“ஆத்ம ராகம் ஒன்றில் தான் ஆடும் உயிர்கள் என்றுமே” – இளையராஜா
கிரேக்க காலத்தின் இசைக்கு இணையான ஒரு இசைப் பண்பாடாகத் தொடங்கி, பிறகு பக்தி இசையாகவும், பிற மொழி ஆட்சியாளர்களின் காலத்தில் கர்னாடக இசையாகவும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வந்த இசை, இருபதாம் நூற்றாண்டை வந்தடையும் போது நலிவுற்றும், பெருவாரியான மக்களிடமிருந்து விலகி இருப்பதையும், அதற்கான காரணங்களையும் சென்ற பகுதியில் கண்டோம்.
ஏறத்தாழ கர்னாடக இசையின் பொற்காலத்தினைப் போலவே மேற்கத்திய செவ்விசையும் 17 முதல் 19ம் நூற்றாண்டு வரை தனது பொற்காலத்தில் இயங்குகிறது. இக்காலகட்டத்தில் மேற்கு மதச்சார்பின்றியும், சாதி போன்ற சிக்கல்களின்றியும், சுதந்திரமான கலை மற்றும் சிந்தனைத் துறையாக இசையை வளர்த்தெடுக்கிறது. எனில் 20ம் நூற்றாண்டில் நம்மைப் போலல்லாமல், மேற்கத்திய செவ்விசை பொதுமக்களிடம் பெரும் ஆதரவையும், செல்வாக்கையும் பெற்றிருக்க வேண்டும். பெற்றதா என்றால் – இல்லை.
மேற்கின் செவ்விசைப் பொற்காலம் 19ம் நூற்றாண்டோடு முடிவடைகிறது. அதன் பொற்காலத்தை ஒப்பிடும் போது மேற்கிலும் மக்கள் 20ம் நூற்றாண்டில் மேற்கத்திய செவ்விசையிலிருந்து வெளியேறுகிறார்கள். இதன் பின்னணியைப் பார்ப்போம்.
மேற்கின் செவ்விசையும் பொதுமக்களும்:
மேற்கின் துவக்க, மத்திய கால இசை (5-15 நூ), தேவாலயங்களின் மூலம் மக்களுடன் தொடர்புடையதாகவே விளங்குகிறது. இதற்குப் பிறகான பொற்கால இசையிலும் மேற்கின் செவ்விசை மக்களுடன் நெருக்கமாகவே வளர்கிறது.
இன்று Bach, Mozart, Beethoven உள்ளிட்ட பலரது வரலாறைப் பார்க்கும் போது அவர்களின் இசை, தூய கலைக்கான வெளிப்பாடாக மட்டுமன்றி கேட்கும் மக்களை மனதில் வைத்தும், வருமானத்தை மனதில் வைத்தும், இயங்கு சூழலை மனதில் வைத்தும் இசையமைத்திருப்பது தெளிவாகிறது. இசை போன்ற பொருட்செலவாகும் கலையையும், அவர்கள் இயங்கிய காலத்தின் மாறிக்கொண்டே இருக்கும் அரசியல், பொருளாதார நிலைகளைக் கொண்டும் இதைப் புரிந்து கொள்ளலாம. மக்களுக்குச் சென்று சேர வேண்டிய விருப்பமும், தேவையும், நிர்பந்தங்களும் அவர்களுக்கு இருந்தன.
Baroque (16-17 AD) காலத்தில் இயங்கிய பல்வேறு இசையமைப்பாளர்கள் மக்களுக்கு எளிதாகச் சென்று சேரக்கூடிய வகையில் இசையமைத்திருக்கிறார்கள். Bach தனது Cantatas பாடல்களை தேவாலயத்தில் கூடும் மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்ததை இன்று எளிதாகக் காணலாம்.
Baroque காலத்திற்குப் பிறகான Classical (17-18 AD) காலத்தில் இசையின் களம், தேவாலயங்களிலிருந்து இசையரங்கத்திற்கு இடம் மாறுவதைக் கண்டோம். இந்த இடமாற்றம் பெருமளவில் மத்திய வர்க்கத்தினை நம்பி நிகழ்ந்த ஒன்று. Classical கால இசையில் The rise of middle class influence குறித்து சென்ற கட்டுரையில் கண்டோம். ஹைடன், மொஸார்ட் உள்ளிட்டவர்களின் இசையிலும், அழகியலிலும் நேர்ந்த மாற்றங்களை இதனைக் கொண்டு இன்று மேற்கின் இசை ஆய்வாளர்கள் அணுகுகிறார்கள். மொஸார்ட் Polyphonic இசையை Homophonic இசையாக மாற்றியதும் மக்களுக்காகவே. ஒரு வகையில் இசைக்கான வணிக சாத்தியங்களை இசையரங்கங்கள் மூலமாக ஆரம்பித்து வைத்த முதல் கலைஞராக மொஸார்ட் இன்று மதிப்பிடப்படுகிறார். பணத் தேவைகளுக்காக மொஸார்ட் பலமுறை இசையமைத்ததாகவும் சொல்லப்படுகிறது. தனது தந்தைக்கு அவர் எழுதிய கடிதம், அவர் ரசிகர்களை மனதில் வைத்து இசையமைத்தற்கான சான்று. அவர் அதில் இப்படிக் குறிப்பிடுறார்.
“Right in the middle of the First Allegro came a Passage that I knew would please, and the entire audience was sent into raptures..”
Classical காலத்திற்குப் பிறகு எழுந்த Romantic கால இசை, உணர்ச்சிப்பெருக்கான இசைக்கு முக்கியத்துவமளிக்கிறது. இது மக்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. பீத்தோவனின் Symphonyகளும், வாக்னரின் operaக்களும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதில் வியப்பில்லை.
மேற்கிசை பொதுமக்களின் பரவலான ரசனைக்குரியதாக விளங்கியதில், இசைநுட்ப ரீதியாக மிக முக்கிய காரணம் – தொனியியல் (tonality).
இன்று இசை பயிலாத ஒருவர், தியாகராஜரின் ஒரு கீர்த்தனையையோ, அல்லது ஒரு Mozart sonataவையோ இசைக்கான புரிதலின்றி, இசையனுபவமாக பெருமளவில் ரசிக்க முடியும். இதற்குக் காரணம் அதன் பின்னணியில் இருக்கும் தொனியியலே. தொனியியல் குறித்த புரிதலே, உலகெங்கும் இசை ஏழு சுர இசையாக அமைவதற்குக் காரணம். தொனியியல் எனும் ஒலிகளின் இயற்கைத்தத்துவமே, Melody மற்றும் Harmonyக்கான மூலாதாரம். மேற்கிலும் கிழக்கிலும் தமிழிசையும், கர்னாடக இசையும் மேற்கத்திய செவ்விசை இயக்கங்களும் இதன் அடிப்படையில் எழுந்தவையே. கிழக்கு, தொனியியலை மையமாகக் கொண்டு ராக சட்டகங்களை வளர்த்தெடுத்தது. மேற்கு, தொனியிலை மையமாகக் கொண்டு, Harmony எனும் சேர்ந்திசையை வளர்த்தெடுத்து, அதன் அனைத்து சாத்தியங்களையும் தனது Baroque, Classical, Romantic காலங்களில் நிகழ்த்திப் பார்க்கிறது.
ஆக தொனியியலை மையமாகக் கொண்ட இசை நுட்பத்திலும் சரி, இசைக்கான புறகாரணிகளிலும் சரி, மேற்கின் பொற்கால செவ்விசை மக்களிடம் பெருவாரியாகப் புழங்கியது, பரவலாக ரசிக்கப்பட்டது.
தொனியியலின் வீழ்ச்சி
எல்லாத்துறைகளையும் போலவே, இசையின் நுட்பங்கள் ஒவ்வொரு காலகட்டமாக வளர வளர, அடுத்த காலகட்டத்தின் கலைஞர்கள் தங்களின் முந்தைய காலக் கலைஞர்களை மீற வேண்டிய நிலை உருவாகிறது (அல்லது அவர்களே வலிந்து உருவாக்கிக் கொள்கிறார்கள்). மேற்கிசையின் கடைசி பொற்காலமான Romantic காலத்தில் இப்போக்கை பலவகைகளில் காணலாம்.
பீத்தோவன் மூலமாக பெரும் பூதமாக மாறிய Symphony வடிவத்தை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். தனது முந்தைய மொஸார்ட் கால symphonyகளை விட இரு மடங்கு நீளமான, பல பகுதிகளைக் கொண்ட, நூற்றுக்கணக்கான கருவிகள் கொண்ட இசைவடிவமாக Symphony உருமாறுகிறது. போலவே Liszt உள்ளிட்ட virtuso கலைஞர்கள் தங்களின் கருவி வாசிப்பை, அதன் எல்லைகளுக்கு எடுத்துச் செல்கிறார்கள். இப்போக்குகள் இசைக்கான புதிய சாத்தியங்களின் எல்லைகளை அளவுக்கதிகமாக நீட்டித்தாலும், இசையின் அடிப்படைகள் தப்பித்தன.
ஆனால் மற்றொரு புறம் வாக்னர் மூலமாக, மேற்கிசையின் அடிப்படையான தொனியியலின் கீழிறக்கம் துவங்குகிறது. வாக்னர் ஒபெராக்கள் மிக நீண்ட, பிரம்மாண்ட ஒபெராக்களாக, ரொமாண்டிசத்தின் உச்சங்களாக விளங்குகின்றன. அதே வேளையில் தொனியிலின் எல்லைகளை மீறத்துவங்குகின்றன. அவரது harmony தொனியியலின் எல்லைகளில் விளையாடுகிறது. இதன் மூலம் அவர் தொனியியலை மீறக் கூடிய சாத்தியங்களை (Diatonic to Chromatic) உருவாக்குகிறார். அவரது Tristan and Isolde எனும் ஒபெரா இத்தகைய போக்கிற்கு புகழ் பெற்றது. இந்த ஒபெரா மூலம், நவீன மேற்கத்திய செவ்விசைக்கான மொழியையும், அணுகுமுறையையும் அவர் துவங்கி வைக்கிறார். வாக்னர் துவங்கியதை அவரைப் பின்தொடர்ந்தவர்கள், முக்கியமாக French இசையமைப்பாளரான Claude Debussy போன்றோர் விரிவுபடுத்துகிறார்கள்.
இவர்கள் தொனியிலின் எல்லைக்குள் நின்று கொண்டே அதனை மீறுகிறார்கள். எனவே இது நேரடியாக சிக்கலில்லை என்றாலும், ஒரு விபரீதம் காத்துக் கொண்டிருந்தது. கடைசியில் Arnorld schoenberg வாயிலாக அது நேர்ந்தது. தொனியியலைக்(tonality) கடந்த அ-தொனியியல் (atonality) என்ற இசைப்போக்கை அவர் ஆரம்பிக்கிறார். ஒட்டுமொத்தமாக தொனியியலை அவர் நிராகரிக்கிறார். மேற்கின் தொனியியல் இசைக்கு எதிரான போக்கு உலகப்போருக்குப் பிறகான post-wagner காலத்தில் துவங்கி வளர்கிறது.
இத்தகைய போக்குகளை மேலோட்டமாகப் பார்க்கும் போது இவை இசையெனும் கலைக்கான முக்கிய செயல்பாடுகள் தான். அதன் சாத்தியங்களை விரிவுபடுத்தும் போக்குகள் தான். ஆனால் அதே வேளையில் இயற்கையின் ஒலி அமைப்புத் தத்துவத்தை ஒட்டிய தொனியியலை எதிர்த்துக் கிளம்பிய முயற்சிகள், அடிப்படையிலேயே தவறானவையாக, வறட்டுத் தத்துவங்களாகத் துவங்குகின்றன. கூடுதலாக இக்காலத்தில் இசை முழுக்க முழுக்க கணக்கு வழக்குகளில் செல்லத் துவங்குகிறது. நவீன இசை Musical Set theory போன்ற கணித சட்டகங்களையும், சூத்திரங்களையும் கொண்டு பலவித விளக்கத் தத்துவங்களுடன் இசையை அணுகத் தொடங்குகிறது.
இசை ஒரு நுட்பமான அறிவாற்றல் நிரம்பிய கலைதான். அதே வேளையில் முழுக்க அறிவியலாக, கணிதமாக இயங்கும் இசை அதன் இசையனுபவத்தின் சாத்தியங்களை இழக்கிறது. அ-தொனியியல் போன்ற இசை முயற்சிகள் என்ன இசையனுபவத்தை வழங்குகிறது என்று இசை கற்றவர்களுக்கே குழப்பமே மிஞ்சுகிறது. மக்களிடமிருந்து நவீன மேற்கத்திய செவ்விசை விலக இதுவே முக்கிய காரணமாகிறது.
அ-தொனியியல் போக்கை கடுமையாக நிராகரித்து மேற்கிசை வல்லுநரான Hindemith சொல்வது இங்கே குறிப்பிடத்தக்கது..
The vagueness of conception of a-tonality, arising from its negative origin (anti-tonality), caused it to grow from a technical term to a popular catch word, used by some to praise to skies, any music they did not understand….
I do not believe liberty is achieved by substituting mere variety against the principle of natural order..
மரபுகளை மீற வேண்டிய தேவை இருக்கும் அதே வேளையில், புதுமையின் பெயரால், தீர்க்கமான பார்வைகளற்ற முயற்சிகளின் விளைவையே, தொனியியலை நிராகரித்த இசையியக்கங்கள் காட்டுகின்றன்.
ஆக ஒரு பக்கம் மரபுகளைப் புனிதப்படுத்திக் காத்து வரும் நமது கர்னாடக இசை மக்களிடமிருந்து விலகுகிறது. மற்றொரு புறம் மரபுகளை அடிப்படையின்றி உடைத்த மேற்கிசையும் மக்களிடமிருந்து விலகுகிறது. வரலாறு மிக வினோதமானது.
இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலங்களில், இப்போக்குகளினால் மேற்கிலும் கிழக்கிலும் மக்களின் இசைக்கு ஒரு வலுவான வெற்றிடம் உருவாகிறது.
காலம் ஒரு வெற்றிடத்தை எப்படியாவது நிரப்பி விடுகிறது என்றே தோன்றுகிறது.
ஐரோப்பிய இசை மக்களிடமிருந்து விலக விலக, நேர்மாறாக அமெரிக்காவில் மக்களிடமிருந்து அல்லது மக்களாகவே மதிக்கப்படாத ஆப்பிரிக்க அடிமைகளிடமிருந்து தொடங்கும் இசை தனது பொற்காலத்திற்குள் நுழைகிறது. இருபதாம் நூற்றாண்டின் இசையாக உருவெடுத்த அமெரிக்க இசை ஒரு மகத்தான இசை வரலாறு. முதல் முறையாக இசையியக்கங்களின் தோற்றம் முதல் அதன் வளர்ச்சியைப் புரிந்து கொள்ள அமெரிக்க இசை மூலமாக வரலாறு நமக்கு ஒரு வாய்ப்பளித்திருக்கிறது.
அமெரிக்க மக்களிசை:
இன்று உலகில் அனைவருக்கும் தெரிந்த பிரபலமான இசை வகைமைகள் என Blues, Jazz, Rock, Pop எனப் பல்வேறு வகைமைகளைச் சொல்லலாம். இவற்றின் ஒற்றுமை, இவை பெரும்பாலும் அமெரிக்க இசையினை மையமாகக் கொண்டவை என்பதே. இசை வரலாற்றின் எந்த பக்கத்திலும் இடம் பெறாத அமெரிக்கா, இரு நூற்றாண்டுகளில் இத்தகைய பிரமிப்பூட்டும் இசை வளர்ச்சியை எப்படி சாதித்தது?
அமெரிக்காவில் தோட்ட வேலை பார்ப்பதற்காக, ஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட கதை நமக்குத் தெரிந்ததுதான். இவர்கள் இசைதான் Blues ஆக மாறியது என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் இந்த “மாற்றம்” எப்படி நிகழ்ந்தது?
ஆப்பிரிக்க மக்களை விலங்குகளாகவே அடிமைப்படுத்திய மேற்கத்தியர் மதித்தனர். ஆப்பிரிக்கர்களின் உடல் உழைப்பே மேற்கத்தியர்களுக்கு மூலதனம். ஆனால் வேலைக்கு இடையில் ஆப்பிரிக்கர்கள் பாடினார்கள். இதனை முதலில் வெள்ளையர்கள், அடிமைகள் சோர்ந்து விடாமல் இருக்க பயன்படும் எனக்கருதினார்கள். துவக்கத்தில் ஆப்பிரிக்கர்களின் இசையினைக் காட்டுமிராண்டிகளின் இசையாகவே அவர்கள் கருதினார்கள் . ஏனெனில் மேற்கத்திய இசைக்கு நேரெதிராக ஆப்பிரிக்கர்களின் இசை இருந்தது.
ஆப்பிரிக்க இசை – நாட்டாரிசையும் செவ்விசையும்:
மேற்கின் இசை தொனியின் இசையென்றால், ஆப்பிரிக்காவின் இசை தாளத்தின் இசை.
நாட்டுப்புற இசை என்பது பொதுவாக எண்ணப்படுவதைப் போல ஒதுக்குப்புறமான கிராமங்களில் பிறந்து வளரும் இசையல்ல. மாறாக மக்களின் வாழ்க்கையினூடாக வழங்கப்பட்ட, வழங்கப்படும் இசை. இத்தகைய இசையில் தாளம் முதன்மை பெறுவது இயல்பானதே. ஏனெனில் தாளத்திற்கு பிரத்யேகக் கருவிகளோ, தனிப்பட்ட பயிற்சியோ தேவையில்லை. கிடைத்த இடத்தில் தாளமிடலாம். வேலைக்கு இடையிலும் இசைக்கலாம் (“பாட்டோட பொழப்பும் நடக்குது” – வாலி). தாள இசையின் இத்தகைய தன்மையும் (portability), அதன் அழகியலுமே அதனை நாட்டுப்புற இசையின் மையமாக்குகிறது. உலகெங்கும் நாட்டுப்புற இசை தாளத்தை முதன்மையாகக் கொள்வதே.
ஆப்பிரிக்க இசை தாளத்தை முதன்மையாகக் கொண்டதோடு மட்டுமல்லாமல் நுட்பமாகவும் கையாள்கிறது. மேற்கின் தொனியிசை பல்வேறு Melody அடுக்குகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி Polyphonic இசையாக வளர்வதைப் பார்க்கிறோம். நேர்மாறாக ஆப்பிரிக்க இசை Polyrhythmic இசை. ஆப்பிரிக்க இசையில் தாள அடுக்குகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்படுகின்றன.
இவ்வாறு இசையில் நேர்மாறாக விளங்கியதைப் போலவே ஆப்பிரிக்க இசை அதன் பாடுபொருளிலும் மேற்கிசைக்கு நேர்மாறானது. செவ்விசையின் பாடு பொருட்கள் எப்பொழுதுமே நாடக, காவிய தன்மை வாய்ந்தவை. மேற்கின் இசை காவியங்களையும், காவிய உணர்வுகளையும் பாடிக்கொண்டிருந்த போது, ஆப்பிரிக்க இசையோ தினசரி வாழ்க்கையைப் பாடியது. காதல், கொண்டாட்டம், துயரம், அப்பட்டமான பாலியல் என அன்றாட வாழ்க்கையை ஆப்பிரிக்கர்கள் பாடினார்கள்.
இப்படி தங்கள் இசைக் கலாச்சாரத்திற்கு நேரெதிரான இசையினை அமெரிக்க வெள்ளையர்கள் முதலில் வெறுத்ததிலும் பண்பாடற்ற இசையாகக் கருதியதிலும் வியப்பில்லை. பிற்காலத்தில் இதுவே உலகம் கொண்டாடும் இசையாகிறது.
ஆப்பிரிக்க – மேற்கத்திய இசை கலப்பு:
ஆனால் அமெரிக்காவின் Civil War முடிவடையும் போது, ஆப்பிரிக்கர்கள் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறுகிறார்கள். முதல் முறையாக தங்கள் ஒதுக்குப்புறங்களிலிருந்து அமெரிக்க சமூகத்தில் கலக்கும் வாய்ப்பைப் பெருகிறார்கள். இத்தகைய கலப்பில் அவர்கள் பெற்ற வெற்றியை விட, அவர்களின் இசை அமெரிக்க கலப்பிசையாக வளர்ந்து வெற்றி பெருகிறது.
இத்தகைய கலப்பு முதலில் தேவாலயங்களில் நிகழ்கிறது. தேவாலயங்களில் ஆப்பிரிக்கர்களின் கூட்டங்களில் அவர்களின் இசை, மேற்கத்தியர்களின் தேவாலய இசைக்கு பதிலாக ஒலிக்கிறது. இது Spirituals என்றழைக்கப்படுகிறது. இதுவே ஆப்பிரிக்க இசை ஒரு பொதுவான் சமூகத் தளத்தில் இடம்பெற்ற முதல் தருணம். பிறகு தேவாலயங்களின் மூலமும், கொஞ்சம் நிறவெறி குறைவான மாகாணங்களில் நேரும் இசைப் பரிமாற்றங்களினாலும் ஆப்பிரிக்க தாள இசையும், மேற்கத்திய தொனியிசையும் கலந்து Blues இசை பிறக்கிறது.
இந்த கலப்பை Blues இசையின் நுட்பங்களில் தெளிவாகக் காணலாம். Blues இசை ஆப்பிரிக்கத் தாளங்களைக் கொண்டது. அதே வேளையில் மேற்கிசையின் Harmonyஐக் கொண்டது. 12 Bar Blues என்று சொல்லப்படும் Blues வடிவம் தெளிவான மேற்கத்திய Harmonic தொடர்ச்சியில் அமைந்தது.
Blues scale எனப்படும் Blues இசைக்கான சுர வரிசை, இந்த இசைக்கலப்பை அழகாகக் காட்டுகிறது. ஆப்பிரிக்க இசை 5 சுவரங்களைக் கொண்ட Pentatonic இசை. ஆனால் மேற்கின் இசையும் இசைக் கருவிகளும் 7 சுவரங்களைக் கொண்ட heptantonic இசை. எனவே இசைக்கலப்பில் ஆப்பிரிக்க இசை மேற்கின் இசையிலிருந்து சுவரங்களையும் பெற்றுக் கொள்கிறது. இப்படி மேற்கிலிருந்து பெற்றுக் கொண்டாலும், (பிரதானமாக Flattened notes) ஆப்பிரிக்க உணர்வு நிலையை பிரதிபலிக்கும் சுவரங்களையே எடுத்துக்கொள்கிறது. இவை Blues Scales ஆகின்றன.
ஆப்பிரிக்க மற்றும் மேற்கத்திய கலப்பிசையாக Blues கீழ்கண்டவாறு விளங்குகிறது.
.இத்தகைய கலப்பின் மூலமே Blues இசை வலிமையான இசை வகைமையாக உருப்பெருகிறது.
ஒரு புறம் பார்த்தால் Blues இசையிலிருந்தே soul, R&B, rock and roll, rock, Pop, Funk, Hip-Hop என இந்த நூற்றாண்டின் மிகப் பிரபலமான, உலகை வென்றுள்ள இசையியக்கங்கள் தோன்றியுள்ளன.
மற்றொரு புறம் சந்தேகமின்றி சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த நுட்பமான செவ்விசை இயக்கமாக Jazz, Blues இசையினைத் தோற்றுவாயாகக் கொண்டே வளர்ந்திருக்கிறது. இன்று Jazz எனும் இசையியக்கத்திம் நீங்கலாக நவீன செவ்விசையை அணுகவோ பேசவோ முடியாது. நவீன செவ்விசைக் கலைஞர்களை Coltrane, Davis, Mingus, Ellington போன்ற jazz கலைஞர்கள் நீங்கலாகப் பார்க்க முடியாது. நேரடியாக நவீன மேற்கின் செவ்விசையில் Gershwinன் rhapsody in Blues துவங்கி Blues மற்றும் Jazz இசையின் தாக்கத்தைக் காணலாம். ஒரு நூற்றாண்டில் Jazz இசை இத்தகைய பாய்ச்சலைச் செய்திருக்கிறது.
வெகுஜன இசையும், நுட்ப இசையுமாக Blues இசையை ஆதாரமாகக் கொண்டு அமெரிக்க இசை 20ம் நூற்றாண்டில் வளர்ந்திருக்கிறது. முழுக்க முழுக்க இரு இசைக்கலாச்சாரங்கள் இணைந்த புள்ளியில் தோன்றிய இசைப்புரட்சியே இது. முதல் முதலாக ஐரோப்பிய செவ்விசை ஒரு முற்றிலும் மாறுபட்ட ஆப்பிரிக்க இசைக்கலாச்சாரத்தைச் அமெரிக்காவில் சந்திக்கிறது. இரண்டும் இணைந்தத்தால் நேர்ந்த விளைவே இருபதாம் நூற்றாண்டின் அமெரிக்க இசை. இருபதாம் நூற்றாண்டை கலப்பிசையின் பொற்காலம் என்றே சொல்லலாம்.
சென்ற பகுதியின் இறுதியில் குறிப்பிட்டதைப் போல அமெரிக்க இசை வரலாற்றைக் கூர்ந்து பார்க்கும் போது நாம் எதை இழந்திருக்கிறோம் என்று தெரிய வருகிறது. ஆம், நம்மிடம் மேற்கத்திய செவ்விசைக்கு இணையாக கர்னாடக இசை எனும் செவ்விசை இருக்கிறது, ஆப்பிரிக்க இசைக்கு இணையான நாட்டுப்புற இசையும் இருக்கிறது. ஆனால் இங்கே இவை இரண்டும் இணைவதற்கான வாய்ப்பு எவ்வளவு என்பது தெரிந்ததே.
ஒரு புறம் அமெரிக்காவில் வெள்ளையர்களின் இசையும், அவர்கள் அடிமையாக நடத்திய ஆப்பிரிக்கர்களின் இசையும் இணைந்திருக்கிறது. ஆனால் இங்கே ஓரே பிரதேசத்தில் சாதியமும், பிற காரணிகளும் இசைக்குள் இயல்பாக நடக்க வேண்டிய கலாச்சார பரிமாற்றங்களை நடக்க விடாமல் தடுக்கின்றன. நமது பரிதாபமான சூழலை இந்த ஒப்பீடின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் மேலே சொன்னது போல, காலம் எப்படியாவது வெற்றிடத்தை நிரப்பி விடுகிறது. மேற்கில் தோன்றிய வெற்றிடத்தை அமெரிக்க இசை நிரப்பியதைப் போல, இங்கே தோன்றிய வெற்றிடத்தை நிரப்பும் வேலையை சினிமா எனும் நவீன கலை செய்கிறது.
Leave a Reply