பகுதி 24: முரணிசையிலிருந்து ஒத்திசைவிற்கான நகர்வு

இது வரையில் நாம், மேற்கின் மத்திய காலத்தில் உருவாகி, மறுமலர்ச்சி காலத்தில் வலுப்பெற்று, Baroque காலத்தில் உச்சமடைந்த Counterpoint இசை குறித்தும், அக்காலத்தின் முக்கிய இசைவடிவங்கள் குறித்தும் கண்டோம்.

Counterpoint இசையின் உரையாடல் வடிவம். இசையில் சிந்திக்க மனிதன் துவங்கிய போது, இசையின் எண்ண வடிவான Musical Motif வலுப்பெற்ற உடன், அதனைக் கொண்டு கருத்தைச்சொல்லவும், அதற்கு சார்பாகவும், எதிராகவும் கருத்துக்களை அடுக்கி அதனைப் பல்லிழை இசையாக மாற்றிய இசையமைப்பு முறை Counterpoint.

இந்த இசைநுட்பத்தின் விளைவாகத் தோன்றிவளர்ந்த பல்வேறு இசை வடிவங்களில் மையமானவை Concerto, Fugue எனக்கண்டோம்.


இவற்றை இளையராஜா தனது இசையமைப்பில் பயன்படுத்தியதையும் விரிவாகக் கண்டோம். இத்தகைய பயன்பாட்டின் மூலமே, அவருக்கு முன்னால், பெருமளவில் ஒற்றை இழை இசையாக இருந்த தமிழ், இந்திய இசை, பல்லிழை இசையாக உருமாறுகிறது

 

பாடலில் குரல் இழையின் பின்னணி இழைகள், வெறும் அலங்காரமாக நின்றுவிடாமல் பாடலின் மையமாகின்றன, முழுமைக்குப் பங்காற்றுகின்றன. கேட்பவர்கள் பிற இழைகளை முணுமுணுக்கத் துவங்குகிறார்கள். 

அவரது பின்னணி இழைகள் குரல் இழைக்கு அடிக்கோடு இடுகின்றன. சில நேரங்களில் நிழலாகத் துரத்துகின்றன.

 

அவையின்றி பாடல் நிறைவாக இல்லை என்றாகிறது. மையக்குரலை நிறைவு செய்வதாக பின்னணி இழைகள் இயங்குகின்றன.

 

மையக்குரலுக்கு மாற்றாக இயங்கி இருமையை உருவாக்குகின்றன

 

Concerto, Fugue வடிவ முயற்சிகள் தனித்தொகுதிகளில் விரிவாக இருந்தாலும் அவற்றின் சுருக்க குறிப்புகள் நமக்கு ராஜாவின் திரையிசைப்பாடல்களில் கேட்கக்கிடைக்கின்றன.

 

ஒரு Concertoவின் மையக்கருவி கதாநாயகனை போல அறிமுகமாவதைப்போல, அவரது பல பாடல்களில் மையக்குரலின் நுழைவு அரங்கேறுகிறது. மையப்பாடகர் ஒரு Concertoவின் மையக் கருவியிசையாளரைப் போல அறிமுகமாகிறார்.

 

ஒரு fugue இசையில் பல்வேறு குரல்கள் வெவ்வேறு கால இடைவெளியில் நுழைந்து (Stretto) திக்குமுக்காடச்செய்வதைப் போல,  அவரது பல்லிழைகள் நம்மைத் தாக்குகின்றன. 

இசையின் ஆதார இயக்கவிசைகளுள் ஒன்றான முரணியக்கமும்,  அதன் மூலமான பல்லிழைத்தன்மையும் நமக்கு அவரது அனைத்து பாடல்களிலும் காணக்கிடைக்கும் ஒன்று. இது ராஜாவின் இசையின் முக்கிய கூறாகும்.

 


ராஜாவின் இசையில் ஒரு வடிவ ஒழுங்கு நமக்கு வாய்ப்பது நாம் எளிதில் உணர்வதே. பொதுவாக வடிவ ஒழுங்கு என்பது ஒரு தெளிவான அடியமைப்பும், அதனையொட்டி முறையான விரிவாக்கமும் கொண்டது (Structure & Logical Expansion). ஒரு கட்டித்தின் அடித்தளத்தையும், மேற்கட்டுமானத்தைப் போல.  

Counterpoint இசை பொதுவாக ஒரு விரிவாக்க கருவி(expansion tool). இதனையே அவரது பாடல்களிலும் நாம் காண்கிறோம். அவரது மைய பாடலுக்கு துணையாகவும், அதனை நீட்டிக்க உதவும் சாதனமாக Counterpoint இசை அமைகிறது. எனில் அவரது இசையின் மையக்கட்டமைப்பு எதனால் அமைகிறது?  இக்கேள்விக்கான முக்கிய விடையை இனி வரும் பகுதிகளில் காண்போம்.


Baroque காலத்திலிருந்து Classical காலத்திற்கு

Counterpoint இசை பொதுவாக, இசையமைப்பு முறையில் ஒரு இசை விரிவாக்க வடிவம் (Exponential form) என்று கொள்ளத்தக்கது. ஒரு ஒப்பீட்டிற்கு சொல்வதானால் எவ்வாறு ஒரு ஆழமான உரையாடல் ஒன்றன் மேல் ஒன்றாக கருத்துக்களை அடுக்கி, உரையாடலின் புள்ளிகளை எங்கெங்கோ எடுத்துச் செல்லும் திறன் வாய்ந்ததோ, Counterpoint இசையில் நமக்கு வாய்க்கும் அனுபவம் இத்தகையதே. இதனையே நாம் Bach இயற்றிய Fugueகளில் காண்கிறோம். Fugue இசையில் மைய Motif முதல் இழையில் தோன்றி பின் பாடல் முழுதும் வெவ்வறு இழைகளில், பல்வேறு உருமாற்றங்களைச் சந்திக்கிறது எனப்பார்த்தோம். 

ஒருபுறம் இப்போக்கு இசையின் மாபெரும் பாய்ச்சல் என்றும், அதிநுட்ப வளர்ச்சி என்றும் பார்த்தாலும் மறுபுறம் இது செவ்விசையின் ஜனரஞ்சகத்தன்மையை பாதிக்கவும் செய்தது. உதாரணமாக  ஓரு Fugue பாடலை சாதாரணமாக இரு பதங்களுக்கு மேல் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது, எளிதில் முணுமுணுக்க முடியாது. Fugue போன்ற இசை மிக நீண்ட இசைவடிவம் வேறு. இத்தகைய சிக்கலுக்குள் Baroque காலம் சென்று கொண்டிருந்தது.

மேற்கிசை வரலாற்றின் காலகட்டங்களில் Baroque காலத்திற்கு (1600-1730) அடுத்ததாக  நிகழ்ந்த  இசைக்காலம் Classical காலம்  (1730 -1820) என்றழைக்கப்படுகிறது.

இன்று திரும்பிப் பார்க்க சிக்கலானதான, ஜனரஞ்சகத்தன்மை குறைந்த, சீரற்ற வடிவப்போக்கிலிருந்து,  தெளிவான வடிவ ஒழுங்கு, கேட்போருக்கு அணுக்கமான தன்மைக்கு Classical கால இசை வந்தடைகிறது. அதேவேளையில் இதன் அர்த்தம், Classical கால இசை, தனது முந்தைய கால இசையை முற்றாக புறந்தள்ளி வளர்ந்தது என்றல்ல. நேர்மாறாக Baroque கால இசையை முழுவதுமாக செரித்தே Classical கால இசை தனது பாணிக்கு வந்தடைகிறது.


Classical கால இசையின் காரணிகள்

மேற்கிசையின் இக்காலகட்டத்தின் போது, மேற்குலகம் தனது மறுமலர்ச்சி காலகட்டத்தில் இருக்கிறது. எனவே இக்காலகட்டத்தின் மைய பண்பாட்டு பாதிப்பிலும், Baroque கால இறுதியில் நிகழ்ந்த இசைப்போக்கிற்கு எதிர்வினையாகவும், Classical கால இசை உருப்பெற்றதில் வியப்பில்லை. இந்த உருமாற்றம் இசைக்குள்ளிருந்து மட்டும் நிகழவில்லை. சமூக அமைப்பும், வளர்ச்சியும் பொருளாதாரமும் இசையின் கோட்பாடுகளை, அழகியலை எவ்வளவு பாதிக்கவல்லவை என்பதற்கு Classical கால இசை மிகப்பெரிய எடுத்துக்காட்டு. Classical கால இசையின் அமைப்பிற்கும், அழகியலுக்கும் பின்வரும் சமூக காரணிகள் முக்கிய பங்காற்றுகின்றன.

1. இசைக்கான வணிக சாத்தியங்களின் வளர்ச்சி

அதற்கு முந்தைய Baroque காலத்தில், இசைக்கலைஞர்கள் பெருமளவில் தேவாலயங்களிலும், அரச குடும்பங்களில் சேவகர்களாகவும் பணிசெய்து வாழ்ந்தனர். French Revolutionக்கு பிறகும், ஜெர்மனியில் உருவான  குறுநில ஆட்சி முறையும், முற்போக்கு சிந்தனைகளும், புதிய வாய்ப்புகளை இசைக்கலைஞர்களுக்கு வழங்கத் துவங்குகின்றன. இசைக்கலை என்பது பொழுதுபோக்கு மற்றும் பணக்காரர்களின் அந்தஸ்திற்கு ஏற்றதாக மாற, ஊர்கள் தோறும் கலையரங்கங்கள் தோன்றுகின்றன.  இதன் மூலம் பணம்கொழித்த நகரங்களுக்கு இசைக்கலைஞர்கள் படையெடுக்கிறார்கள். அதுவரையில் இசையில் எந்த வரலாறுமற்ற நகரமான Vienna, இதன் மூலம் இசையின் தலைநகரமாக உருவெடுக்கிறது. இதற்கு மூலவராகத் தோன்றுபவர் தனது பிற்காலத்தில் Vienna வந்தடைந்த Haydn. அவர் துவங்கி அவரது மாணவர்களான Mozat, Beethoven, Schubert என Schoenberg வரையில் தொடர்ந்து, திரும்பிய பக்கமெல்லாம் இசைக்கலைஞர்களால் நிறைகிறது Vienna.

இத்தகைய வணிக சாத்தியங்கள் அதுவரையில் குடும்பத்தொழிலான இசையை (JS Bach, CPE Bach) பொதுத்தொழிலாக்குகிறது. அரசு அலுவலர்களின் மகன்களான Mozart, Haydn இசையில் கோலோச்சுகிறார்கள். இது இசையில் வெவ்வேறு தரப்பினரைக் கொண்டு வந்ததோடு மட்டுமன்றி அவர்கள் மூலம் இசையில் புதிய அழகியல்கள், பார்வைகள் நுழைகின்றன.

2. பியானோ கருவியின் தோற்றம்

Bach காலம் Clavichord, Organ உள்ளிட்ட keyboard கருவிகளுக்கானது. ஒன்று ஒருவருக்கு மட்டுமே கேட்குமளவிற்க்கு மிக சன்னமானது, மற்றொன்று பெரிய அரங்குகளுக்கான பேரொலி பெற்றது. இந்த நேரத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியினால் தோன்றும் பியானோவின் வருகை இசைக்கு முக்கிய வரவாகிறது.

பியானோவின் வருகை இசையை சிறிய அறைகளில் நிகழ்த்தக் கூடிய, ஒப்பீட்டில் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய கலையாக்குகிறது. இதன் மூலம் பலரும் பியானோ இசை கேட்கவும், கேட்ட இசையை இசைத்துப் பார்க்கவும், புதிய இசைக்காக கலைஞர்களிடம் ஒப்பந்தம் செய்யவும் துவங்குகிறார்கள்.

3. இசை ரசனையின் நகர்வு

இத்தகைய போக்குகளால் இசையை ரசிப்பதில், இசை ரசனையை நிர்ணயிப்பதில் மத்திய வர்க்கத்தினர் இடம்பெறத்துவங்குகிறார்கள். அரசகுடும்பங்களிலிருந்து இவ்வாறான நகர்வு இசைரசனையில் கேளிக்கை, ஜனரஞ்சகம், உணர்வுப்பூர்வம் போன்றவை முக்கிய இடம் வகிக்கக் காரணமாகிறது.

Bach காலத்தின் இசைவிமர்சகரான Charles Burney (1726-184), Bach இசைகுறித்து கொண்டிருந்த கருத்து இங்கு ஒப்பு நோக்ககூடியது.

“If Sebastian Bach and his admirable son Emanuel, instead of being musical directors in commercial cities, had been fortunately employed to compose for the
stage and public of great capitals, such as Naples, Paris, or London, and for
performers of the first class, they would doubtless have simplified their style more
to the level of their judges; the one [i.e., J. S.] would have sacrificed all
unmeaning art and contrivance”

Bach தனது போக்கை மாற்றியிருப்பாரா எனத்தெரியாது. ஆனால் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் தங்கள் காலகட்டத்தின் ரசனைக்கேற்ப இசையமைக்கிறார்கள். அக்காலகட்ட ரசிகர்களும் புதிய இசையையே விரும்புகிறார்கள். பழைய இசையை மீண்டும் மீண்டும் நிகழத்துவது அக்காலகட்ட ரசனைக்குரியதாக இல்லை எனத்தெரிகிறது. இதன் மூலம் இசைக்கலைஞர்களுக்கு புதிய இசையைத் தரும் தேவை உருவாகிறது. இன்றைய தமிழ்திரைப்படங்களின் நிலை போல, அக்காலத்தின் ஓபராக்கள் ஒரு வாரம் ஒடினால் லாபமீட்டுக் கொடுக்கத்தக்கதாக இருந்தன. Mozart இயற்றிய ஓபராக்களின் வரவேற்பும் வெற்றியும் என, இசையுலகின் முதல் வணிகநட்சத்திரமாக Mozart வரவு அமைந்ததாக இன்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

எனவே இத்தகைய போக்குகள் ஒப்பீட்டளவில் சிக்கலான, வறட்சியான, மிக நீண்ட Baroque இசையிலிருந்து சீரான, வெகுஜன ரசனைக்கேற்ற, வண்ணமயமான Classical இசைக்கு நகர்த்துகின்றன.


Classical கால இசையின் பண்புகள்

மேலுள்ள சிறிய காணொளி விளக்குவதைப் போல, Baroque இசை முடிவில்லாமல் நீளுவது, சொல்ல வந்த கருத்தினை கேட்பவருக்கு தெளிய வைக்கும் கவலைகளற்றது. மற்றதோ கேட்டவுடன் நினைவில் தங்குவது. அதற்குத் தோதான கருவிகளைப் பயன்படுத்துவது. இத்தகைய தன்மை Classical இசைக்கு எவ்வாறு வாய்க்கிறது என்பதைச் சுருக்கமாகக் காண்போம்.

தொனியியல் (Tonality and Harmony)

Baroque காலத்திற்கு Counterpoint என்றால், Classical காலத்தின் மைய இசைத்தத்துவம் Harmony மற்றும் தொனியியல் ஆகிறது. முரணியக்கம் இசையின் மைய விசைச்சக்தியாக விளங்கியதிலிருந்து, ஒலியின் ஈர்ப்பு விசையே இசையின் மைய விசைச்சக்தியாக இயங்கத்துவங்குகிறது. இது இசையில் ஒரு நிறைவுத் தன்மையை வழங்குகிறது. (எவ்வாறு என பின்னர் காண்போம்)

இழைநயம் (Texture)

Baroque இசை பல்லிழை இசை. குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு இழைகளைப் பயன்படுத்தும் இசை. இதன்மூலம் இசை சாத்தியங்களை அதிகப்படுத்தினாலும், கேட்போருக்கு பின் தொடர முடிவற்ற பல்லிழை இசை, கடினமானதே.

