தருமராஜின் அயோத்திதாசர் புத்தக வெளியீட்டு விழா சில குறிப்புகள்
அயோத்திதாசர் புத்தகம் வெளியீட்டு விழாவின் அழைப்பிதழைப் பார்த்தவுடன் குழப்பமாக இருந்தது. விழா விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களின் தேர்வு குறித்த குழப்பமே அது. ஆனால் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் அயோத்திதாசர் குறித்து எந்த திசையிலிருந்து பேசுவார்கள் என்று யோசித்ததும் கொஞ்சம் துலங்கத் துவங்கியது. இந்த மூவரும் பொருத்தமான தேர்வு என்றும் தோன்றியது.
இருந்தாலும் புனைவெழுத்தாளர்கள் மட்டும் ஏன் என்ற கேள்வி நீங்காமல் இல்லை. அதற்கும் விடை கிடைத்தது.
விழாவில் பேசிய – சமஸ், ஜெமோ, சுவெ – மூவரிலும் தருமராஜின் புத்தகம் அவர்களை எவ்வாறு பாதித்தது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதைத் தாண்டி அவர்கள் பேசியது இந்நிகழ்வையே ஒரு புனைவாக்கியது . மூவருக்கும் அயோத்திதாசர் எனும் ஓரே நபர் இந்துத்துவ எதிர்ப்பாக, பகுத்தறிவிற்கு எதிர்ப்பாக, நவீனத்துவக்கு எதிர்ப்பாக என மாறிய அதிசயம் நிகழ்ந்தது.
இறுதியில் பேசிய தருமராஜுக்கு வேறு வழியே இல்லை. அவர் உண்மையைப் பேசித்தான் ஆக வேண்டும். ஏனெனில் அவர் இங்குள்ள உண்மைகள் பற்றித் தெரியாத ஒரு வேற்று நூற்றாண்டு ஏலியன் ஒருவருடன் இருபது வருடம் வாழ்ந்திருக்கிறார்.
அவருடைய பேச்சிலே மூவரின் நிலைப்பாட்டிற்கான துணைகேள்விகள் வந்து கொண்டேயிருந்தன.
ராஜ்கௌதமன் ‘குறுகிய ஐரோப்பிய’ பார்வை கொண்டு செய்த தவறை, தருமராஜ் செய்யவில்லை என்று வழக்கம்போல ஐரோப்பிய பிரச்சனையாக்கி ஜெமோ சொன்னார். தருமராஜ் தனது பேச்சின் ஊடே, தான் எவ்வாறு தெரிதா, விட்கென்ஸ்டைன், தெல்யூஸ் போன்ற ‘இந்தியப் பார்வைகள்’ கொண்டு அயோத்திதாசரைக் கண்டடைந்தேன் என்றார்.
நாம் என்ன ஆசைப்பட்டா ஐரோப்பிய பார்வைகளுக்குத் தேடிப் போகிறோம். இங்கு முப்பது வருடமாகக் கூடவே இருக்கிற இளையராஜாவைப் புரிந்து கொள்ள Charles Rosen தயவில்லாமல் முடியவே முடியாது போல இருக்கிறது. இல்லையென்றால் இங்கே நூறு புத்தகங்கள் வந்திருக்க வேண்டுமே. நமக்கு வேறு வழி இல்லை என்பதால் தானே மேற்கினை நோக்கிச் செல்ல வேண்டி இருக்கிறது. ஏன் வேறு வழி இல்லை என்ற கேள்வியும், பொருத்தமான ஐரோப்பிய பார்வைகளைத் தேர்வு செய்வதும், அப்பார்வைகள் தரமுடியாத நமது ‘லட்சணத்தை’ நாம் பேசுவதும் நம்முடைய கையில்.
போலவே சமஸ்கிருதத்துக்கு எதிராக அயோத்திதாசர் எவ்வாறு செயல்பட்டிருப்பார் என்ற சு.வெ கேள்விக்கு..தமிழையும் சமஸ்கிருதத்தையும் சகோதர மொழிகளாகத் திருப்பியிருப்பார் என்று ஒரு பதில் வந்தது.
நவீனத்தின் பார்வைக்கு அயோத்திதாசர் கொஞ்சம் கெட்டவராகத் தெரிகிறார் என்ற சமஸின் காரணத்திற்கு, இவ்வாறு நாம் நல்லவரா கெட்டவரா என்ற கேள்வியில் எத்தனை பேரை, முக்கியமானவற்றை இழந்துவிட்டோம், இழக்கப் போகிறோம் என்ற ஆற்றாமை பதிலாக வந்தது.
அயோத்திதாசரின் மெய் குறித்த விளக்கமாக தருமராஜ் சொன்ன சப்தமில்லாத மெய், தமிழுக்கு புதிய திறப்புதான் என்று நினைக்கிறேன்.
நேர்மாறாக நமது உயிரெழுத்துக்கள் சப்த வடிவானவை. அதுவும் இசைச்சுர அமைப்பிலானவை. இது போன்ற அணுகுமுறை எகிப்திய, கிரேக்க இசைமுறைகளிலும் உள்ளது. தமிழ் உயிரெழுத்துக்களை இன்றைய பியானோ கட்டைகளில் அடுக்கிவிட முடியும் (அதனால் இரண்டும் ஒன்று என்பதல்ல).
இவை தமிழில் மட்டும்தான் இப்படி என்பதைவிட அவர் சொன்னதைப் போல வேறெந்த மொழியையும் விட தனது வழி வழியான தொடர்ச்சியினால் இம்மொழியில் இந்த ஆழத்திற்கு நாம் செல்லமுடிகிறது.
தனது புத்தகத்தை பல காரணங்களினால் அவர் இளையராஜாவிற்கு சமர்ப்பித்திருக்கலாம். சிலவற்றை புத்தகமாக எழுதியுள்ளார். (அதையும் அவர் புத்தகமாக வெளியிட வேண்டும்.தமிழில் இளையராஜா பற்றி புத்தகங்களே இல்லை!!..பிரேமின் ஒன்றுதான் இருக்கிறது) ஆனால் இவற்றைத்தாண்டி தாசரும், ராஜாவும் சேரும் -உயிர், மெய் – அருமையான புள்ளி இது.
தாசரும் ராஜாவும் சேரும் மற்றொரு புள்ளி இருவரும் ஏலியன்கள்.
தருமராஜின் உரையில் கேட்டது மிகப்பொருத்தமானது – “இப்படிப்பட்ட ஒருவர் வரலாற்றிலிருந்து வந்தால் நாம் அவரிடம் கேட்கும் ஒரே கேள்வி – நீங்க நல்லவரா கெட்டவரா”. ஆனால் இது வரலாற்றிலிருந்து வந்தவருக்கு மட்டுமா.. நிகழ்காலத்திலும் நடப்பது..நடக்கப்போவது.
கர்னாடக இசை தமிழிசை இல்லயாமே என்ற போது அவர் சிரித்துக்கொண்டே ‘தானா வந்த சந்தனமே’ என்றார். தியாகராஜர் கடவுள் மாதிரி என்ற போது ‘அதனால தான் அவர் ஆசிர்வாதம் பண்ணி பாட்டு கொடுத்தார்’ என்று தியாகராஜரின் பாடல்வரிகளை வேறு மெட்டில் அமைத்தார். கர்னாடக சீசனைத் திறந்து வைத்து ‘நான் folk musicஐ classicalஆ கொடுப்பவானக்கும்’ என்றார். ஒவ்வொன்றும் நமது கால உண்மைகளை உரசிப்பார்க்கும் கூற்றுகள்தான்.
ஆனால் எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்ல மாட்டேன் என்று இவரும், நேரடியாக சொன்னாலே குழப்பும் அவர்களும் சேர்ந்து இவர் திமிர் பிடித்த மோசமானவராகி, அவர்கள் ‘அறிவிருக்கா’ ஆகி ..
இதிலும் பொருத்தம் தான். என்ன இவரை மறந்துவிடதான் இனி முடியாது. திரைஊடகம் காப்பாற்றி விட்டது.
பேச்சின் நடுவே அவர் ‘நல்லவேளை அ.தாசருக்கு பெரிசா தகவல்கள்’ இல்லை என்று ஆசுவாசப்பட்டார். ஆனால் இப்படிச் சொல்லும் ஒருவரிடம் புனைவெழுத்தாளர்கள் நாவல் எழுதச் சொன்னதாகச் சொன்னது திகிலான அனுபவம்.
புனைவெழுத்தாளர்கள் தங்களை அறிவியக்கமாக அறிவித்துவிட்டார்கள். தங்கள் கற்பனைக்கு எல்லை இல்லை என்று நிரூபிக்க சகலத்தையும் எழுதினார்கள். பிறகு எல்லாரையும் புனைவெழுத்தாளர்களாக மாற்றினால் தமிழ்நாட்டையே அறிவியக்கமாகி விடலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள். அதில் ஒன்று ‘நீங்க நாவல் எழுதலாமே’ என்று கேட்பது. இதை தருமராஜிடம் கேட்டதும் அவர் ‘அதமாதிரி தான் இதையும் எழுதுறேன்’ என்று சொன்னதும் திகிலான வேடிக்கைதான்.
ஆனால் புனைவெழுத்தாளர்களை ஏன் அழைத்தார் என்பது அந்த விழாவிலும், பிறகு அவர் பேசியதில் தான் தெரிகிறது. அந்த பக்கச் சிக்கல் இன்னும் மோசம் போலவே.
எனவேதான் தருமராஜின் வருகை நம்பிக்கையூட்டுவது.
தருமராஜிடமிருந்து கிடைக்கப் போகும் முறையியல் ( நன்றி @anathai) தமிழில் சிந்தித்தலுக்கு புதிய திறப்பாக இருக்கும் என்பதே எனக்கு தருமராஜ் வரவின் முக்கியத்துவம்.
இங்கே தெரிதா, சார்த்தர், விட்கென்ஸ்டைன்… மொழியியல், தத்துவம் பற்றி புத்தகங்கள் உள்ளன. அவர்களையெல்லாம் மேற்கோள் காட்டாமல் கட்டுரைகளும் இல்லை. ஆனால் பெரும்பாலும் அவை நினைவில் நிற்பதில்லை. அதாவது உண்மையில் நம் சிந்தனையின் பகுதியாக மாறவில்லை. ஏனெனில் அதற்கான சரியான தேவையை, எங்கே எவ்வாறு பொருத்துவது என்ற அணுகுமுறையைக் கொண்டுவர இயலவில்லை. இந்த கட்டமைப்பு இல்லாமல்தான் தகவல்கள் நிரம்பி, ஆனால் இறுதியில் பெரிதாக ஒன்றும் மிஞ்சாத சூழல் நிலவுகிறது. அயோத்திதாசர் புத்தகத்தின் வாயிலாக இந்த முறையியலே தமிழுக்கு எதிர்பார்ப்பது.
அயோத்திதாசரின் வரவு போலவே தருமராஜின் வரவுக்கு என்ன நேர்கிறது என்று பார்க்க வேண்டும்.
Leave a Reply