“Watch the Harmony….Watch the Bass line….Watch the Root progressions” –
Arnold Schoenberg
மேலுள்ள துணுக்கைக் கேட்கும் போது, பாடல்வரிகளைக் கடந்து, உணர்வனுபவங்களைக் கடந்து, கருவி மற்றும் குரலின் வண்ணப் பூச்சுக்களைக் கடந்து, மேலுள்ள வெறும்கூடான ஒலியனுபவத்தில், ஒரு ஒழுங்கும், முதலில் இருந்து இறுதி வரை குழப்பமற்ற சீரான ஓட்டமும் கொண்டதாக நம்மால் உணர முடிகிறதல்லவா.
தனக்கான துவக்கப்புள்ளிகள் (“பனிவிழும் இரவு”), உச்சப்புள்ளிகள் (“தனிமையே போ இனிமையே வா”), நிறைவுப்புள்ளிகள் (“நீரும்,வேரும் சேர வேண்டும்”) மற்றும் இப்புள்ளிகளுக்கிடையிலான தெளிவான நகர்வு என, பாடலின் ஒழுங்கு ஒரு புறம். மறுபுறம் இப்பாடல் இடம்பெறும் திரைக்காட்சிக்குப் பொருத்தமாக இசையில் சாத்தியமாகும் உணர்வுகள். இந்த மாயம் எவ்வாறு நிகழ்கிறது…
சென்ற பகுதியில் Baroque காலப் பல்லிழை இசையை, Classical காலம் இருதள Homophonic இசையாக மாற்றியது எனப்பார்த்தோம்.
இந்த இரு தளங்களில் Melody மேல்தளம், Harmony அதன் பின்புலத்தை வழங்கும் கீழ்தளம். இப்பகுதியில் கீழ்தளமான Harmony குறித்து முதலில் காண்போம். (இங்கு இத்தொடருக்குத் தேவையான Harmony கோட்பாட்டுக் குறிப்புகள் மட்டுமே உள்ளன. இக்கட்டுரை புரிந்து கொள்ள சிலருக்குத் தடையாக இருக்கலாம். கோட்பாடுகளைக் கடந்து 19,20 ஆகிய இரு குறிப்புகளில் உள்ள எடுத்துக்காட்டுகள் வரும் பகுதிகளுக்கு முக்கியமானவை)
இத்தொடரில் ஏற்கனவே தொனியியல் குறித்து விரிவாகக் கண்டுள்ளோம். அதனடிப்படையில் எழுபவையே Harmony சார்ந்த கோட்பாடுகள்.
1. சத்தமும் சுவரமும் :
ஒரு ஒலி, நிலையான அலைவரிசையில் (Constant frequency) ஒலிக்கும் போது அது சுவரமாகிறது. நிலையற்ற ஒலியை சத்தமாக நாம் உணர்கிறோம்.
2.சுவரமும் உபசுவரங்களும்:
ஒரு சுவரம், அறிமுறையில் (theoretically) ஒற்றை அலைவரிசை ஒலி. ஆனால் நிகழ்முறையில் (practically) நாம் ஒரு சுவரத்தை இசைக்கும் போது (கருவியிலோ, குரலிலோ) அதனுடன் பிற சன்னமான அலைவரிசைகள் எழுகின்றன. ஒரு சுரத்தில் எழும் உப அலைவரிசைகள், அந்த சுரத்தின் முழுமடங்குகளாக அமைகின்றன.
X, 2X, 3X, 4X… (where X is the fundamental frequency)
உதாரணமாக, 110hz அலைவரிசை கொண்ட ஒரு சுரத்தில் பிறக்கும் உபசுரங்கள் பின்வரும் வரிசையில் அமைகின்றன.
110Hz, 220, 330, 440, 550…
இசையில் இதனோடு நேரடி கணிதம் முடிந்துவிடுகிறது. எண்களுக்கு அலைவரிசைகளுக்கு பதிலாக, அவற்றை ச,ரி,க, ம என்றோ C, D, E , F என்றோ சுரப்பெயர்களாக வழங்குகிறோம்.
3. இயற்கையின் சுவரவரிசை (Natural Series):
மேலே நாம் காணும் ஒலியின் நிகழ்வைக் கொண்டு, C எனும் சுவரத்தில் இயற்கையாக எழும் உபசுரங்கள் கீழுள்ள வரிசையில் கிடைக்கின்றன. இயற்கை வழங்கும் சுவர வரிசை இதுவே.