Polyphonic இசையின் பல்லிழை தன்மையிலிருந்து மேல் இழையும் கீழ் இழையும் பிரதானமாகி, இரு தளத்திலான இசையாக Classical இசை வடிவெடுக்கிறது. இது Homophonic Texture என்றழைக்கப்படுகிறது. மேல் இழையில் மையக்கருத்தாக Melody, கீழ் இழையில் அதன் பின்புலமாக (Context) அதன் Harmony.

PolyHomoTexture.png

வடிவ ஒழுங்கு (Structural Organisation)

நீண்டுகொண்டே செல்லும் தனது முற்கால இசையோடு ஒப்பிட, Classical இசை ஒழுங்கமைவினால் ஆனது.  தெளிவான சொற்கள், தெளிவான கருத்துக்கள், தேவைக்கதிகம் நீளாத சொற்றொடர்கள், அவற்றின் துல்லியமான பின்னணி.

Classical கால இசை தனது  Melody மற்றும் Harmony எனும் இரு தளங்களில், பின்வரும் கருவிகளைக் கொண்டு இந்த ஒழுங்கமைவை சாதிக்கிறது.

 

FormalElements

வண்ணமும் உணர்வும் (Color and Mood)

Classical கால இசை, Baroque இசையை விட ஜனரஞ்சகத்தன்மையானது, உணர்வுப்பூர்வமானது என்று பார்த்தோம். ஒரு பாடலின் மைய உணர்வை அதன் மைய இழையான Melody வழங்குகிறது. ஆனால் Melody இடம், காலம், ரசனையின் பாற்பட்டது. ஒரு Melody வெளிப்படுத்தும் உணர்வு ஒவ்வொரு இசையமைப்பாளரின் தனிப்பட்ட பண்பு. 

அதேவேளையில்  பின்னணியில் இயங்கும் Harmony, தாளம் மற்றும் கருவித்தேர்வை (orchestration) கொண்டு ஒரு இசையின் வண்ணத்தை, உணர்வை ஒரு தேர்ந்த இசையமைப்பாளரால் வடிவமைக்க முடியும். இக்கருவிகள் Classical கால இசையில் துவங்கி வளர்ந்தவை.

இவையே Classical கால இசையின் மையப்பண்புகளாகக் கொள்ளத்தக்கவை


Classical கால வடிவங்கள்

Baroque காலத்தில் பல்வேறு வடிவங்கள் வழங்கியதையும் அவற்றின் மைய வடிவங்களான opera, Concerto, Fugue போன்றவற்றைக் கண்டோம். இவை முறையே அழகியல், அமைப்பியல், கருவியியல் வடிவங்கள் எனத்தக்கவை.

இதே வகையில், Classical காலத்தின் மைய வடிவங்கள் பின்வருபவை. இதில் முக்கியமாக உணர வேண்டியது இவை baroque வடிவங்களின் பரிணாம வளர்ச்சி பெற்று உருவானவை என்பதே.

ClassicalForms

  

இதுவரையில் Counterpoint குறித்தும் அதன் பல்வேறு பயன்பாடுகள் மற்றும் வடிவங்கள் ராஜாவின் இசையில் வெளிப்படுவதை குறித்தும் கண்டது போலவே, மேலே நாம் சுருக்கமாகக் கண்ட Harmonic இசையின் பண்புகள், வடிவங்கள் விரிவாகவும் அவை ராஜாவின் இசையில் வெளிப்படுவது குறித்து இனி வரும் பகுதிகளில் காண்போம்.


 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: