முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த ISIS (ஐசிஸ்) ஒரு அமெரிக்க இசைக்குழு. 1997 முதல் 2009 வரை இயங்கி, ஐந்து அருமையான இசைத்தொகுப்புகளை வழங்கிய மெட்டல் இசைக்குழு. இவர்களுக்கும் இன்று ஐசிஸ் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரும் தீவிரவாத குழுவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இணையத்தில் தேடுவடதே சிக்கலாகும் ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்தது இவர்களின் துரதிஷ்டமா அல்லது தங்கள் இசை குழுவிற்கு பெயிரிட இவர்கள் தேர்ந்தெடுத்த எகிப்திய பெண் தெய்வமான ஐசிஸின் துரதிருஷ்டமா… மெட்டல் இசைக்குத் தான் இழப்பு.
ஐசிஸ் குழு 1997 வருடத்தில் பாஸ்டன் நகரில் தோன்றிய இசைக்குழு. பள்ளி..கல்லூரி..பக்கத்து வீட்டுத் தோழர்கள், பிற குழுக்களிலிருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்கள், எதேச்சையாக சந்தித்தவர்கள் என ஒரு கலவையில் தோன்றி, அதில் சிலர் வெளியேறி வேறு சிலர் சேர்ந்து, தட்டுத்தடுமாறி வளர்ந்து, கொஞ்ச காலத்தில் நிலையான கலைஞர்களையும் இசைமொழியையும் பெற்று சீர்கொள்ளும் மேற்கத்திய இசைக்குழுக்களின் கதைதான் ஐசிஸின் கதையும். ஐசிஸின் முதல் முழுநீள தொகுப்பான Celestial (2000) வெளிவரும்போது இக்குழு உறுதி பெற்றுவிடுகிறது.
Turner – (குரல்), Harris – (Drums), Gallagher – (Lead Guitar), Caxide (Bass Guitar), Meyer (Keyboard) என ஐவரைக் கொண்ட இசைக் குழுவாக ஐசிஸ் உருவெடுக்கிறது.
வளர்பருவ குழந்தைகள் ஒரே நாளில் இரண்டடி வளர்ந்ததாகத் தோன்றும் உணர்வே ஐசிஸின் முந்தைய தொகுப்புகளைக் கேட்கும் போது தோன்றுவது. முதல் தொகுப்பான Celestial (2000) தொகுப்பில் அலைபாயும் அவர்களது இசைமொழி, இரண்டாவது தொகுப்பான Oceanic (2002) தொகுப்பை கேட்கும்போது, ஆச்சரியமூட்டும் வளர்ச்சியையும், முக்கியமாக மிகச்சிறந்த குழுக்களுக்கே உரித்தான தனித்துவமான இசைமொழியும் கொண்டதாக கேட்கக்கிடைக்கிறது.
இரைச்சலும் அடர்த்தியும் கொண்ட பாடல்கள்.. வளரிசை (progressive) பாணியிலான விரிவாக்கப் பாடல்கள் என.. மெட்டல் வகைமைக்கே உரித்தான பாடல்களை கொண்டிருந்தாலும், இவர்களது தனித்துவத்தை பறைசாற்றும் பாடலாக இத்தொகுப்பின் முதல் பாடல் அமைகிறது. இப்பாடலின் அட்டகாசமான துவக்கமே இவர்களது முத்திரையான இசைமொழியை நமக்கு உணர்த்தி விடுகிறது.
துவக்கமே ஒரு துள்ளலான, துல்லியமான தாளக்கட்டு.. அதன்மேல் எழும் கிடார் இசை.. மைய இழை ஒலிப்பது எந்த கிடாரில்?.. இவை சென்று சேற்கும் அலறற்குரல்.. அதற்கான அடரிசை..அதன் முடிவில் ஒரு நிதானப் போக்கு..அது சென்று சேர்க்கும் அடுத்த பகுதி.. என்ன ஒரு கச்சிதம். ஐசிஸின் உறுதிபெற்று வரும் இசைமொழிக்கான அடையாளமாக இந்த மூன்று நிமிட துவக்கத்தைக் காணலாம்.
வெற்றிகரமான இரண்டாவது தொகுப்பிற்குப் பிறகு ஐசிஸின் மூன்றாவது தொகுப்பிற்கு, பெரியளவிலான எதிர்பார்ப்பிருந்தது. 2004 வருடத்தில் வெளியான ஐசிஸின் மூன்றாவது தொகுப்பான Panopticon, ஐசிஸின் சாதனைத் தொகுப்பாக மட்டுமன்றி இந்தநூற்றாண்டின் முக்கிய இசைத்தொகுப்பாகவும் அமைகிறது.
இதில் முதல் சுவாரசியமாகப் பார்க்க வேண்டிய இத்தொகுப்பிற்கு ஐசிஸ் எடுத்துக்கொண்ட கருப்பொருளையே.
மிஷல் ஃபூக்கோவின் ‘ஒழுக்கமும் தண்டனையும்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Panopticism கட்டுரை புகழ் பெற்றது.
ஒழுக்கம் மற்றும் தண்டனை மீதான விசாரணையை வரலாற்றுப் பூர்வமாக அணுகும் ஃபூகோ, இக்கட்டுரையில் இரு முக்கிய வரலாற்றுத் தருணங்களை விவாதிக்கிறார்.
பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் பிளேக் நோய் தாக்குதலின்போது உருவான ஒழுக்கக் கட்டுப்பாடுகளை முதலில் எடுத்துக்கொள்ளும் ஃபூக்கோ, எவ்வாறு சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும், கடுமையான கண்காணிப்புகளும், கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டன என விவரிக்கிறார். ஊர்கள், தெருக்கள், குடும்பங்கள் என சமூகத்தின் ஒவ்வொரு அலகும் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தினசரி பல்வேறு ஒழுங்கு செயல்பாடுகள் தனிமனிதர்களால் கடைபிடிக்கப்படுகின்றன. இதற்கு முன்னர் தொழுநோயாளிகள் ஒதுக்கப்பட்டார்கள். பிளேக் நோயின் பயனாக சமூகமே ஒழுங்குபடுத்தப்படுகிறது. (இன்றைய கொரோனா காலத்தில் இவற்றை திரும்பப்பார்ப்பது சுவாரசியத்தையும் திகிலையும் வரவழைப்பது)
ஃபூகோ விவாதிக்க எடுத்துக்கொள்ளும் அடுத்த நிகழ்வானது,பிளேக் நோய்க்கு சுமார் நூறு ஆண்டுகளுக்குப்பிறகு, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், Bentham எனும் சமூகவியலாளர் வடிவமைத்த Panopticon எனும் சிறைக்கட்டிட அமைப்பு குறித்து. இச்சிறையில் மையத்தில் இருக்கும் காவல் கோபுரத்தின் மூலம் அனைத்து சிறைவாசிகளையும் கண்காணிக்க முடியும். சிறைவாசிகளுக்குத் தாங்கள் கண்காணிக்கப்படுவது தெரியும் ஆனால் பார்க்க முடியாது. அருகிலிருக்கும் பிற சிறைவாசிகளையும் காண முடியாது. இத்தகைய சிறை அமைப்பு அதுவரையிலான, சிறை என்றாலே தோன்றும் இருட்டிக் கிடக்கும், உடலைத்துன்புறுத்தும் கொடூரமான ஒரு அமைப்பு என்பதற்கு நேர்மாறாக அமைகிறது. ஆனால் தனது கட்டற்ற கண்காணிப்பின் மூலம் தங்கு தடையற்ற அதிகாரத்தையும், சிறைவாசிகளிடம் முழுமையான அடிபணிதலையும் வன்முறையின்றி சாதித்துவிடுகிறது. இத்தகைய ஒரு கண்காப்பு வடிவமைப்பு முன்னர் கண்ட பிளேக் கண்காப்புகளுக்கு அடுத்த கட்டமாக கத்தியின்றி, ரத்தமின்றி தனக்குத்தேவையான ஒழுங்கை சமூகத்தில் கட்டமைத்துவிடுகிறது. இத்தகைய Panopticon அமைப்பை நாம் சிறைக்கான அமைப்பாக மட்டும் பார்க்க முடியாது என்றும் இதுவே ஒரு தூய அதிகாரத்தின் வடிவம் என்றும் இதனை ஒரு அரசியல் தொழில்நுட்பமாகக் காணவேண்டும் என்றும் விரிவாக விவாதிக்கும் ஃபூக்கோ, இறுதியில் இத்தகைய அரசியல், சமூக தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் பயனாக இவ்வாறு முடிக்கிறார்.
Is it surprising that prisons resemble factories, schools, barracks, hospitals, which all resemble prisons?
இதுவரையிலான ஐசிஸின் பாடல்களின் பேசுபொருட்கள், வழக்கமான மெட்டல் தொகுப்புகளில் காணக்கிடைக்கும் தனிப்பட்ட வாழ்வியல் சிக்கல்கள், துயரங்கள், கொண்டாடங்கள் சார்ந்தது. மூன்றாம் தொகுப்பில் இறகுகளில் பலம் சேர்ந்து உயரப் பறக்கும் ஆற்றல்கூடிய தருவாயில், நான்காம் தொகுப்பிற்கு ஐசிஸ் எடுத்துக் கொண்டுள்ள பேசுபொருள் பூக்கோவின் Panopticism கட்டுரையை. தாங்கள் அரசியல் பேசும் குழுவல்ல எனவும் அதே வேளையில் பெந்தாம் வடிவமைத்த கட்டிடமும், ஃபூக்கோவின் கட்டுரையும் இன்றைய உலகோடு இணைத்துப் பார்க்க வேண்டியது என்றும் ஆனால் எல்லாவற்றையும் விட முக்கியமாக Panopticon எனும் சொல்லும் பொருளும் தங்கள் இசை அழகியலுக்குப் பொருத்தமானதால் தேர்ந்தெடுத்ததாக, இத்தேர்வு குறித்து டர்னர் குறிப்பிடுகிறார். தொகுப்பு முழுதும் இவ்வழகியல் வியாபிக்கிறது. ஃபூகோவின் வரிகள் நேரடியாக பயனாகிறது. தீவிரத்தன்மை வாய்ந்த ஐசிஸின் இசைக்கு இந்த கருத்துப்படிவம் மேலும் அடர்வை வழங்குகிறது.
ஐசிஸின் கெட்டபழக்கம் ஒன்று, அவர்களின் தொகுப்புகளின் முதல் பாடல் மிக அற்புதமாக அமைந்து விடுவதுதான். ஒரு புத்தகத்தின் முதல் பக்கம்/பகுதி அற்புதமாகத் துவங்குவது வேண்டுமானால் புத்தகத்திற்குள் நம்மை விரைவாக இழுத்துச் செல்லலாம். ஆனால் இசைத்தொகுப்பில் இது நேர்மாறான விளைவினை ஏற்படுத்தக் கூடியது. முதல்பாடலைத் தாண்டி தொகுப்புக்குள் நுழைய விடாது. ஐசிஸின் எல்லா தொகுப்புகளிலும் இதுவே நிலை.
Panopticon தொகுப்பின் முதல் பாடலான “So did we” துவக்கத்திலேயே, எந்த முன்னறிவுப்பும் இல்லாத பேரலையாக, கிடாரின் திரிபொலி நம்மைத் தாக்குகிறது. மிதமான தாளமும், மின்னணு இசையும் தொடர்கின்றன. பிறகு பாடகர், மானுட தோற்றத்தையும், நிலையையும் ஒரு சில வரிகளில் தாண்டி “The years they passed and so did we But, resistance would be brought” என்ற வரிகளில் உச்சத்தில் செல்லும் போது, அந்த உச்சத்தை நிறைவு செய்யும் கீபோர்டும், கிடாரும் (சுமார் 3.00 நிமிடத்தில்) அனேகமாக ஒரு இசையுலக சாதனை எனலாம். இத்தருணத்தில் ஒலிக்கும் உணர்ச்சிப் பெருக்கும், கரைவும் இசையால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய தருணம்.
இத்தகைய பல தருணங்கள் இத்தொகுப்பு முழுதும் கேட்கக்கிடைக்கின்றன.