(natural series) F C G D A E B == ம ச ப ரி த க நி
(C சுவரத்திலிருந்து பிற சுரங்கள் பிறப்பதைப் போல F சுவரத்தில் C பிறக்கிறது)
4. இசைக்கான வரிசை (Musical Scale):
மேலுள்ள வரிசையை இயற்கை வழங்கினாலும், மனிதன் பாடுவதற்கு உகந்ததாக இதனைப் படிப்படியாக உயரும் சுவரவரிசையாக மாற்றிக் கொள்கிறான். இதற்கு Scale (ஏணி எனும் பொருளில்) என்றும் பெயரிட்டுக் கொள்கிறான். இயற்கையை தனது நன்மைக்கு மனிதன் வளைத்து கொள்வது புதிதல்லவே.
(Diatonic Series) C D E F G A B == ச ரி க ம ப த நி
5. பிற சுவரங்களின் வரிசைகள்:
நாம் எவ்வாறு C சுவரத்திலிருந்து பிறந்த சுவரங்களைக் கண்டோமோ, போலவே, அதன் முதல் வாரிசான G சுவரத்திலிருந்து பிறக்கும் சுவரங்களை எடுத்துக்கொண்டால் பின்வரும் வரிசை கிடைக்கிறது.
G A B C D E F#
இவ்வரிசையில் புதிதாக ஒரு சுவரம் கிடைக்கிறது. இந்த சுரம் F மற்றும் G சுவரத்திற்கு நடுவிலான அலைவரிசையில் கிடைக்கிறது. இது F sharp என்று குறிக்கப்படுகிறது.
இவ்வாறு C, G சுவரங்களைப் போலவே ஒவ்வொரு சுவரத்திலிருந்து பிறக்கும் சுவரங்களைக் கொண்டு நாம் வரிசைப் படுத்தினால், பின் வரும் சுர வரிசைகள் கிடைக்கின்றன.
6. Circle of Fifths:
இந்த சுரவரிசைகள் ஒரு வட்ட வரிசையாக அமைகின்றன. C சுவரத்தில் ஆரம்பித்து, அதன் வாரிசுகள் வழிச் சென்றால் இறுதியில் C சுவரத்திற்கு வரிசை வந்து முடிகிறது. எனவே இவ்வரிசை Circle of fifths எனப்படுகிறது.
7. சுவர வரிசைகள் – அருகாமையும், தொலைவும்
இந்த Circle of fifth வரிசைப்படி, ஒரு சுவர வரிசை அதற்கு முன்னும் பின்னும் அமையும் சுவரவரிசைக்கு நெருங்கிய தொடர்புடையதாகிறது. உதாரணமாக C, G, F ஆகிய சுவர வரிசைகளை எடுத்துக்கொள்வோம்.
C – C D E F G A B G – G A B C D E F# F – F G A Bb C D E
இந்த மூன்று சுவர வரிசைகளில C வரிசைக்கும் பிற இரண்டு வரிசைகளுக்கும் அடிப்படையில் ஒரு சுவரமே வேறுபடுகிறது. எனவே C, G, F வரிசைகள் நெருங்கிய தொடர்புடையதாகின்றன. பிற வரிசைகள் ஒப்பீட்டளவில் தொலைவில் உள்ளவை.
8. மையநாட்ட விசை (Centripetal force)
மேலே காணும் சுவர வரிசைகள் தங்கள் முதல் சுவரத்திலிருந்து பிறக்கின்றன எனக்காண்கிறோம். எனவே இயல்பாகவே தங்கள் முதல் சுவரத்திற்கு அவை ஈர்க்கப்படுகின்றன. உதாரணமாக CDEFGAB வரிசையில் அனைத்து சுவரங்களும் C சுவரத்தால் ஈர்க்கப்படுகின்றன. இதனால் C சுவரம் தனது சுவரவரிசையின் தொனி மையமாகிறது (Tonal Center).
C Attracts D, E, F, G, A, B.
9. மையவிலக்கு விசை (Centrifugal force)
அதே வேளையில் அவை மைய சுவரத்தின் ஈர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கவும் விழைகின்றன. குழந்தைகள் பெற்றோரிடம் தஞ்சமடையவும், தப்பிக்கவும் கொள்ளும் விழைவு போல.
D E F G A B try to escape C
இவ்வாறு தப்பிக்க விழையும் சுரங்கள் எங்கு தப்பிக்க முடியும் என்று ஊகித்தல் எளிதானது. ஆம் அவை Circle of fifth வரிசைப்படி அருகாமையில் உள்ள G, F மையத்திற்கு எளிதாகத் தாவலாம். கொஞ்சம் முனைந்தால் பிற மையங்களுக்குத் தாவலாம்.
10. இசையின் விசைகள்
இந்த மைய ஈர்ப்பு மற்றும் விலக்கு விசைகளே இசையில் நாம் கேட்டு உணரும் விசைச் சக்திகள். நாம் கேட்கும் அனைத்து இசையிலும் சில பகுதிகள் இறுக்கமடைவதையும் (tension) அதனைத் தொடர்ந்து நிறைவுகளையும் (Resolution of tension) உணரலாம். இதன் பின்னணியில் சுவரங்களின் விலக்கும் ஈர்ப்பும் இயங்குகின்றன. சுவரங்கள் ஒரு தொனிமையத்திற்கு சென்று சேர விழையும் போதும், தொனிமையத்திலிருந்து தப்பிக்க முனையும் போதும் ஒரு இறுக்கமும், ஒரு தொனிமையத்தில் தஞ்சமடையும் போது நிறைவும் ஏற்படுகின்றன.
11. Harmony
இந்த விசைச்சக்திகளை முறையாகப் பயன்படுத்த இசையில் பல்வேறு உத்திகள் உள்ளன. (முற்காலத்தில் Consonance, Dissonance என்றும் நட்பு, பகை என்றும் இந்த ஈர்ப்பு புரிந்து கொள்ளப்பட்டது.) ஆனால் இந்த ஈர்ப்பு விசைகளை நேர்த்தியாகக் கையாள, மேற்கிசை கண்டறிந்த சாதனமே Harmony.
Harmony என்பது பலசுவரங்கள் ஒரே நேரத்தில் சேர்ந்திசைப்பது என்பது அதற்கான விளக்கமாகக் கொள்ளப்படுகிறது (More than one note played at the same time). ஆம் நிகழ்முறையில் இந்த விளக்கம் சரிதான்.
ஆனால் இவ்வாறு சுரங்கள் கூட்டாக ஒலிக்கும் போது அவை தொனிமையத்தின் நாட்டத்திற்கு உதவுகிறதா, அல்லது தொனிமையத்திலிருந்து விலக உதவுகிறதா என்பதே Harmony இசையின் நுட்பமான தத்துவம்.
12. Chords
Harmony இசையின் மையக்கருவி Chords. Chords என்ற பதம் அனேகமாக இசைகேட்கும் அனைவரும் அறிந்ததே. ஒரே நேரத்தில் ஒலிக்கும் பலசுவரங்களின் கூட்டு Chords எனப்படுகிறது.
இயற்கையில் மூன்று சுவரங்களே ஒரே நேரத்தில் இசைக்க இணக்கமானவை. (இன்றைய காலகட்ட இசையில் ஓரே நேரத்தில் கணக்கற்ற சுவரங்கள் இசைத்தாலும், அவற்றில் மூன்று சுவரங்கள் மட்டுமே உண்மையாகச் சேர்ந்து இயங்குபவை)
13. Triads of C
Triad என்பது மூன்று சுவரங்கள் சேர்ந்த சுவரக்கூட்டு. மேலும் ஒரு சுவரத்தின் மேல் அதன் மூன்றாவது (thirds) சுரங்களை அடுக்குவதன் மூலம் கிடைக்கும் சுவரக்கூட்டு. (இதுவே இயற்கையான Chord எனக்கொள்ளப்படுகிறது. ஏன் என்பதற்கு பெரிய விளக்கம் தேவைப்படுமாகையால் மேலே செல்வோம்)
C சுவர வரிசை – C D E F G A B
மேலுள்ள C சுவர வரிசையை எடுத்துக்கொண்டால், முதல் சுவரமான C சுவரத்தின் மேல் மூன்றாவது சுவரமான E, பிறகு அதிலிருந்து மூன்றாவதான G சுவரம். இவை மூன்றும் சேர்ந்த CEG சுவரக்கூட்டு, C major chord என்றழைக்கப்படுகிறது.
இவ்வாறு ஒரு ஏழு சுவர வரிசையில், ஒவ்வொரு சுவரத்திலும் ஒரு சுவரக்கூட்டை நாம் அமைக்க முடியும். எனவே நமக்கு ஏழு triadகள் கிடைக்கின்றன.
