பீதோவன் முடிவும் ஸ்ட்ராஸ் துவக்கமும்

பீதோவன் என்ற பெயரோடு பொதுவாக நினைவுக்கு வருவது அவரது சிம்ஃபொனி இசை.  இன்று உலகம் முழுதும் அவரது ஒன்பது சிம்ஃபொனி இசைத்தொகுப்புகள் பிரபலமானவை.

ஆனால் அவரது இசைப்படைப்புலகின் மையமாக கருதப்படவேண்டியவை, அவர் இயற்றிய பியானோ சொனாட்டாக்கள்.

பீதோவன் மொத்தம் முப்பத்தியிரண்டு சொனாட்டாக்களை இயற்றியுள்ளார். இவை அவரது வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் இயற்றப்பட்டவை. அவரது இசை மற்றும் ஆன்மத் தேடலின் வெளிப்பாடாக விளங்குபவை.


ஹைடனின் மாணவரான அவர், தனது இருபத்தைந்தாவது வயதில் முதல் சொனாட்டாவை இயற்றுகிறார். ஆசிரியரிடத்தில் சில மனக்கசப்புகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், தனது முதல் சொனாட்டாவை ஆசிரியர் ஹைடனுக்கே சமர்ப்பிக்கிறார்.

முதல் சொனாட்டாவில், பீதோவன் எனும் இளம் இசைக்கலைஞர், தனது ஆசிரியரிடம் கற்றுக்கொண்ட இசையை, சொனாட்டா இசைவடிவத்தை நேர்த்தியாகவும், முனைப்போடும் வழங்குவதை நாம் உணரலாம்.

அங்கிருந்து துவங்கும் அவரது சொனாட்டா படைப்புலகம் (1795-1822), சொனாட்டா எனும் வடிவம், அதன் வெளிப்பாடு, அதன் அழகியல் சாத்தியங்கள், அதில் இடம்பெறும் கருவியான பியானோவின் பயன்பாடு என இவையனைத்தையும்  விரிவாக்கி, வளைத்து, உருமாற்றி, விருட்சமாக வளரச்செய்து வழங்குவதை இன்று நாம் சொனாட்டா வரிசைகளைக் கேட்டு உணரலாம்.

எனவேதான், மேற்கத்திய இசையின் “பழைய ஏற்பாடாக” ஜோசஃப் பாக் இயற்றிய Well tempered clavier இசைத்தொகுப்பு கருதப்படும்போது.. பீதோவன் இயற்றிய பியானோ சொனாட்டாக்கள் மேற்கிசையின் “புதிய ஏற்பாடாக” கருதப்படுகின்றன (Old\New testaments of Western Classical Music)


தனது இறுதி காலத்தை பீதோவன் நெருங்கும் போது,  அவரைப் பாடாய்படுத்திய  செவிக்கோளாறு, சுற்றத்தினரால் உண்டான மனக்கசப்புகள் என சிக்கலான தினவாழ்வு ஒருபுறம், மறுபுறம் அவரது நீண்ட இசைவாழ்வின், ஆன்மத்தேடலின் வழி அவருக்கு கிட்டும் உயர்தளங்கள். இன்று மனித படைப்புகளின் சிகரங்களுள் ஒன்றாக, பல இசையாசிரியர்கள் விதந்தோதும் பீதோவனின் இறுதி பியானோ சொனாட்டா, அவரது வாழ்வின் இத்தகைய தருணத்தில் இயற்றப்பட்டது.  

இந்த சொனாட்டாவை அற்புதமாக Daniel Barenboim இசைக்கும் காணொளி…


இந்த இறுதி சொனாட்டா இருபாடல்களால் ஆனது.

சொனாட்டாவின் முதல் பாடல் (சுமார் பத்து நிமிடங்கள்)  கொந்தளிப்பான இசை. பலரால் இது பீதோவனின் அக்கால சிக்கல்களின் பின்னணியில் எழுந்த இசை என்பபடுகிறது. அதை அவர்தான் உறுதியாகச் சொல்ல முடியும்.

இப்பாடலில் பீதோவன் பியானோ எனும் கருவியோடு, கிட்டத்தட்ட போராடுகிறார். அதன் கீழ் சுவரங்களிலிருந்து மேல் வரை, அதன் சன்னமான ஒலிகளிலிருந்து அதன் பேரொலிகள் வரை. அதன் பல்வேறு மீட்டல் முறைகளை. அதன் போதாமைகளை, அதன் எல்லைகளை மீற முயல்கிறார். அந்த ஒற்றைக் கருவி ஒரு ஆர்கெஸ்ட்ராவாக உருவெடுக்கிறது.

தனது  கொந்தளிப்பான, தாள, தொனி, கருவியிசை அமைப்பின் மூலம் ஒரு மாபெரும் பதைபதைப்பை முதல் பாடல் உருவாக்கிவிடுகிறது.

முதல் பாடல் ஒரு முடிவின் கொந்தளிப்பென்றால் இரண்டாவது பாடலின் துவக்கத்திலேயே பிரளயம் முடிந்த புதிய உலகின் விடியலுக்கு வந்து சேர்ந்து விடுகிறோம். முதல் பாடல் முடிவடைந்து இரண்டாவது பாடல் துவங்கும் கணம் இசையால் மட்டுமே சாத்தியமாகக் கூடியது.

முதற்பாடலின் கொந்தளிப்பிற்கு நேரெதிராக ஒரு ஆன்ம அமைதியின், புதிய துவக்கத்தின் அதன் மகிழ்வின் வெளிப்பாடாக, இரண்டாவது பாடல் ஒரு புதிய உலகமாகவே அவரால் கட்டியெழுப்பப்படுகிறது.

மேலும் பாடலில் சுரங்களின் தாள அளவுகளைக் குறைத்துக் கொண்டே வரும் போது, ஒரு கட்டத்தில் நமது செவி அதிசயிக்கும் வண்ணம், திடுமென இருபதாம் நூற்றாண்டின் Rag Time தாளக்கட்டு தோன்றிப் பரவசப்படுத்துகிறது (சுமார் 17ம் நிமிடம்) . தனக்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகான இசை, இக்கலைஞனின் எல்லையற்ற கற்பனையில் தட்டுப்படுகிறது.

இந்த இறுதி சொனாட்டாவில் இடம்பெறுபவை இரு பாடல்களே. பொதுவாக அவரது சொனாட்டா தொகுப்புகளில் மூன்று பாடல்கள் இடம்பெறும். ஆனால் இந்த இறுதி சொனாட்டாவில், இருபாடல்களில் பீதோவன் நிறுத்திக்கொள்கிறார். அவருக்கு இதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை.


இத்தகைய ஒரு சொனாட்டாவிற்கு பீதோவன் தேர்ந்தெடுத்த தொனிமையம் குறிப்பாகப் பார்க்க வேண்டியது.

முதல் பாடல் C Minor, இரண்டாவது பாடல் C Major.

இசையில்  Major key மகிழ்வும், வெளிச்சமும், நேர்மறையான போக்கும் கொண்டது எனவும், Minor  Key இசையில் சோகமும், இருளும், எதிர்மறையான போக்கினை வெளிப்படுத்த உதவுவது பொதுவான கருத்து.

தனது இறுதி சொனாட்டாவை இருமையில் கட்டமைக்க விரும்பும் பீதோவன் முதல் கொந்தளிப்பான பாடலை C Minor key இல் அமைக்கிறார். இரண்டாவது பாடலை C Major Key இல் அமைக்கிறார். இதுவே இசையின் இறுதி எல்லை என்று கருதத்தக்க ஒரு பிரம்மாண்டமான படைப்பு, இசையின் மிக அடிப்படையான C சுவர தொனிமையத்தில், அவற்றின் Major, Minor இருமையில் நிலை கொண்டிருக்கிறது, அதன் மூலம் சமநிலைக்கு விழைகிறது.


1896 வருடம் இசையுலகின் புதிய நட்சத்திரமாகக் கருதப்பட்ட ரிச்சர்ட் ஸ்ட்ராஸ், Thus Spoke Zarathustra என்ற நீட்சே எழுதிய புத்தகத்தை இசைபாடலாக இயற்றி வழங்குகிறார்.

இதன் துவக்கம் இன்று உலகப்புகழ்பெற்றது. 2001 Space Odyssey  திரைப்படத்தில் இடம்பெற்றதன் மூலம் சென்ற நூற்றாண்டின் மிகப்பிரபலமான இசைத்துணுக்காகியது.

ஸ்ட்ராஸ் இதில் ஒரு புதிய துவக்கத்திற்காக இசையமைக்கிறார். இது கதையின் நாயகனான Zarathustraவின் அறிமுகத்திற்கான துவக்கமாக மட்டுமல்ல, ஸ்ட்ராஸிற்கு இசையாகவும் புதிய மொழி தேவைப்படுகிறது.

கதைப்படி ஒரு சூரிய உதயத்தை  ஒரு புதிய உலகத்தின் தோற்றத்தைக் குறிக்கும் அதேவேளையில், ஒரு புதிய இசைமொழியின் தோற்றத்தையும் குறிக்கும் இசையாக இதனை அமைக்கிறார்.


ஒரு சிறிய இசைநுட்பக் குறிப்பு இங்கே..

ஒரு Chord என்பது மூன்று சுவரங்களின் கூட்டு.

C Major chord – C, E, G எனும் மூன்று சுவரங்களால் ஆனது.

C Minor chord – C, Eb, G எனும் மூன்று சுவரங்களால் ஆனது.

இவையிரண்டின் வேறுபாடு நடுவில் தோன்றும் E அல்லது Eb சுவரமே

Major மகிழ்வு, Minor சோகம் என்பதான இருமையை இங்கே மீண்டும் நினைவில் கொள்வோம்.


Thus Spoke Zarathrusta பாடலின் துவக்கம் C G C சுவரங்களில் துவங்குகிறது.

இப்போது E அல்லது Eb இரண்டில் ஒன்று வந்தால் பாடலின் போக்கு உறுதியாகிவிடும். அதாவது பாடல் நேர்மறையா அல்லது எதிர்மறையா? இது Major Mode இசையா Minor Mode இசையா? இந்த கேள்விக்கு விடை அடுத்த சுவரத்தில் இருக்கிறது.

எதிர்பார்த்தபடி அடுத்த சுவரமாக E சுவரம் விழுகிறது. ஆனால் நாம் Major Chord என்று நிறைவாகும் முன்னர்,  உடனடியாக அடுத்த சுவரமாக, விழுந்தடித்து Eb சுவரம் தோன்றுகிறது. அதாவது நாம் Major, Minor என்று உறுதி செய்ய முடியாத குழப்பத்திற்கு ஆளாகிறோம். இருளா, வெளிச்சமா..உறுதியில்லை.

அடுத்த வரி மீண்டும் C G C…இப்போதாவது குழப்பம் தீருமா என்றால் இப்போது தலைகீழாக முதலில் Eb, பிறகு E.

அதாவது முதல் வரிசையில் Major, Minor என்று அடுத்தடுத்து அமைத்து ஒரு நிலையின்மை.  இரண்டாவது வரிசையில் Minor, Major என்றமைத்து மீண்டும் ஒரு நிலையின்மை. இந்த இரு நிலையின்மைகளைக் கொண்டு ஒரு சமநிலையைத் தோற்றுவிக்கிறார் ஸ்ட்ராஸ்.

இசையின் மீளமுடியா எல்லை போலவே, இசையின் புதிய உலகின் துவக்கமும் அடிப்படையான Major, Minor என்னும் இருமையின் தீராத சாத்தியங்களின் வழியாக வெளிப்படுகிறது.

****************************************************************************

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: