநடத்துனராக இருந்ததால், அவருக்கு இசைக்கருவிகளின் தனித்த, சேர்ந்திசை பயன்பாடுகளில் ஆழமான பார்வை கிட்டுகிறது. இதனைக் கொண்டு அவர் பல புதுமைகளைச் செய்கிறார். உதாரணமாக தூரத்தில் கேட்கும் பாடல்பகுதிகளுக்கு, மைய அரங்கிலிருக்கும் கருவிக்குழுக்களுக்கு (main orchestra) தூரமாக அல்லது அரங்கின் பின்னறைகளில் வேறு சிறிய கருவிக்குழுக்களைப் (smaller backstage orchestra) பயன்படுத்துகிறார். இதில் கதிமாற்றங்களைப் புகுத்தி சவலாக்குகிறார்.
  • அவரது பாடல்களின் ஒலியளவின்வார்ப்பு (dynamics – பேரொலியிலிருந்து சன்னமான ஒலிகள் வரை) முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, வெறும் அழகியலாக நில்லாமல் இசைபுனைவிற்கான முக்கிய கருவியாகவே உருவெடுக்கிறது.
  • பீத்தோவனின் வழிவந்த சிம்ஃபொனிக்குழுவின் கட்டமைப்பை அவர் மேலும் பெரிதாக்குகிறார். கருவிகளின் எண்ணிக்கைகளைக் கூட்டுகிறார். குழற்கருவிகள் மூன்று ஜோடிகளிலிருந்து நான்கு ஜோடிகளாகின்றன. கொம்பிசைக்கருவிகள் நான்கிலிருந்து ஏழாகின்றது. இவ்வாறு ஒவ்வொரு கருவிக்குழுவும் விரிவடைகிறது. இவ்வளவு விரிவடைந்த கருவிக்கூட்டமாக இருப்பினும் மாஃலரின் இசையின் அசாதாரணத்தன்மை என்பது, ஒவ்வொரு கருவியின் ஒலிப்பும் மிகத்துல்லியமாக நம்மால் கேட்கமுடிவதுதான். ஒரு பெருங்கூட்டதின் ஆரவாரத்திலும் ஒவ்வொரு குரலையும் நாம் தனித்தே உணர்கிறோம்.
  • ஒருபுறம் வாக்னரைப் போல, ஆனால் முழுதும் கருவியிசையில், அவரது இசையானது பதங்கள் சீர்களிலிருந்து, காட்சி மற்றும் உணர்வுநிலைகளின் ஆழங்களைக் கடத்தும் களத்திற்கு நகர்கிறது. அவரது இசையின் தனித்த பதங்களை நாம் நினைவுகூர்வது கடினம். மேற்கண்டதைப் போல பகுதிகளாகவே அவரது இசை இயங்குகிறது. இதுவே தனது முன்னவர்களின் வழிநடந்தாலும், அவரது இசையை இருபதாம் நூற்றாண்டின் இசையாக நவீனப்படுத்துகிறது.

அவரது காலத்தில் பிரபலமானவர்களின் இசையை விட மாஃக்லரின் இசை இன்று மீண்டும் மீண்டும் உலகெங்கும் நிகழத்தப்படுகிறது. இந்த அதிசயத்தினால், அவரது இசையில் சிக்குண்டுவர்களால் அல்லது மீளாக்கம் செய்பவர்களால், இன்று அவருக்கு பல்வேறு அபரிதமான கிரீடங்கள் வழங்கப்படுகின்றன. மனித இனத்தின் முடிவை முதலில் அறிவித்தவர், உலகப்போர்களை திருஷ்டியில் கண்டவர், இசையின் ஒருவகையிலான முடிவிற்கும் மறுபிறப்பிற்கும் (தொனியியலின் முடிவும் ஷூன்பர்க்கின் வழியிலான அ-தொனியியலின் தோற்றமும்) மூலவர் என்றெல்லாம் அவருக்கு வழங்கப்படும் புகழுரைகளைக் காணலாம்.

பாதகமில்லை என்றாலும், இவற்றை அவரது பாணியிலேயே பார்க்கப்போனால், தெளிவற்றதை அதன் அழகிலேயே அணுகுவதே சிறப்பு, அதுவே அதற்கு முற்றிலும் போதுமான சிறப்பு.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: