Baroque காலத்தின் மைய இசைவடிவங்கள் குறித்து நினைவுபடுத்த இந்த அட்டவணை மீண்டும்.
இக்குறிப்பிட்ட வடிவங்களில், சென்ற பகுதியில், Baroque கால சார்பிசை (aesthetic form) வடிவமான Oratorio குறித்தும், அதனை இளையராஜாவின் திருவாசகம் எவ்வாறு வழங்குகிறது என்பது குறித்தும் கண்டோம்.
Concerto இசைவடிவம்
Oratorio எனும் குரலிசை பக்தியிசை வடிவம் Baroque காலத்தில் பெருவடிவமாக வளர்ந்தாலும், குரலிசையும் பகுதியிசையும் கிரேக்க காலம், தேவாலய காலம், மத்திய காலமென ஒரு நெடுங்கால தொடர்ச்சியைக் கொண்டவை. நேர்மாறாக Concerto மற்றும் Fugue வடிவங்கள் Baroque (17ம் நூற்றாண்டு) காலத்தின் சமீபத்தில் தோன்றி வளர்ந்தவை.
வடிவத்தின் மைய நோக்கம்
மேற்கத்திய இசைவடிவங்கள் பலவும் சுமார் மூன்று நூற்றாண்டுகள் பயன்பாட்டிலிருப்பவை. இதன்மூலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்களைச் சந்தித்தவை. 17ம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்த Concerto வடிவமும் இன்று வரையில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வரும் வடிவமே. இவ்வாறு பல்வேறு உருமாற்றங்களைச் சந்தித்த வடிவத்தை எந்தப் புள்ளியிலிருந்து புரிந்து கொள்வது என்ற குழப்பம் முதன்மையானது. ஒரு இசைவடிவம் எவ்வாறு அமைகிறது என்பதை விட, எப்பண்பு இன்றி அவ்விசை வடிவம் அமையாது என அதன் மைய நோக்கைப் புரிந்து கொள்வதே குழப்பமின்றி அவ்வடிவினை அணுக வழிவகுக்கும். இவ்வழியில் முதலில் Concerto வடிவத்தின் மையநோக்கைக் காண்போம்.
Baroque காலத்தில் Counterpoint இசை வளர்ச்சி அடைகிறது.போலவே Baroque காலத்தில் வளர்ச்சியடைந்த மற்றொன்று இசைக்கருவிகளும் அவற்றின் பயன்பாடும்.
ஒரு புறம் Organ, Clavichord, Harpsichord போன்ற Keyboard கருவிகளின் உருவாக்கமும், அவற்றின் வாசிப்பு முறைகளும் வளர்ச்சி அடைகின்றன. மறுபுறம் Violin மற்றும் இதர தந்திக் கருவிகளின் வளர்ச்சி. ஒருபுறம் இத்தகைய தனிக்கருவிகளின் பல்வேறு பயன்பாடுகளை முயன்று பார்த்து, நுட்பமான வாசிப்பை வழங்கும் தனிக்கலைஞர்கள்(virtuoso Soloists). மறுபுறம் இக்கருவிகளின் சேர்ந்திசை, ஒழுங்கமைவு குறித்த முயற்சிகளால் நேர்த்தியடையத்துவங்கும் குழுவிசை (Orchestra). இவற்றின் பயனாக குரலிசையே மையமாக இருந்த மத்திய காலத்திலிருந்து, கருவியிசையின் காலத்திற்கு மேற்கத்திய இசை நகர்கிறது. இந்த நகர்வின் முதல் இசைவடிவ விளைவாக நாம் Concerto இசையைக் காணலாம்.
தனிக்கலைஞர்களும் (Soloists), குழுவிசையும் (Orchestra) Baroque காலத்தில் முக்கியத்துவமைடயத் துவங்கும் போது இந்த இரண்டையும் உள்ளடக்கி வெளிப்பட்ட வடிவமே Concerto. தனிக்கலைஞர்களையும் குழுவிசையையும் எதிரிணையாக நிறுத்தும் வடிவமே Concerto (Soloists pitted against Orchestra). இவ்வடிவத்தில் அமைந்த இசை, இரு கருவியிசை தளங்களால் ஆனது. ஒரு தளம் குழுவிசை (Orchestra). இரண்டாவது தளம் ஒரு தனிக்கருவியால், அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தனிக்கருவிகளாலோ ஆனது. இந்த இரு தளங்களும் தனித்தும் பிரிந்துமாக, அவற்றிற்கிடையிலான உரையாடலும் அதில் விளையும் இசையனுபவமே Concerto வடிவத்தின் மையம்.
Concerto வகைகள்
Concerto வடிவத்தில் ஒற்றை தனிக்கருவியும் (Single Solo instrument) அதற்கெதிராக குழுவிசையும் இடம்பெறுவது Solo Concerto எனப்படுகிறது. ஓரு Solo Concertoவில் இடம் பெரும் தனிக்கருவி, பியானோவாக இருந்தால் Piano Concerto ஆகிறது, வயலினாக இருந்தால் Violin Concerto ஆகிறது.
குழுவிசையும், இரு தனிக்கருவிகளும் (two solo instruments) கொண்டமையும் Concerto இசை Double concerto எனப்படுகிறது.
இரண்டிற்கு மேற்பட்ட தனிக்கருவிகளின் குழுவாக, சிறிய குழுவிசை ஒரு பகுதியாகவும், அதற்கு அடித்தளமாக பெரிய குழுவிசை மறுபகுதியாகவும் இயங்கும் Concerto வகையும் உண்டு (small ensemble pitted against a large orchestra). இவ்வகை Concerto Grosso என்றழைக்கப்படுகிறது.
Solo, Double, Grosso என்பவையே Concerto வகைகள்.
Concerto வரலாறு
சிறந்த கருவியிசையாளரும், இசையமைப்பாளரும், ஆசிரியருமான Arcangelo Corelli (1653-1713), Concerto இசையின் தந்தையாக மதிக்கப்படுகிறார். மேற்கிசையின் மையக் கருவியான வயலின் வளர்ச்சி பெற்ற அக்காலத்தில், மேற்கிசையின் முதல் வயலின் வித்தகரும் (first virtuoso violinist) இவரே. தனது வயலின் வாசிப்பினையும், குழுவிசைக்கான இசையமைப்பு மேதமையையும் இணைத்து Concerto வடிவத்தினை Corelli வளர்க்கிறார்.
அவருக்குப் பிறகு அவரது மாணவரான Antonio vivaldi (1678 – 1741) சுமார் 500 Concertoக்களுக்கு இசையமைக்கிறார். அவற்றுள் ஒரு தொகுப்பே மேற்கிசையின் மைல்கல் படைப்புகளுள் ஒன்றான, காலத்தால் அழிவறியா அவரது Four Seasons Concerto இசை.
இத்தொகுப்பின் Winter season இசையின் முதல் பாடலை (first movement – சுமார் 3.30 நிமிடங்கள் ) எடுத்துக்கொள்வோம்.
நடுநாயகமாக தனிக்கருவியிசையாக வயலினிசை ஒருபுறம், மறுபுறம் குழுவிசை. பாடலின் துவக்கத்தில் வயலினும், குழுவும் குளிரின் நடுக்கத்தை குறிப்பாலுணர்த்தி இசை துவங்குகிறது. பிறகு வயலின் தனிக்குரலாக வெளிப்படுகிறது. பலமான காற்றாக, குளிர் தாங்காத ஓட்டமாக, பற்களின் நடுக்கமாக வயலின் குளிர் காலக் குறிப்புகளை (themes) இசையாக்கி வழங்குகிறது. வயலினில் அபாரமான சவாலான பகுதிகள், ஒரு தனியிசை கலைஞரின் திறனை வெளிப்படுத்தும் வண்ணம் இடம்பெறுகின்றன. குழுவிசை தனிவயலினுக்கு துணைநிற்கிறது, போட்டியிடுகிறது. வயலினும் குழுவிசையும் தனித்தும், இணைந்தும் Concertoவாக உரையாடலை நிகழ்த்துகின்றன. Concerto வடிவ இசையின் மணிமகுடங்களுள் ஒன்றாகிறது இப்பாடல்.
ஆசிரியரும், மாணவருமாக Corelli, vivaldi ஒரு தலைமுறைக்குள் Concerto எனும் இவ்வடிவினை உருவாக்கி மேற்கிசையின் மையவடிவமாக்குகிறார்கள்.
பிறகு Vivaldi வழங்கிய Concerto இசையினால் கவரப்பட்டு அவரிடமிருந்து கற்றுக்கொண்டு JS Bach, தனது முதன்மைக் கருவியான Harpsichord கருவிக்கு Concertoக்களை அமைக்கிறார். அவரிடமிருந்து அவரது மகனான CPE Bach தொடர்கிறார். Concertoவில் தந்தையை மிஞ்சிய மகனாகக் கருதப்படும் அவரிடமிருந்து Mozart. Mozart மூலமாகவே Concertoவிற்கு இன்றளவும் வழங்கப்படும் பண்புகளும், விரிவான வடிவ அமைப்பும் உறுதி பெறுகின்றன. Concerto வரலாற்றின் இரு மையங்கள் Vivaldi மற்றும் Mozart.
இந்திய இசையில் Concerto
சென்ற நூற்றாண்டில் இந்திய செவ்விசை இயக்கங்கள் (இந்துஸ்தானி, கர்னாடக இசை) மேற்கிசை இயக்கங்களின் தொடர்பில் வரத்துவங்குகின்றன. இந்திய இசைக்கலைஞர்கள் மேற்கித்திய நாடுகளில் இசைக்கத்துவங்குகிறார்கள். மேற்கிசை கலைஞர்கள் இங்கு. இத்தொடர்பு காரணமாக கிழக்கு மேற்கு கலப்பிசை எனப் பல்வேறு முயற்சிகளும் வெளிவரத்துவங்குகின்றன.
இக்கலப்பிசையின் தளத்தில் இந்திய இசைக்கலைஞர்களால் அநேகமாக அதிகளவில் பயன்படுத்தப்பட்ட மேற்கிசை வடிவம் Concerto வடிவம் தான். இதன் காரணம் நேரடியானது. இந்திய இசையில் தனியிசையே மையமானது (Soloists). எனவே இங்கே இசைக்கலைஞர்கள் தங்களது தனியிசைத் திறனையும், ராக இசையின் நுட்பத்தையும் வெளிப்படுத்த வசதியான வடிவம் Concerto. இந்திய இசைக்கலைஞர்கள் ராகம் சார்ந்த இசையினை தங்களின் கருவியில் இசைக்க, அதன் பின்னணித் தளமாக மேற்கின் குழுவிசை அமைய பல Concertoக்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவின் பல்வேறு முன்னணி இசைக்கலைஞர்களும் இவ்வடிவம் சார்ந்த இசையினை மேற்கிசை குழுக்களைக் கொண்டு வழங்கியுள்ளார்கள். இத்தகைய இந்திய Concertoக்கள், மேற்கில் ராக இசை குறித்த அறிமுகத்தையும், ஆர்வத்தையும் பெருமளவில் தூண்டியுள்ளதை மறுக்க முடியாது.
ஆனால் அதனைத்தாண்டி இந்திய Concertoக்களின் சிக்கல் அவை பெரும்பாலும் பெயரளவில் மட்டுமே Concerto இசையாக விளங்குகின்றன என்பதே.