14.வேர்ச்சுவரம் – Root of Chord
ஒரு சுவரக்கூட்டில், எந்த சுவரத்தின் மேல் அந்த சுவரக்கூட்டு எழுப்பப்படுகிறதோ, அந்த சுவரமே அதன் வேர்ச்சுவரம். நாம் மேல்கண்ட Triad காணொளியில் கீழே குறிக்கப்பட்டுளது, ஒவ்வொரு சுவரக்கூட்டின் வேர்ச்சுரம். ஒரு சுவரக்கூட்டில் வேர்ச்சுரமே மையமானது, மிகுந்த ஆற்றல்வாய்ந்தது.
15. Degrees of Triads
ஒவ்வொரு சுவர வரிசையின் சுவரக்கூட்டுக்கள் மாறுபட்டாலும் அவை தனது நிலைஇருப்பைக் கொண்டு (Position), ஓரே தன்மையை சார்ந்ததாகின்றன.
C சுவர வரிசையின் முதல் chord, C major chord. போலவே F சுவர வரிசையின் முதல் chord, F major chord.
ஒரு சுவர வரிசையின் முதல் Chord, Tonic chord என்றழைக்கப்படுகிறது. இந்த Chord இசைத்தாலே நாம் எந்த தொனி மையத்தில் இருக்கிறோம் என்று உணரலாம். உலகின் அனேகமாக அனைத்து இசையும் பெரும்பாலும் Tonic Chordல் துவங்குபவையே.
இந்த Tonic chord, I Chord எனக்குறிக்கப்படுகிறது. போலவே ஏழு சுவரக்கூட்டுகளுக்கு, எண்களும் அவற்றின் செயல்பாட்டிற்கேற்ப பெயர்களும் உள்ளன. இந்த Degree மற்றும் பெயர்கள் சுவரக்கூட்டுகளின் இயக்கத்தைச் சுட்ட பயன்படுகின்றன.
16. Cadence
C major Chord, C சுவர வரிசையின் Ist Degree Chord என்றும், அதனை இசைத்தால் நாம் C தொனி மையத்தில் இருக்கிறோம் என்றும் உணரலாம் என்றோம். ஆம் சரிதான். ஆனால் அதே Chord பிற சுவரவரிசைகளிலும் (ஆனால் வேறு Degreeஇல்) இடம்பெறுகிறதே!
உதாரணமாக நாம் C மற்றும் F சுவரவரிசைகளை எடுத்துக்கொள்வோம்…இரண்டிலும் C major chord உள்ளது.
எனில் நாம் ஓரே ஒரு C Major chordஐ இசைத்தால், அது C சுவர வரிசையைச் சார்ந்ததாகக் கொள்வதா, அல்லது அதனை F சுவர வரிசையைச் சார்ந்ததாகக் கொள்வதா?
இது குழப்பம்தான். C major Chordஐ நாம் கேட்டால், நமது செவி C தொனிமையத்தில் இருப்பதாக உணரும். ஆனால் உறுதியாக அல்ல. இவ்வாறு உறுதியற்ற நிலையைப் போக்கி நாம் ஒரு தொனிமையத்தில் இருப்பதை வலுவாக உறுதி செய்வது எப்படி.
இப்பணியைச் செய்வதே Cadence எனும் குறிப்பிட்ட Chord வரிசை பிரயோகம்.
17. Perfect Cadence
நாம் மீண்டும் C, F, G சுவர வரிசைகளை எடுத்துக் கொள்வோம்..
C – C D E F G A B G – G A B C D E F# F – F G A Bb C D E
C சுவர வரிசையில் இருக்கும் F சுவரம், G சுவரவரிசையில் இல்லை (F# மட்டுமே உள்ளது).
C சுவர வரிசையில் இருக்கும் B சுவரம், F சுவரவரிசையில் இல்லை (Bb மட்டுமே உள்ளது).
எனவே நாம் C தொனிமையத்தில் இருக்கிறோம் என்பதை உறுதியாக நமது செவிக்கு பறைசாற்ற, அல்லது அச்சுரங்கள் பக்கத்து சுரமையங்களில் இல்லை என உறுதியாகச் சொல்ல, B மற்றும் F சுவரங்கள் தேவை.
இதனையே I – IV – V- I எனும் சுவரக்கூட்டு வரிசை (Chord Progression) வழங்குகிறது.இந்த சுவரக்கூட்டு வரிசை நமது செவிக்கு எந்த சந்தேகமுமின்றி, ஒரு தொனிமையத்தைப் பறைசாற்றுகிறது. எனவே Harmony இசையின் ஆதாரமான வரிசையாகக் அமைகிறது. Perfect Cadence என்று அழைக்கப்படுகிறது.
I-iv-V-I சுவரக்கூட்டு வரிசையில், IV chordல் பாருங்கள் F சுவரம் இடம்பெறுகிறது. V Chordல் பார்த்தால் B சுவரம். எனவே இந்த Chord வரிசையை நாம் இசைக்கும் போது, நமது செவிக்கு சந்தேகமின்றி ஒரு தொனிமையம் உறுதிசெய்யப்படுகிறது.
ஒரு சோதனையாக நாம் I-IV-V மட்டும் இசைத்தால், நமது செவி மீண்டும் முதல் Tonic Chord வரவை எதிர்பார்ப்பதை உணரலாம். இறுதியில் மீண்டும் I chord இசைப்பது ஒரு நிறைவை, முற்றுப்புள்ளியைக் கொடுக்கிறது.
18. Half Cadence
ஒரு வேளை மீண்டும் I chord இசைக்காமல், வரிசை V chordஇல் நிறைவுற்றால்….
நமக்கு அந்த இசை ஒரு முடிவைத் தராது, முடிவை எதிர்நோக்கும் பொழுது முடிவுறாமல் தொக்கி நிற்கும் தன்மையை அவ்விசை தரும். எனவே…
I Tonic chordஇல் நிறைவுறும் இசை – Perfect Cadence எனப்படுகிறது
V chordஇல் நிறைவுறும் இசை – Half Cadence எனப்படுகிறது
19. Harmony இசையின் அடித்தளம் – Cadence
மேலே நாம் பார்க்கும் Perfect, Half Cadence ஆகியவை, ஒரு இசையமைப்பாளனுக்கு Harmony வழங்கும் முக்கியகருவிகளுள் ஒன்று. இதன் மூலம் இசையமைப்பாளன், ஒரு தொனிமையத்தில் தனது இசையை நிலைநிறுத்த முடியும், அதன் மூலம் ஒரு நிறைவைத் தர முடியும். போலவே ஒரு நிறைவை நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது அதனைத் தரமால், நமக்கு ஒரு இறுக்கத்தை, ஏக்கத்தை, திருப்பத்தைத் தர முடியும்.
உதாரணங்களைக் காண்பது இதனை மேலும் தெளிவாக்கும்
Perfect Cadence எடுத்துக்காட்டு:
Mozart Sonata – Perfect cadence Example
மேலே கண்ட துணுக்கில், துவக்கம் I chordஇல் அமைகிறது. பிறகு Mozart இதனை வளர்த்துக்கொண்டே செல்கிறார். நடுவில் ஒரு நிறுத்தம் I Chord. இறுதியில் V-I எனும் வரிசையில் ஒரு முடிவிற்கு வருகிறது. நாம் பொதுவாக எந்த ஒரு இசையிலும் முற்றுப்புள்ளிகளாக உணர்பவை, இசை தனது Tonic சுவரக்கூட்டிற்கு, அதன் மூலம் தனது தொனிமையத்திறகு திரும்பியதால் நேர்வதே.
Half Cadence எடுத்துக்காட்டு:
இப்போது பின்வரும் துணுக்கைக் கேட்போம். Beethoven இயற்றிய அற்புதமான Sonata இசையில் ஒன்றான இந்தப்பகுதியைக் கேட்கும் போதே நாம் ஒன்றை உணரலாம். இந்த மெல்லிசையில் Beethoven பல நிசப்தமான தருணங்களைத் தருகிறார். ஆனால் ஒவ்வொரு நிசப்த தருணமும் நிறைவின்றி அமைகிறது. ஆசிரியர் கேள்வி கேட்ட பின்னர் எழும் மாணவர்களின் அமைதி போல, வரிசையாக கேள்விகள், கேள்வியின் எதிரொலியில் அமைதி.
இப்போது இதன் இசைக்குறிப்புகளைக் கண்டால், இதன் பின்னணி நுட்பம் புலனாகும். ஆம் Beethoven ஒவ்வொரு கேள்வியையும் V Chordஇல் முடிக்கிறார். V Chord, பிறகு அமைதி…….V Chord, பிறகு அமைதி. நாம் ஏற்கனவே பார்த்ததைப் போல V chordஇல் முடிப்பது நிறைவின்மையை அளிக்கவல்லது. இதனையே நாம் இந்த இசையில் உணர்கிறோம்.
Beethoven Sonata – Half cadence Example
ஒரேகேள்வியை வெவ்வேறு வகைகளில் மாற்றி மாற்றி கேட்டு மாணவர்களைத் திணற வைக்கும் ஆசிரியரைப் போல, ஒரே V chord என்றாலும், அதனை வெவ்வேறு வகை வெளிப்பாடாக மாற்றும் Beethoven மாயாஜாலம் வேறு. இங்கே காணவேண்டியது இதன் அடித்தளம் Half Cadence வழங்கும் நிலையின்மையால் விளைவது.
இவ்வாறு I chord இல் முடித்து நிறைவையும், V chordஇல் முடித்து நிறைவின்மையையும் என….
நிறைவு, நிறைவின்மை, எதிர்பார்ப்பு, அதன் வழி முடிவு அல்லது, ஏமாற்றம், இறுக்கம், அதன் தளர்வு என இசைச்சுரங்கள் செவியனுபவமாக இப்புள்ளியில் தான் மாறுகின்றன. அதனை சாத்தியப்படுத்துவது Harmonic Cadential progressions.
20. Harmony இசையின் விரிவாக்கம் – Sequential progressions
மேலே நாம் பார்த்தவை ஒரு இசையை Harmony மூலம் எவ்வாறு நிறைவு செய்வது என்பது குறித்து.
எனில் ஒரு இசையை Harmony கொண்டு எவ்வாறு வளர்த்தெடுப்பது. பொதுவாக இன்றைய இசையில் ஒரு Chordஐத் தொடர்ந்து எந்த Chord வேண்டுமானாலும் வரலாம் என்று ஆகிவிட்டது. ஆனால் Classical கால இசை தனது பெயருக்கேற்றாற் போல, Chordகளை தனது காலகட்டத்தின் அழகியல் மற்றும் கோட்பாட்டு அடிப்படையில் தர்க்கரீதியாக வழங்கியது. இதில் பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டாலும் பின்வரும் இரு முறைகள் முதன்மையானவை.
பொதுச்சுவர முறை
பொதுவான ஒரு சுரத்தையாவது கொண்டிருக்கும் இரு Chordகள், ஒன்றை மற்றொன்று தொடர்ந்து வரலாம். இது ஒரு தொடர்ச்சியை நிலைநாட்டுகிறது.
Circle of fifth முறை
நாம் ஏற்கனவே கண்டது போல, Circle of fifth வரிசை, சுரங்களுக்கிடையிலான இயற்கையான உறவைக் கொண்டது. எனவே Chordகளை இந்த Circle of fifth வரிசையில் எளிதில் அடுக்கலாம்.
ஒரு உதாரணமாக Circle of fifth முறையில் அமைந்த துணுக்கு கீழே.
Mozart: Sonata – Circle of Fifth Progression example
மேலுள்ள துணுக்கில் I-IV-VII-III-V-VI-II-V-I எனும் முறையில் Chordகள் Circle of fifth வரிசைப்படி இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.
இவ்வாறான sequential progression மூலம் chordகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வளர்த்தெடுக்கலாம். இதில் பல்வேறு வழிமுறைகள் இருப்பினும் மேலுள்ள இரு அணுகுமுறைகளை முக்கிய உதாரணங்களாகக் கொள்ளலாம்.
இதுவரையில் இக்கட்டுரையில் நாம் Classical கால இசையின், பின்னணித் தளமான Harmony இசையின், அடித்தள மற்றும் விரிவாக்கக் கருவிகளைக் கண்டோம்.
Cadential progression இசையின் அடித்தளத்தை அமைக்கிறது. ஒரு வலுவான தொனிமையத்தை நிலைநாட்டுகிறது. அல்லது எதிர்பார்ப்பை உருவாக்கி ஏமாற்றுகிறது.
Sequetial Progression தொனிமையத்திற்குள் இசையைச் சீராக நகர்த்தும் விரிவாக்க சாதனமாகிறது
அடுத்த பகுதியில் மேல்தளமான Melody குறித்துக் காண்போம்.
Leave a Reply