இரு தலைமுறைகள் ஒரு துணுக்கிசை

1761 வருடத்தில் தனது 29 வயதில் ஜோசஃப் ஹைடன், ஆஸ்திரியா நாட்டின் பணக்காரக் குடும்பமான ‘எஸ்தர்ஹாசி’ (Esterhazy family) குடும்பத்தில் உதவி இசை-ஒருங்கிணைப்பாளராகத் தேர்வாகிறார்.

எந்த செவ்விசைப்பின்னணியும் இல்லாத குடும்பத்தில், வண்டிச்சக்கரங்களை பழுதுபார்க்கும் மாத்தியாஸ் ஹைடனுக்கு மகனாகப் பிறந்து, கொஞ்சம் கொஞ்சமாக இசை கற்று, பிறகு பகுதி நேர இசைப்பணிகளுக்காக அல்லாடிய ஹைடனுக்கு, ஐரோப்பாவின் மிகப்பணக்கார குடும்பங்களுள் ஒன்றான ‘எஸ்தரஹாசி’ குடும்பத்தில் வேலை கிடைத்தது பெரும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்திருக்க வேண்டும்.

அவ்வருடம் துவங்கி, சுமார் 30 ஆண்டுகள், அக்குடும்பத்தின் பிரத்யேக இசைக்குழுவை ஒருங்கிணைத்து நிகழ்த்துவதிலும், அவர்களுக்கான புதிய இசையை உருவாக்குவதிலும், என ஹைடனின் வாழ்வின் பெரும்பகுதி அக்குடும்பத்தினரின் பணியில் அமைந்தது. இளைஞராகப் பணியில் சேர்ந்தவர் அங்கேயே அனைவருக்கும் Papa Haydn ஆனார். அவரது நூற்றுக்கணக்கான இசைப்படைப்புகளும், புதிய புதிய முயற்சிகளும் அங்குதான் அரங்கேறியது

estherhazy palace                                                      Esterhazy Palace 

செல்வந்தர் குடும்பத்தினரின் கவனிப்பும், ஊக்குவிப்பும் தன்னை வெளியுலகிலிருந்து துண்டித்துக் கொள்ளவும், புதுமையாக இசையமைக்கவும் உதவியது என்றார் ஹைடன்.


அக்குடும்பத்தின் இளவரசருக்கு விவால்டி இசையமையத்த Four seasons இசை பிடித்தமானது. எனவே அவர் ஹைடனை அவ்வழியிலேயே ஒரு புதிய  இசையை அமைக்குமாறு கேட்கிறார். ஹைடனுக்கு அக்குடும்பத்தில் கிடைத்த முதல் இசையமைப்புப் பணி இதுவே.

ஹைடன் இப்பணியை ஏற்றுக்கொள்கிறார். அவரும் விவால்டியின் four seasons போலவே, (இசைக்குப்புறமானதொரு) புறப்பொருளைக் குறிக்கும் மூன்று சிம்பொனிகளை அமைக்கிறார். ஒரு நாளின் காலை, மதியம், மாலை என மூன்று பொழுதுகளைக் குறிக்கும் மூன்று சிம்ஃபொனிகள் அவை. அவை முறையே அவரது ஆறாவது, ஏழாவது, எட்டாவது சிம்ஃபொனிகள்.

ஹைடன் அக்குடும்பத்தின் இசைப்பணிக்கு வரும்முன்னரே ஐந்து சிம்ஃபொனிக்களை அமைத்திருந்தவர். இப்பணியில் சேர்ந்த பின்னர் அவர் அங்கே மொத்தமாக 70 சிம்ஃபொனிகளை இசையமைத்தார். தனது ஆயுட்காலத்தில் 104 சிம்ஃபொனிகளை இசையமைத்தவர் ஹைடன்.


இங்கே நாம் குறிப்பாகக் காணவேண்டியது, நாம் இன்று நினைத்துக் கொள்ளும் சிம்ஃபொனியல்ல ஹைடன் காலத்தின் சிம்ஃபொனி.

இன்று சிம்ஃபொனி என்பது நூற்றுக்கும் மேற்பட்ட கருவியிசைக் கலைஞர்களாலான குழுவால் இசைக்கப்படுவது. நான்கு பாடல்களைக் கொண்ட ,ஒரு மணி நேரத்திற்கு மேல் செல்லும் பிரம்மாண்ட இசைவிருந்து. மேற்கிசையின் மிகப்புகழ்மிக்க இசைவடிவம். ஆனால் ஹைடன் காலகட்டத்தில் அது அப்போதுதான் தவழத்துவங்கிய குழந்தை.

ஹைடனின் காலகட்டத்தில் Baroque பாணியிலான இசை முடிவுக்கு வந்திருந்தது. அடுத்து என்ன பாணி மையமாகும் என்பதில் உறுதியில்லாமல் இருந்த காலகட்டம் அது.

ஹைடனுக்கு முன்பான Baroque காலத்தில்தான்   (1600-1750 AD)  கருவிகள் ஒரு குழுவாக சேர்ந்திசைக்கத் துவங்குகின்றன. எவ்வாறு கருவிகளைக் குழுவாக இசைப்பது,  சேர்ந்து எதை இசைப்பது, எவ்வாறு அவற்றின் சேர்ந்திசையைக் கையாள்வது என்பதில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றங்கள் தோன்றுகின்றன. இதன் மூலம் Baroque காலத்தில், கருவிகளின் குழுவிசை (orchestra),  இருவிதமான பயன்பாட்டிற்கு வருகிறது.

  • முதல் பயன்பாடு ஓபரா, ஆரட்டோரியோ உள்ளிட்ட இசைநாடகங்களின் துவக்க இசையாக, இடை இசையியாக.. (curtain raiser music, interlude fillers).
  • இரண்டாவது பயன்பாடு ஒரு தனிப்பாடகருக்கோ, தனிக்கருவிக்கோ பின்னணியிசையாக..

இவ்வாறு குழுவிசையானது (orchestral music), ஒரு ஓரத்தில் இயங்கும், துவக்க-இடை-பின்னணி இசையாகத் துவங்குகிறது. சிம்ஃபொனி வடிவின் மூலம் புகழ்மிக்க மையஇசையாக  உருவெடுக்க, குழுவிசைக்கு ஒரு நூற்றாண்டு எடுக்கிறது. அவ்வளர்ச்சிக்கு முக்கிய காரணகர்த்தாக்களுள் ஒருவர் ஹைடன். 

அவர் ‘எஸ்தர்ஹாசி’ குடும்பத்தில் சேரும் போது அவரோடு இளையவராகச் செல்லும் சிம்ஃபொனி இசை, முப்பது ஆண்டுகளில் முதிர்ச்சியுடன் வெளியேறுகிறது. ஹைடனை ‘Papa Haydn’ எனக்குறிப்பது அவரது வயதின் பொருட்டும், சிம்ஃபொனியின் தந்தை எனும் பொருளிலும் பொருத்தமாகிறது. 


ஹைடனின் முப்பொழுதுகளை மையமாகக் கொண்ட மூன்று சிம்ஃபொனிக்கள் இன்று கருவி குழுவிசையில் புதிய பாய்ச்சலாகக் கொள்ளப்படுகிறது. அதற்கு ஹைடனின் கற்பனை மட்டும் காரணம் அல்ல.

இந்த மூன்று சிம்பொனிகளை இசையமைக்கும் பணி வாய்த்ததும் ஹைடன் திட்டமிடத் துவங்கிறார். ‘எஸ்தர்ஹாசி’ குடும்பத்தினரின் பிரத்யேக இசைக்குழுவில் 15 கருவியிசை கலைஞர்கள் இருந்தார்கள். அவர் இக்கலைஞர்களை சரியாகப் பயன்படுத்த வேண்டும், அனைவருக்கும் சம வாய்ப்பளிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவருக்கும் அனைவரிடமும் ஒத்துழைப்பு கிட்டும் (Papa Haydn இல்லையா). இதுதான் அக்குடும்பத்தினரின் இசைக்குழுவுக்காக அவர் அமைக்கும் முதல் இசை. முதல் முயற்சி வெற்றி பெற்றாலே பாதி கிணறு தாண்டிவிடலாம்.

இப்பின்னணியிலேயே அவரது சிம்ஃபொனிக்கான கருவியிசையமைப்பு இருந்தது. அங்கிருந்த அனைத்து கருவிகளுக்கும் அவரது சிம்ஃபொனியில் பங்கிருந்தது. இசைக்கும் கலைஞர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும்படி இசையமைக்கிறார் ஹைடன். அதே வேளையில் அவை தனியாகத் துருத்தாமல் கலந்திசைக்குமாறு. ஹைடனின் சிம்ஃபொனி தனித்துவம் பெற்றதன் பின்னணியில் தனது இசைக்குழுவினருக்கு ஆதரவான அவர் போக்கும் மையமானது. இவ்வாறு பல லௌகீக, நடைமுறை தேவைகள் இசைவடிவ வளர்ச்சிகளில் பங்காற்றியவை.


அவரது காலைப் பொழுதிற்கான ‘Le Matin சிம்பொனி’யின் துவக்கம் நமக்கு ஒரு சூரிய உதயத்தை வழங்கி, சூரியன் உதித்து மேகங்களில் மறைந்து, பொழுது புலரும் சித்திரத்தோடு தொடங்குவது. இவ்வாறான ஒலிச்சித்திரங்களுக்கு பெயர் போனவர் ஹைடன்.

அது போலவே அவரது நகைச்சுவைக்கும் பெயர்போனவர். இசையிலும் அவரது நகைச்சுவை துணுக்குகள் அடிக்கடி வெளிப்படுபவை. Le Matin துவக்கப்பாடலின் ‘மீள் பகுதி’ ஒரு எடுத்துக்காட்டு.


நமது பாடல்களில் பல்லவி, சரணம் மீண்டும் பல்லவி என்பது போலவே, மேற்கிசைப் பாடல்களும் exposition, development, recapitulation (துவக்கம், வளர்ச்சி, மீள்) என மூன்று பகுதிகளால் ஆனது. சரணம் முடிந்து மீண்டும் பல்லவி வருவதைப் போலவே, பொதுவாக மேற்கிசையில் வளர்ச்சிப் பகுதி முடிந்தவுடன் துவக்கப்பகுதி மீண்டும் ஒலிக்கும்.

இப்பாடலில் துவக்கத்தில் சூரியனின் உதயத்தை தந்திக்கருவிகள் சுமார் ஒரு நிமிடத்திற்கு வழங்குகின்றன. சூரியன் மெதுவாக எழும் அழகு. பிறகு பொழுது புலர்ந்ததாக ஒலிக்கும், பாடலின் மைய மெட்டை, குழலிசை சுமார் ஒரு நிமிடத்தில் துவங்கி  வழங்குகிறது.

தமிழ்சினிமாவில்  கதாநாயகனின் அறிமுகக் காட்சிகளுக்கு நாம் பழக்கப்பட்டு விட்டோம். எனவே காமிரா செல்லும் கோணத்திலேயே இப்போது கதாநாயகன் பிரசன்னமாகப் போகிறான் என்பது தெரிந்துவிடும். சிலவேளைகளில் கதாநாயகன் தோன்றாமல் காமெடி நடிகர் தோன்றும் எதிர்பாரா ‘திருப்பங்கள்’ வேறு செய்வார்கள்.

இதைப்போன்ற ஒன்றை இப்பாடலில் ஹைடன் செய்கிறார். பாடலில் வளர்ச்சிப்பகுதி முடிவடையத் துவங்கும் போது, பாடல் தரையிரங்கும் போது, நாம் குழலிசையை எதிர்பார்க்கும் போது, ஒரு சிறிய நகைப்பான Horn இசைத்துணுக்கு ஒலித்துவிட்டு பிறகு குழலிசை மைய மெட்டை ஒலிக்கத்துவங்குகிறது.

காலைப்பொழுதின் உற்சாகமா, Horn இசைக்கலைஞருக்கும் ஒரு பங்களிக்கும் உத்தியா..


1799 வருடம் தனது 29 வயதில், பீதோவன் தனது செவிகளில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுவதால் மருத்துவரைச் சந்திக்கிறார். தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொண்டும் பயனில்லை. பிறகு சிகிச்சைகள் பெரிதளவில் பயனின்றி அவரை மருத்துவர்கள் கொஞ்சம் செவிக்கும் உடலுக்கும் ஓய்வளிக்கச் சொல்கிறார்கள்.

வியன்னா நகரை ஒட்டிய கிராமப்புறத்தில் ஓய்வெடுக்கும் பீதோவன் தனது சகோதரர்களுக்கு உயில் எழுதுகிறார். அவர்கள் தனது சிக்கலைத் தெரிந்து கொள்ளவில்லை என்றும், தனது செவிச்சிக்கலால் தனது வாழ்க்கை பாழாகி விட்டது எனவும்,  கலையும் ஒழுக்கமுமே தான் இன்னும் தற்கொலை செய்யாமல் தடுப்பவை என்றும், தனது சிறிய சொத்துக்களைப் பங்கிட்டுக் கொள்ளுமாறும் பீதோவன் எழுதுகிறார். ஆனால் கடிதத்தை அனுப்பவில்லை.

பிறகு இரு ஆண்டுகளில் தனது அடுத்த சிம்பொனியை (அவர் ஏற்கனவே இரண்டு சிம்ஃபொனிகளை வெளியிட்டு பெரும் புகழை அப்போதே அடைந்தும் விட்டார்), அதாவது தனது மூன்றாவது சிம்ஃபொனியைத் திட்டமிடுகிறார். இம்முறை தனது சிம்ஃபொனி முற்றிலும் புதிய பரிமாணத்தைக் கொண்டதாகவும், இதுவரையிலான பாணிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமைய வேண்டும் என்றும் உறுதி கொள்கிறார். அவரது Eroica (Heroic) சிம்ஃபொனி பிறக்கிறது.


ஒரு நாயகனுக்கான சிம்ஃபொனியாக பீதோவன் Eroicaவை கற்பனை செய்துள்ளார். அந்த நாயகன் யாரென்பதும் இன்று தெரிந்த ஒன்று. ஃபிரஞ்சு புரட்சியில் ஈர்க்கப்பட்ட அவர், நெப்போலியன் மீது மதிப்புக் கொண்டிருந்தார். எனவே இந்த சிம்ஃபொனியை நெப்போலியனுக்கு சமர்பிப்பதாகத்தான் முடிவு செய்திருந்தார்.

இச்சிம்ஃபொனிக்கான அவரது இசைக்குறிப்பின் முதல் பக்கத்தில் நெப்போலியன் பெயரைக் கூட எழுதியிருந்தார். ஆனால் எப்போது நெப்போலியன் தன்னைத்தானே சக்ரவர்த்தியாக அறிவித்தாரோ அப்போது  நெப்போலியன் மீதான பீதோவனின் மதிப்பு தகர்ந்தது. மக்களாட்சியின், சகோதரத்துவத்தின்பால் நம்பிக்கை கொண்டிருந்த பீதோவன், எல்லோரையும் போல நெப்போலியனும் முடியாசை கொண்டவர்தான் என்று வெறுத்துப் போனார். நெப்போலியன் பெயரைக் குறிப்பிட்டிருந்த முதல் பக்கத்தைக் கிழித்தும் விட்டார்.


ஹைடன் Baroque பாணியிலிருந்து Classical பாணிக்கு இசையின் ஓட்டத்தை மடைமாற்றியவர் என்றால், பீதோவன் classical பாணியிலிருந்து romantic பாணிக்கு இசையின் கால ஓட்டத்தை மடைமாற்றியவர். அதன் துவக்கமாக இந்த Eroica சிம்ஃபொனியைச் சொல்லலாம்.

ஏனெனில் Eroica தான் எடுத்துக்கொண்ட ‘நாயகன்’ எனும் பொருளுக்கேற்ப அனைத்திலும் பிரம்மாண்டம். அதன் அளவில் அக்காலத்திய சிம்பொனிகளை விட இரு மடங்கு நீளமானது. அதன் உள்ளடக்கத்தில் அடர்த்தியானது. 

Eroica சிம்பொனி அரங்கேறிய போது அதற்கான எதிர்வினை இன்று நோக்க ரசமானது. ஒரு புறம், இதனை இப்போது புரிந்து கொள்ள மாட்டார்கள் ஆனால் ஆயிரம் வருடம் சென்றால்தான் இதன் மதிப்பு புரியும் என்று ஆரூடம் சொன்ன பீதோவன் ரசிகர்கள். நன்றாகத்தான் இருக்கிறது, கொஞ்சம் நீளத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்று சொன்ன மத்தியஸ்தர்கள். ‘காசு கொடுக்கிறேன் நிப்பாட்டுங்கள்’ என்று நடுஇசையில் கூச்சலிட்ட நிகழ்வுகள் என அனைத்து வகையான விமர்சனங்களையும் சந்தித்தது Eroica. 

இதில் அதிசயமில்லை. ஏனெனில் அக்காலகட்டத்தின் விறுவிறுப்பான இசையான, ஹைடன், மோசார்ட், பீதோவனால் வளர்த்தெடுக்கப்பட்ட Classical பாணி இசைக்கு நேர்மாறாக மிக அடர்த்தியான பாணியிலான இசையாக Eroica அமைந்தது.


Eroica இசையின் முதல் பாடலே ஒரு முழு ஹைடன் சிம்ஃபொனி அளவிற்கு நீளமானது எனக்காணலாம். முதல் பாடலின் துவக்கத்திலேயே ஒரு நாயகனுக்கான மையமெட்டை(hero’s theme) பீதோவன் தந்துவிடுகிறார்.

பிறகு பாடல் பிரம்மாண்டமாக வளர்கிறது. வெவ்வேறு பகுதிகள், வெவ்வேறு கருவி இழைகளில் வளர்கின்றன. பாடலின் முக்கால் பகுதிக்கு நாம் வரும் போது மீண்டும் துவக்கப்பகுதி நோக்கிய நகர்வை பீதோவன் ஆரம்பிக்கிறார். துவக்கம் என்பது நாயகனின் மெட்டுதானே. எனவே நாம் மீண்டும் நாயகனின் வருகைக்கு ஆயத்தமாகிறோம்.

ஆனால் அவ்வளவு எளிதாக விடுவாரா பீதோவன். நாயகனின் வருகையை அதன் எதிர்பார்ப்பை, பதட்டத்தை அதிகரிக்கிறார். சுமார் ஒன்பதாவது நிமிடத்திலிருந்து மூன்று நிமிடங்கள் நாயகனுக்கான காத்திருக்கிறோம். கடைசியில் சரியாகப் பன்னிரெண்டாவது நிமிடத்தில் வராது வந்த நாயகன் உதயமாகிறான். மையமெட்டு வருகிறது.  ஆனால் அதன் வரவு நம்மைத் துணுக்குறச்செய்கிறது. மீண்டும் அதே எதிர்பாராத சிறிய Horn இசைத்துணுக்கு மீள்பகுதியைக் குறிக்கிறது.

ஆனால் இம்முறை இது நகைப்புக்கானது அல்ல..மாறாக நாயகனின் வருகையை மேலும் மெருகேற்ற அமைக்கப்பட்டது. 


இந்த சிறிய Horn துணுக்கு நம்மை மட்டும் துணுக்கில் ஆழ்த்தவில்லை. முதன் முதலில் இவ்விசையை பயிற்சி செய்த போது பீதோவனின் உதவியாளர் இந்த Horn இசையால் துணுக்குற்றார். அதனை வாசித்தவர் முந்திக்கொண்டு தவறாக வாசித்துவிட்டார் என்று நினைத்து, Horn இசைத்தவரை திட்டிவிட்டார் பீதோவனின் உதவியாளர்.

கடுங்கோவக்காரரான பீதோவனிடம் அந்த உதவியாளர் வாங்கிக்கட்டிக் கொண்டதில் அதிசயமில்லை.

இது அவரது உதவியாளரின் வாக்குமூலம்

“During the first rehearsal of this symphony, which went appallingly, the horn player, however, came in correctly.  I was standing next to Beethoven and, thinking it was wrong, I said, ‘That damned horn player! Can’t he count properly?  It sounds infamously wrong!’  I think I nearly had my ears boxed – Beethoven did not forgive me for a long time.”  


***************************************************************************

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: