இசையின் வரலாறு என்பது இசையின் மூலப்பொருட்கள் உருவாகும் வரலாறு மற்றும் அதனடிப்படையில் தோன்றும் இசை வடிவங்களின் வரலாறே (history of musical material and forms). சென்ற பகுதியில் நாம் பார்த்தது மேற்கிசையின் மூலப்பொருட்களின் வரலாறு. மேற்கிசையின் பொற்காலம் குறித்த இந்தப் பகுதியில் நாம் பார்க்க இருப்பது மேற்கிசையின் வடிவங்களின் வரலாறு.
மேற்கிசையின் பொற்காலத்திற்குள் நுழைவதற்கு முன்னால், அதன் மைய தத்துவமாகச் சொல்லப்படும் Harmony என்றால் என்ன எனப்பார்ப்போம்
Harmony மற்றும் Melody:
Melody என்பதை மெல்லிசை அல்லது இனிமையான இசை எனக்கொள்வது வழக்கு. ஆனால் இசைமொழியில் Melody என்பது சுரங்களின் தொடர்ச்சி, நேர்மாறாக harmony என்பது சுரங்களின் அடுக்கு. அதாவது Melody என்பது காலத்தில் (time) நிகழ்வது, Harmony என்பது இடத்தில் (space) நிகழ்வது.
மேற்கில் Melodyக்கான இசைச்சட்டகமாக மத்திய காலத்தில் mode விளங்குகிறது. Mode என்பது Scale எனும் சுவர வரிசையின் அடுத்த பரிமாணம். அதாவது Mode என்பது அடிப்படையில் ஒரு சுவரவரிசை தான் (scale). ஆனால் அது மட்டுமல்ல. ஒரு Mode என்பது ஒரு சுவரவரிசையில் எந்த சுவரம் முக்கியமானது, எந்த சுவரம் முதலில் வரவேண்டும், எது கடைசியில் வர வேண்டும் என்பது போன்ற விதிகளைக் (best practices) கொண்டது. இந்த mode சட்டகத்தை அடிப்படையாகக் கொண்டே மத்திய காலத்தில் பாடல்கள் (melody) அமைக்கப்படுகின்றன.
இன்று மேற்கத்திய இசையை Harmony இசை என்றும், கருவிகளுக்கான இசையென்றும் (instrumental music) கருதுகிறோம். ஆனால் மேற்கின் இசை மத்திய காலம் வரை (அதாவது 16ம் நூற்றாண்டு வரை) பிரதானமாக melodic இசை மற்றும் குரலிசையே (vocal music). மேற்கின் இசையின் மையத்தத்துவமான harmony இன்னும் வலுவாக உருப்பெறவில்லை.
மத்திய காலத்தின் Polyphonic இசை பல அடுக்குகளாக இருந்தாலும், சேர்ந்திசையாக ஒலித்தாலும் அவற்றின் ஒவ்வொரு அடுக்குகளும் தனித் தனி Melodyகளாக, எதிரிசைகளாகவே (counterpoint) கையாளப்படுகின்றன. இப்படி பல அடுக்குகள் சேர்வதன் விளைவாகவே Harmony அணுகப்படுகிறது (incidental/accidental harmony). இந்த அணுகுமுறையில் Harmonyக்கென்று எந்த தனி வேலையும் கிடையாது. ஒரு Melodyக்கான வெறும் அழகு பொருள் மட்டுமே (ornamentation). இது Modal சுவரங்களின் அடுக்காக அமைந்ததால் அக்காலத்தில் Modal Harmony என்றழைக்கப்படுகிறது.
ஆக மத்திய மற்றும் மறுமலர்ச்சி காலத்தின் முடிவில் மேற்கின் இசை, Polyphonic இசையாக, குரலிசையாக, modal melodic இசையாக, counterpoint இசையாகத் திகழ்கிறது. இக்காலகட்டத்தின் முடிவில்தான் மேற்கின் முதல் முக்கியமான Composer ஆன Palestrina (1525 -1594) தோன்றுகிறார். மேற்குறிப்பிட்ட மத்தியகால மேற்கிசையின் உச்சமாக அவரது இசை திகழ்கிறது.
மேற்கிசையின் பொற்காலம்
இக்காலகட்டத்திற்கு பிறகு மூன்று நூற்றாண்டுகளுக்கு (கிபி. 1600-1920) மேற்கிசை மலைக்க வைக்கும் சாதனைக்காலத்திற்குள் செல்கிறது. மேற்குலகின் இக்காலகட்டம் அறிவொளி காலமாகத்துவங்கி அறிவியலில், தத்துவத்தில் எனப்பல தளங்களில் மகத்தான பாய்ச்சல்களைச் செய்கிறது. இதற்கு இணையாகவே இசையின் வளர்ச்சியும் அமைகிறது.இப்பொற்காலம் மூன்று பிரிவுகளாக இன்று ஆராய்ச்சியாளர்களால் பிரிக்கப்படுகின்றன.
Baroque காலம் (1600 -1750 AD):
மறுமலர்ச்சி காலத்தின் தத்துவம், நயம், இலக்கணம், பாணி, வடிவங்கள் என்று மேலே பார்த்த எல்லாம், Baroque காலத்தின் முடிவில் தலைகீழாகி விடுகின்றன. ஒரு நூறு ஆண்டுகளுக்குள் Baroque காலம் இந்த மாற்றத்தை நிகழ்த்தி மேற்கிசையை புரட்டிப் போட்டு விடுகிறது. இதற்கு பல்வேறு கலைஞர்களின் பங்களிப்புகள் இருக்கின்றன. ஆனால் இவற்றின் நாயகனாக JS Bach (கிபி. 1685 -1750) தோன்றுகிறார்.
Bach பங்களிப்புகள்:
Bach இசை பழமைக்கும் புதுமைக்கும் பாலமான ஒன்று. தனது காலத்தில் பிற “புரட்சிகரமான” இசைவகைகள் தோன்றினாலும் பழமையின் சரியான தத்துவங்களையும், புதுமையையும் அவர் இணைக்கிறார். அவரது இசை polyphonic இசை. ஆனால் அதில் ஒருமுகத்தன்மை இருக்கிறது. அவரது இசையில் கருவிகளும் , குரலும் சரிவிகிததில் இணைகின்றன. கணிதத்தின் துல்லியம் போன்ற counterpoint மற்றும் அக்காலத்தின் வழக்கிலிருந்து வேறுபட்ட Harmony இசை. அக்கால இசைவடிவங்களையே உபயோகப்படுத்திகிறார். ஆனால் அவற்றில் புதுமைகள். மேற்கிசையை ஒலிச்சேர்க்கைக்கான இசையிலிருந்து சிந்தனைக்கான இசையாக மடைமாற்றுகிறார் (இது குறித்து ராஜாவின் இசையை அணுகும் போது விரிவாகப் பார்ப்போம்).
பழமைவாத இசையாகவும், அதிநுட்ப இசையாகவும் Bach இசை பெரும்பாலும் அக்காலகட்டத்தில் ஒதுக்கப்படுகிறது. ஆனால் அவரை யார் புரிந்து கொள்ள வேண்டுமோ அவர்கள் புரிந்து கொண்டார்கள்.ஆம் Haydn, Mozart, Beethoven உள்ளிட்ட அவருக்கு அடுத்த காலகட்டத்தின் கலைஞர்கள் Bach இசையினைக் கற்றுக்கொண்டே தங்கள் பாணிகளை வளர்த்தெடுக்கிறார்கள். எனவேதான் மேற்கிசையின் ஊற்றுச்சுனையாக Bach இசை திகழ்கிறது.
தொனியியல்:
Baroque காலத்தின் மற்றொரு முக்கிய பங்களிப்பு “தொனியியல்” (Tonality). உலகெங்கும் இசையில் “ஆதார தொனி” என்ற கருத்தாக்கம் உண்டு. அதாவது ச,ரி,க,ம,ப,த,நி என்று சுர வரிசை அமைந்தால், இதில் முதல் சுரமான “ச” எனும் சுரமே ஆதாரம். அதிலிருந்துதான் பிற சுரங்கள் பிறக்கின்றன (இது overtone series என்ற ஒலியியலின் அடிப்படையில் அமைகிறது). மேற்கைப் பொறுத்தவரை இந்த முதல் தொனிதான் தோற்றமும் முடிவும். இதன் மூலம் மேற்கு ஒரு தொனியை, இசையின் புவியீர்ப்பு விசையாக மாற்றுகிறது. இசை எந்த தொனியில் ஆரம்பிக்கிறதோ, அவ்விசையின் நகர்வு முழுவதும் இறுதியில் அந்த தொனியில் வந்து நிறைவடைவதற்காகவே. இந்த ஈர்ப்பு விசையை மையமாகக் கொண்டு மேற்கின் புதிய Harmony தத்துவங்களை Jean Philippe Rameau வெளியிடுகிறார். இதன் மூலம் இதுவரை Modal harmony ஆக இருந்த மேற்கிசை Tonal Harmony ஆக உருமாறுகிறது. ஒரு அழகு பொருளாக இருந்த harmony, இசையின் மைய விசைச்சக்தியாக உருப்பெறுகிறது. Melodyக்காக harmony என்பதிலிருந்து harmonyஐ மையமாகக் கொண்ட melody தோன்றுகிறது.
Classical காலம் (1750-1830 AD):
Bach காலத்திற்குப் பிறகு Polyphonic இசை அதன் இடத்தை இழக்கிறது. கலைஞனின் இடம் தேவாலயத்திலிருந்து, தியேட்டருக்கு மாறுகிறது. இப்போது கலைஞன் அரசரையும் மக்களையும் மகிழ்விக்க வேண்டும். அரசருக்கும் பெருவாரியான மக்களுக்கும் Polyphony சரிவராது. ஏனெனில் பல அடுக்குகள் கொண்ட Polyphonic இசையை ஒரே முறையில் முழுமையாக ரசிக்கவோ, தனியாக முணுமுணுக்கவோ முடியாது. மக்களுக்கு முணுமுணுக்க, புரிந்து கொள்ள பாடலில் ஒற்றை Melodyஇன் தெளிவு வேண்டும்.
எனவே இக்காலத்தில் ஒற்றை Melodyஐ மையமாகக் கொண்ட Homophonic இசைநயம் (texture) பிரபலமாகிறது.
Polyphony vs Homophony
ஒரு ஒப்புமைக்காக கீழுள்ள உதாரணம்,
மத்திய கால polyphonic இசை மன்னர் ஆட்சி போன்றது. Melody தான் மன்னர். இங்கே மக்களுக்கு (harmony) வாழ்க வாழ்க என ஜே! போடும் வேலைதான்.
Bach polyphony – எல்லோரும் இன்னாட்டு மன்னர் போன்றது. எல்லாம் சரி விகிதம். அது ஒரு utopia.நடைமுறைக்கு சரிவராது. Bach போன்ற கலைஞரால் மட்டுமே சாத்தியம்.
Classical கால homophonic இசை மக்களாட்சி போன்றது (democracy). இங்கும் ஒருவர் (Melody) தான் ஆள்கிறார். ஆனால் ஆள்பவரின் கடிவாளம் மக்களின் (harmony) கையில் இருக்கிறது.
Classical காலத்தில் sonata எனும் வடிவம் பிரதானமாகிறது. sonata எனும் வடிவம் Exposition, Development, Recapitulation எனும் மூன்று பகுதிகளால் ஆனது. ஒரு கட்டுரை எழுதினால் முன்னுரை, வளர்ச்சி, முடிவுரை என்று எழுதுவோமில்லையா. அதுதான் இந்த மூன்று பகுதிகளும். ஒரு Sonata, ஒரு pianoவிற்காக அமைக்கப்பட்டால் piano Sonata, மூன்று கருவிகளுக்காக இசைக்கப்பட்டால் trio, நான்கு Quartet, ஒரு முழு orchestraவிற்காக அமைக்கப்பட்டால் Symphony ஆகிறது. Haydn, Mozart பிரதானமாக, Classical காலத்தில் இவ்வடிவங்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றன.
Romantic காலம் (1800 -1920 AD):
இவ்வடிவங்களைக் கொண்டு ஆனால் இவற்றின் எல்லைகளை மீறி, அடுத்த காலகட்டம் இசையை அதீத உணர்வனுபவமாக மாற்றுகிறது. கலைஞன் ஒரு அரசின், நாட்டின் பொக்கிஷமாகிறான். Orchestraக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கருவிகளால் நிரம்புகிறது. இசை பிரம்மாண்டத்தை முதன்மை ஆக்குகிறது. இசை தனக்கான தூண்டுதல்களை இசைக்கு வெளியே பிற கலைகளிடமிருந்தும், தத்துவங்களிடமிருந்தும் பெற்றுக் கொள்கிறது. Beethoven , wagner இக்காலகட்டத்தின் முதன்மையான கலைஞர்கள்.
Baroque காலத்தில் சிறிய துணுக்கிசையாக விளங்கிய, கருவிகளின் சேர்ந்திசையாக உருவாகிய Symphony, Romantic காலத்தில் பல பகுதிகள் (movements) கொண்ட நீண்ட தொகுப்பிசையாகவும் (suite) மேற்கின் மைய இசை வடிவமாகவும் மாறுகிறது. இக்காலத்தில் எல்லாமே பிரம்மாண்டம் என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட கருவிகளைக் கொண்ட Orchestra இசைக்கும் Symphony முக்கியத்துவம் பெறுகிறது.Beethoven symphonyகள் இவ்வடிவத்தில் முதன்மையானவை. போலவே அது வரையில் கருவியிசை வடிவங்களே மேற்கிசையின் உச்சங்களாகக் கருதப்பட்டது. Opera போன்ற குரல் சார்ந்த வடிவங்கள் அலட்சியப்படுத்தப்பட்டன. இப்போக்கை Wagner operaக்கள் மாற்றியமைக்கின்றன.
ஆக Baroque, Classical, Romantic – இவையே மேற்கத்திய செவ்வியலிசையின் பொற்காலங்கள். இக்காலகட்டங்களைச் சுருக்கமாக இப்படிப்பார்க்கலாம்.
தொனியியலின் அத்தனை சாத்தியங்களையும் இம்மூன்று காலகட்டங்களும் நிகழ்த்தித் தள்ளுகின்றன. இனி செய்ய எதுவுமில்லை என்ற வகையில்.ஆனால் எல்லாவற்றையும் கட்டுடைக்கிறேன் பேர்வழி என்பவர்களுக்கா உலகில் பஞ்சம்.
மேற்கில் 20ம் நூற்றாண்டில் இந்த வேலையை Arnold schoenburg செய்கிறார். அதற்காக schoenburgஐ ஒரு வறட்டு புரட்சியாளராகப் பார்க்க முடியாது. தொனியியலின் அற்புதமான படைப்புகளும் தொனியியல் குறித்த அற்புதமான புத்தகங்களும் இவருடையவை. schoenburg தொனியியலைக் கேள்விக்குட்படுத்தி atonal இசை என்ற புதிய வகையை உருவாக்குறார். பிறகு நவீன காலம் tonal, atonal இசை எனப் பிரிகிறது.ஆனால் மேற்கின் பொற்காலம் wagner இறுதியாக முடிவடைகிறது.
மேற்கிசையின் பொற்காலம் அமையும் அதே காலகட்டத்தில் கிழக்கில் இன்னொரு இசையியக்கம் அதன் பொற்காலத்தை அடைகிறது.நமது கர்னாடக இசை. கர்னாடக இசை பற்றி நமக்குத் தெரியுமாகையால் சுருக்கமாக இதன் வரலாற்றைப் பார்ப்போம்.
கர்னாடக இசை:
கர்னாடக இசையின் மூலங்கள் வேதங்களிலிருந்து சொல்லப்படுகின்றன. சாம வேதத்தில் இசைக்கான சில கலைச்சொற்கள் தோன்றுகின்றன. பிறகு பரதசாஸ்திரம் எனும் (சமஸ்கிருத) நூலில் (கி.மு 2-கி.பி 2ம் நூற்றாண்டு) இசைக்கான இலக்கணங்கள் கிடைக்கின்றன. இதில் சுரங்களின் பெயர்கள் (சட்ஜம், ரிஷபம்,..) சுவரவரிசைகள், ஜதிகள், தாளங்கள், இசைக்கருவிகளின் குறிப்புகள் விரிவாகக் கிடைக்கின்றன.
பிறகு மாதங்கரின் பிரகதேசி என்ற நூலும் (கிபி 9-10 நூ), சாரங்கதேவர் இயற்றிய சங்கீத ரத்னாகரம் (கி.பி. 13) என்ற நூலும் கிடைக்கின்றன. இந்நூலே இன்றைய கர்னாடக மற்றும் இந்துஸ்தானி இசைக்கு அடிப்படையான நூலாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இதில் தான் இவ்விசையியக்கங்களின் இலக்கணங்களும், கலைச்சொற்களும் கிடைக்கின்றன.
மேற்கத்திய இசை வளர்ந்த அதே காலகட்டத்தில் தென்னிந்தியாவில் குறிப்பாக நம் தமிழ்நாட்டில் கர்னாடக இசை வளர்ச்சி அடைகிறது. கர்னாடக இசையின் மூலவராக புரந்தரதாசர்(கி.பி. 16) தோன்றினாலும், கர்னாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்த்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் கீர்த்தனைகள் இசையமைக்க கர்னாடக இசையின் பொற்காலம் கி.பி. 18,19 நூற்றாண்டுகளில் அமைகிறது. இக்காலகட்டமே கர்னாடக இசையின் சிகர காலம். கர்னாடக இசையின் இன்று வழங்கப்படும் வடிவம், 300 ஆண்டுகள் சமீபத்தில் தோன்றி வளர்ந்த ஒன்றே. மேற்கிசையின் பிதாமகர் Bach என்றால் இங்கே தியாகராஜர். பல்லாயிரம் கீர்த்தனைகளும் நுட்பமான உயிர்ப்புள்ள இசையும் அவரை கர்னாடக இசையின் மைய கலைஞராக்குகிறது.
மேலே உள்ள மேற்கத்திய இசையின் வளர்ச்சியை வைத்து, கர்னாடக இசை வெறும் Monophonic இசையென்றும், எனவே ஒப்பீட்டளவில் வளர்ச்சியடையாத ஒன்றாகவும் தோன்றலாம். ஆம் கர்னாடக் இசை Monophonic இசைதான். ஆனால் அதன் சிறப்பு அது சுவரங்களைக் கையாளுவதில் உள்ளது. கர்னாடக இசை ஒரு microtonal இசை. அதாவது ச,ரி, க, ம, ப, த ,நி என்று சுவரங்கள் இருந்தாலும், இந்த சுவரங்களுக்கு இடையிலான நுட்பமான frequencyகளை கர்னாடக இசை உபயோகிக்கிறது. அதாவது மேற்கு melodyஇல் மையச்சாலைகளில் சென்றால் கிழக்கு சந்துபொந்தெல்லாம் செல்கிறது.
கர்னாடக இசை ராகங்களை அடிப்படையாகக் கொண்டது. ராகம் என்பது சுவர வரிசை, முத்திரை பதங்கள் (phrases), முத்திரை கமகங்கள், ஆதாரமான சுவரங்கள் என பல பண்புகளைக் கொண்ட ஒரு சட்டகம்.மேற்கின் modeஐப் போல ஆனால் மிக விரிவான Melodic சட்டகம் ராகம்.
கர்னாடக இசை பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் மைய வடிவமாக கீர்த்தனை விளங்குகிறது. கர்னாடக இசை பெரும்பாலும் குரலிசையென்றும், பக்தியிசை என்றும் சொல்ல வேண்டியதில்லை -தெரிந்ததே.
மேற்கு கிழக்கு – செவ்விசை ஒப்பீடுகள்:
இன்று இவ்விசையியக்கங்களை ஒப்பிடுபவர்கள் ஒன்றை உயர்த்தியும், மற்றொன்றைத் தாழ்த்தியும் ஒப்பிடுவதுண்டு. உதாரணமாக மேற்கிசையின் Harmonyஐ வெறும் அழகுபடுத்தும் உத்தி (ornamentation) என்றும், improvisation அற்ற இறுக்கமான இசையென்றும் , இரண்டே scale தான் என்றும் இங்குள்ளவர்கள் சொல்வதைப் பார்க்கலாம். போலவே கர்னாடக இசையை வெறும் melodic இசை என்றும் எனவே நுட்பமற்ற இசையாகவும் கருதும் போக்குகளும் பார்க்கலாம். அடிப்படையில் இது இரண்டையும் சரியாகப் புரிந்து கொள்ளாத்தால் நேரும் பிழை என்றே தோன்றுகிறது.
இவ்விரு இசையியக்கங்களிலும் பலமான ஒற்றுமைகள் உள்ளன. மேலோட்டமான உதாரணங்களைச் சொல்வதானால் இங்கே ராகம் என்பது அங்கே mode என்றாகிறது. மேற்கின் மைய வடிவமான Sonata – exposition, development, recapitulation என்றால் கீர்த்தனை பல்லவி, சரணம் என்கிறது. (நுட்பமான ஒப்பீடுகள் இக்கட்டுரைக்கு வெளியில் செல்லும்)
அதே வேளையில் இவ்விரு இசையியக்கங்களின் மைய நோக்கங்களும் வேறாகையால், இவ்விரண்டும் அடிப்படையில் ஒன்றுபட்டாலும், வெளிப்பாட்டில் வேறுபடுகின்றன. மேலும் மேற்கிசையறிஞர் Paul Hindemith சொல்வதைப் போல, ஒரு இசை ஓரே நேரத்தில் முழுக்க melodic இசையாகவும், முழுக்க harmonic இசையாகவும் இயங்க முடியாது.எல்லாம் நம்மால் செய்ய முடிந்தால் இயற்கை எதற்கு?
ஆக மேற்கத்திய இசை பல அடுக்குகள் கொண்ட Homophonic இசையாகவும், கர்னாடக இசை மிக நுணுக்கமான Monophonic இசையாகவும் கடந்த 400 ஆண்டுகளில் பரிணமித்திருக்கின்றன.
இந்த செவ்விசை வரலாறுகளையும், தத்துவங்களையும் கொண்டு நாம் விரிவாக ராஜாவை அணுகலாம். ஆனால் அதற்கு முன்னால் ஒரு முக்கியமான வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்கு அதிகம் தெரியாத வரலாறு அது. நம் இசை வரலாறு.
Leave a Reply