பெரும்பாலான பாடல்கள் வளரிசை பாணியிலான நீண்ட பாடல்கள். பாடல்களில் நிதானாமான பகுதிகள், பிறகு அதற்கு நேர்மாறாக தாளகதியும், கிடாரின் திரிபொலியும் தீவிரப்படுத்தப்பட்டு உச்சமான பகுதிகள் என அடுக்கப்படும் உத்தியும் காணக்கிடைக்கின்றன. ஐந்தாவது பாடலான syndic calls இவ்வகையில் அற்புதமாக அமைந்துள்ளது.
இத்தொகுப்பின் பாடல்களில் பெரிய இசைத் தீர்மானங்கள் (themes) இல்லை, கருவிகளின் தனியாவர்த்தனங்களில்லை, கவர்ச்சியான பகுதிகளில்லை.. சொல்லப்போனால் பாடல்கள் பாடலுக்கு வெளியில் நினைவில் நிற்பதே இல்லை. ஆனால் பாடல்கள் துவங்கியதும் நாம் அதன் தீவிரத்தன்மைக்கு இரையாகிறோம்.
இதுவே ஐசிஸின் தனித்துவ இசைமொழியாகிறது. பஞ்ச பூதங்களாக கிடார்கள், டிரம்ஸ், குரல், கீபோர்ட் இடம்பெற்றாலும் பாடலுக்குள் நாம் நுழைந்தவுடன் இவற்றை பிரித்தறிய முடியாது. இவை இணைந்து ஒருநயமாக ஒலிக்கின்றன. மிகவும் வித்தியாசமான, ஆனால் குழப்பாத தாளக்கட்டுக்கள், தீவிரம் தாங்கிய கிடார் பகுதிகள், குரல்-கீபோர்ட் கலந்த சூழ்நயம் (ambient texture) இவையே ஐசிஸின் கட்டுமானங்கள்.
இவற்றைக் கொண்டு மெட்டலிசையின் அடர்த்தியையும், வளரிசையின் நிதானத்தையும், கவர்ச்சிகளுக்கு இடமளிக்காத தீவிரத்தையும் இசிஸின் இசை கொண்டுள்ளது. எனவே ஐசிஸின் இசை, ‘தியான மெட்டலிசை’ என்றோ அல்லது ‘சிந்தனைக்கான மெட்டலிசை’ (thinking man’s metal) என்றோ வருணிக்கப்படுவதில் வியப்பில்லை.
சந்தேகமின்றி இந்நூற்றாண்டின் சிறந்த இசைத்தொகுப்புகளுள் வைக்கப்பட வேண்டியது Panopticon. அவர்களது முன்னோடி குழுவான Neurosis போன்று ஐசிஸ் குழுவும் தனக்கான ரசிகர்களை என்றென்றைக்கும் பெறப்போகிறது. சில வருடங்களில் இக்குழு கருத்துவேறுபாடுகளால் பிரிந்தாலும் இன்றும் சாசுவதமான இத்தொகுப்பின் மூலம் புதிய ரசிகர்களைப் பெற்று வருவதும், இக்குழுவின் பொற்காலத்தை கற்பனை செய்து பார்ப்பதும் நிகழ்கிறது.
பொதுவாக மெட்டல் போன்ற வகைமகளை ஒதுக்கும் மையநீரோட்ட இசைத்துறைக்கு பதிலாக வைக்க வேண்டிய தொகுப்பு இது. இரைச்சலின் பயன்பாட்டை மேற்கத்திய செவ்விசை ஒருபுறம் ஆய்வகங்களில் உற்பத்தி செய்யும் போது ஒரு உள்ளார்ந்த கலைவெளிப்பாடு அதனை இசைமொழியாக்கி வெற்றி கொள்கிறது.
அதனோடு ‘Always object.. Never subject’ என ஃபூக்கோவின் வரிகளும் இணைந்து கொள்கின்றது. இனிவரும் எக்காலத்திற்கும் இவ்வரசியல் பார்வைகள் பொருந்தும் எனினும், குறிப்பாக இந்தக் கொரோனா காலத்தில் இதனைத் திரும்பப் பார்ப்பது தனி அனுபவம்தான்…
Magistrates dream of plague
Tongues loll in anticipation
You are awake in their darker visions
Drool slips from grining mouths
The plague is forced on us all
Is it there? Are they there?
Shouts of fact abound
But whispers of truth burn through
Is it there? Are they there?