இதன் காரணமும் நேரடியானது. Concerto இசை வழங்கும் இசையனுபவம் என்பது வெறும் தனிக்கருவியிசைக் கலைஞர்களால் ஆனது அல்ல (அதற்கு இவ்வடிவமே தேவையில்லையே – தனிக்கருவி கச்சேரிகளே போதும்). Concertoவின் அபாரமான இசையனுபவம் அதன் இருபகுதிகளான தனியிசை, குழுவிசை இரண்டையும் திறம்பட கையாள்வதில் உள்ளது. இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டியாகவும், முக்கியத்துவத்துடன் இணையும் போதுதான் Concerto இசையின் அற்புதமான இசையனுபவம் வாய்க்கிறது. ஒன்றை மட்டும் முதன்மையாகக் கொண்டு மற்றதை வெறும் பின்னணியாக்கும்போது அவ்விசை Concertoவின் மையநோக்கிற்கு எதிராகிறது.
இந்திய இசைக்கலைஞர்கள் குழுவிசையும் அதற்குத் தேவையான மேற்கிசை கட்டமைப்புகளை அறிந்தவர்கள் அல்ல (முக்கியமாக முயலவில்லை). எனவே இந்திய Concerto ஒரு மேற்கத்திய குழுவிசையினை பின்னணி அலங்காரமாகக் கொண்ட ஒரு தனியிசையாகவே இயங்குகிறது.
உதாரணமாக இந்திய கலப்பிசையின் முன்னோடியாக(இதனை அவரே மறுத்த போதிலும்) கருதப்படும் , பண்டிட் ரவிசங்கரின் புகழ்பெற்ற Sitar Concertoக்களை எடுத்துக் கொள்வோம்.
இங்கே குழுவிசை ஒரு சூழலை (ambience) மட்டுமே உருவாக்க முயல்கிறது.இந்த Concertoக்களில் குழுவிசையின் பங்கு என்ன, ஒருவேளை குழுவிசை இடம்பெறவில்லையெனில் இந்த இசை எதை இழந்திருக்கும்…
Nothing but wind – முதல் முயற்சி
ஒருபுறம் இத்தகைய மேற்கு கிழக்கின் கலப்பிசை பெருமளவு விவாதிக்கப்பட்ட காலத்தில், மற்றொரு மூலையில் (பெருமளவிலான வெளிச்சமேதுமின்றி) ராஜாவின் How to Name it மற்றும் Nothing But Wind தொகுப்புகள் வெளியாகின்றன.
இவற்றுள் புல்லாங்குழலை மையக்கருவியாக, இந்தியாவின் முன்னணி தனியிசைக் கலைஞர்களுள் ஒருவரான புல்லாங்குழலிசை வித்தகர் ஹரிப்பிரசாத் செளராசியா வாசிக்க, மற்றொரு தளமாகக் குழுவிசையைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள Nothing But Wind தொகுப்பு, Concertoவிற்கான களத்தைக் கொண்டது. ராஜாவின் பல்வேறு திரையிசைப் பாடல்களிலும் இடையிசைத்துணுக்குகளில் இத்தகைய கூறுகள் வெளிப்பட்டாலும், Nothing but Wind ஒரு முழுநீள கருவியிசைத் தொகுப்பாக, தனிக்கருவியிசையையும், குழுவிசையையும் எதிரெதிரே நிறுத்துவதால் Concertoவின் பின்னணியில் பார்க்கத் வேண்டியதாகிறது.
Nothing but Wind தொகுப்பின், முதல் பாடலான Singing Self பாடலை எடுத்துக் கொள்வோம்.
இப்பாடலில் புல்லாங்குழல் தனியிசையும், குழுவிசையும் ஒன்றுக்கொன்று இன்றியமையாமலும் இணைந்தும் தரும் இசையனுபவம் மேலெழுந்தவாரியாகவே நாம் உணரக்கூடியது. இதுவே Concertoவின் மைய நோக்கம் எனவும் கண்டோம்.
Concertoவின் பண்புகள்
சென்ற பகுதியில் ஒரு Oratorio வடிவம், தனது மைய நோக்கான பக்தியிசையை வழங்க பல்வேறு கட்டமைப்புகளை கையாள்வது குறித்துக் கண்டோம்.
போலவே Concerto வடிவ இசை தனது தனது மைய நோக்கான தனிக்கருவிகளையும், குழுவிசையையும் இணைத்து வழங்கும் அபாரமான இசையனுபவத்தை குறிப்பிட்ட சில கட்டமைப்புகளின் மூலம் சாதிக்கிறது. இத்தகைய கூறுகளும் பண்புகளுமே தனிக்கருவியிசையின் வீச்சையும், குழுவிசையின் முக்கியத்துவத்தையும் இவ்வடிவத்தில் நிலைநிறுத்துகிறது.
Concertoவின் மையப்பண்புகள் வெளிப்படும் பகுதிகளைப் பினவருமாறு பிரித்துக் கொள்ளலாம்.
1. பாடலின் துவக்கமும், தனிக்கருவியின் அறிமுகமும்
2. தனிக்கருவியின் வெளிப்பாடு
3. குழுவிசையின் வெளிப்பாடு
4. பாடலின் அமைப்பு
இங்கே நாம் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டியது, இத்தகைய பண்புகள் கட்டாயமானவையோ, எழுதி வைத்த விதிகளோ அல்ல. மாறாக Concerto இசையினை வழங்கிய Vivaldi முதல் Mozart, Beethoven உள்ளிட்ட தேர்ந்த இசையமைப்பாளர்கள் உருவாக்கி பயன்படுத்திய கட்டமைப்புகள் இவை. ஒரு வடிவத்தின் மைய நோக்கமே இன்றியமையாதது, ஒரு வடிவத்தின் பண்புகள் அந்த மையநோக்கை நிறைவேற்றும் கருவிகளே. அவை இசையமைப்பாளரின் மற்றும் பாடலின் தேவைக்கேற்ப பயன்படுபவை.
Concertoவின் துவக்கமும், தனிக்கருவி அறிமுகமும்
ஒரு Concertoவின் கதாநாயகன் அதில் பங்குபெறும் தனிக்கருவி. எனவே ஒரு Concertoவின் துவக்கமென்பது ஒரு கதாநாயகனின் அறிமுகக்காட்சி போன்றது. தனிக்கருவியின் அறிமுகம் Concertoவில் ஒரு மைய நிகழ்வு.
இது பலவகைகளில் நடக்கலாம். நாம் மேலே கண்ட Vivaldi – winter Concertoவில் போல, வயலின் எந்த ஆர்ப்பாட்டமுமின்றி துவக்கம் முதலாக பங்குபெறலாம்.
மற்றொருபுறம் Beethoven இசையமைத்த இந்த Violin Concerto (அவர் இசையமைத்த ஒரே violin Concerto இதுதான்) இசையினை எடுத்துக்கொள்வோம். இங்கே முதலில் குழுவிசை துவங்கி, பிறகு வயலினின் அறிமுகம் ஒரு நாயகனின் அறிமுகமாக நிகழ்கிறது. (காணொளியில் சுமார் 3.50 நிமிடங்களில் வயலின் அறிமுகமாகிறது)
பிற்கால Concertoக்கள் இந்த பாணியைச் சார்ந்தவையே. அவற்றின் உச்சநிகழ்வுகளுள் ஒன்று தனிக்கருவியின் முதல் அறிமுகத் தருணம். எனவே பெரும்பாலும் ஒரு Concertoவின் துவக்கம் குழுவிசையில் துவங்குகிறது. அது தனிக்கருவியின் வருகைக்கான எதிர்பார்ப்பை உருவாக்கி அதன் அறிமுகத்திற்கு பலமான மேடை அமைத்துக் கொடுக்கிறது.
மீண்டும் Singing Self பாடலின் துவக்கத்தைப் பார்க்கலாம். புல்லாங்குழலின் அறிமுகம் (சுமார் 1.30 விநாடிகளில் குழல் அறிமுகமாகிறது) எவ்வளவு Dramatic நிகழ்வாகிறது, அதற்கு துவக்க குழுவிசை எத்தகைய பங்காற்றுகிறது என்பது கவனிக்க வேண்டியது.
தனிக்கருவியின் வெளிப்பாடு:
ஒரு Concertoவில் தனிக்கருவி மூன்று வகையில் வெளிப்படுகிறது. அவை
1. தனிப்பகுதி (Solo Cadenza)
2. பின்னணியோடு (Accompanied)
3. கூட்டாக (Tutti)
இவ்விசையின் தனிப்பகுதிகள் (Solo Cadenza Segments) எடுத்துக்கொண்ட கருவியின் தனித்திறனையும், வாசிப்பவரின் திறனையும் வெளிக்கொணரப் பயன்படுபவை. துவக்ககாலத்தில் இந்தப் பகுதிகள் இசையமைப்பாளரால் குறிக்க மட்டுமே படும், தனிக்கலைஞர்கள் தங்கள் சொந்த கற்பனையால் வாசிப்பார்கள்(கர்னாடக இசையின் தனியாவர்த்தனம் போல). பிற்காலம் துவங்கி இந்தப் பகுதிகளும் இசையமைப்பாளரால் அக்கருவியின் தன்மையை மனதில் கொண்டு இசையமைக்கப்படுபவை.
Accompanied பகுதிகளில் தனிக்கருவிகளுக்கு பெரும்பாலும் குழுவிசை முரணிசையாகச் (Counterpoint) செயல்பட்டு மெருகூட்டுபவை.
Tutti பகுதிகள் தனியிசையும், குழுவிசையும் ஒன்று சேர இசைக்கப்படும் பகுதிகள்.
Singing Self பாடலில், புல்லாங்குழலிசையை அழகுற வெளிப்படுத்தும் சவாலான தனிப் பகுதிகளும், பின்னணி இணைந்த பகுதிகளும், கூட்டுப் பகுதிகளும் இடம்பெறுகின்றன.
குழுவிசையின் வெளிப்பாடு
Concertoவில் குழுவிசை பயனின்றி பின்னணிக்கு சென்றுவிடாமல் இருப்பது, அதற்கான பங்கினை சரியாகப் பயன்படுத்துவதில் உள்ளது.
Concerto குழுவிசையில் துவங்குகிறது, முடிவும் குழுவிசையிலேயே பெரும்பாலும் அமைகிறது. இடையில் பிற பகுதிகளில் தனியிசைக்கு பின்னணியாக அமைகிறது. ஆனால் இதனோடு நில்லாமல், குழுவிசைக்கென்றே தனியாக (orchestral sections) வழங்கப்படும் பகுதிகளும் அமைகின்றன. இவை orchestraவிற்கான முக்கியத்துவத்தை வழங்குபவை. அதே வேளையில் இப்பகுதிகள் துருத்தாமல் பாடலின் முழுமைக்குள் நிற்கவேண்டி, பெரும்பாலும் Transition பகுதிகளுக்கு, ஒரு themeல் இருந்து மற்றொன்றிற்கு செல்வதற்கிடையில் இத்தகைய குழுவிசை பகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறான வெளிப்பாடே Concertoவிற்கான இசைநயத்தை (texture) வழங்குகிறது.
உதாரணமாக சுமார் 2.42 வினாடிகளிலிரிந்து 3.50 வினாடிகள் வரையிலான இக்குழுவிசைப்பகுதி
பாடலின் அமைப்பு
Concerto என்பது கருவியிசை வடிவம். அதற்கென பிரத்யேகமான அமைப்பு (structure) கிடையாது . ஒவ்வொரு காலகட்டத்தில் வெவ்வேறு பாடல் அமைப்புகளைத் தாங்கினாலும், பொதுவாக Concerto இசையின் பாடல் அமைப்பு, Sonataவின் அமைப்பை உள்ளடக்கியது.
Sonata துவக்கம், வளர்ச்சி, முடிவு (பல்லவி, சரணம், பல்லவி போன்றே) என மூன்று பகுதிகளைக் கொண்ட பாடல் வடிவம். Sonata துவக்கத்தில் ஒரு idea \ theme ஐ அறிமுகப்படுத்துகிறது. பிறகு அந்த theme வளர்த்தெடுக்கப்படுகிறது. இறுதியில் முதல் themeக்கு பாடல் வந்தடைகிறது.(Sonata வடிவம் பற்றி வரும் மேலும் விரிவாக வரும் பகுதிகளில் காண்போம்)
Concerto இசையிலும் Sonataவின் பாடல் அமைப்புமுறையே கையாளப்படுகிறது. இதே துவக்கம், வளர்ச்சி, முடிவு (Exposition, Development, Recapitulation) பகுதிகளே. ஆனால் இப்பகுதிகள் தனியிசை, குழுவிசை எனும் இருதளங்களைக் கொண்டு அமைகின்றன.
Concertoவின் துவக்கம் பெரும்பாலும் குழுவிசையில் ஆரம்பிக்கறது எனப்பார்த்தோம். இந்த துவக்க குழுவிசையில் Concertoவின் மைய Theme அறிமுகமாகிறது (Orchestral Exposition). பிறகு தனிக்கருவியிசை துவங்கும் போது, இதே themeஐ நேரடியாகவோ அல்லது உருமாற்றியோ இசைக்கிறது(Solo Exposition). இந்த துவக்க இசையிலேயே நமக்கு குழுவிசைக்கும் தனியிசைக்குமான Contrast, இவ்வடிவின் முக்கிய பண்பாக வெளிப்பட்டுவிடுகிறது.
மீண்டும் Beethoven violin concertoவை எடுத்துக்கொண்டு அதன் துவக்கத்தைக் காண்போம்.
இதில் துவக்க theme இசையை, வயலின் பகுதி தனது அறிமுக தருணத்தில் இசைக்கிறது. (சுமார் 3.50 வினாடிகளில் அறிமுகமாகும் வயலின் இசை, நேரடியாக Theme இசையில் துவங்காமல், Beethoven நமக்கு அருமையான சிறிய போக்கு காட்டி Theme இசைக்கு சுமார் 4.20 வினாடிகளில் வந்தடைகிறார் ).
Singing Self பாடலும் குழுவிசை ஒரு theme இசையில் ஆரம்பிக்கறது. பிறகு புல்லாங்குழல் துவங்கும் போது, மைய theme இசை உருமாற்றத்துடன் (variation) வழங்கப்படுகிறது .
போலவே சுமார் 5.05 நிமிடத்தில், Development பகுதியில், தனிக்கருவியும் குழுவிசையுமாக, இந்த theme வளர்க்கப்படுகிறது.இறுதியில் மைய theme இசையில் பாடல் நிறைவுறுகிறது.
Nothing but wind தொகுப்பின் முதல் இரு பாடல்களும் இவ்வடிவம் சார்ந்தவை. பிற பாடல்களின் நோக்கம் வேறானாலும் அவற்றில் இவ்வகைக் கூறுகளை நாம் காணலாம்.
இப்பாடல்கள் மேற்கத்திய Concertoக்களின் விரிவைத் தாங்கியவை அல்ல. ஆனால் இந்திய Melodic இசையை இவ்வாறு வெளிப்படுத்திய பாங்கும், இந்த வடிவத்தில் வெளிவந்த கலப்பிசை முயற்சிகளில் ஒட்டாது நிற்கும் குழுவிசையும், தனியிசையும், மேற்கு கிழக்கின் அழகியலும், இங்கே பிரிவின்றி வெளிப்படும் பாங்கும் இதனை வழக்கம்போல் இசையுலம் கவனிக்க வேண்டிய அவரது முன்னோடி முயற்சிகளுள் ஒன்றாக்குகிறது.
Leave a Reply