குழு: Sigur Ros
மிகப்பெரிய திறமைகளும், இசை விற்பன்னர்களும் நிறைந்த நவீன மேற்கத்திய இசையுலகில், புதிய முயற்சிகளுக்கும், இசை அனுபவங்களுக்கும் பஞ்சமில்லை. எனவே இதில் புதிய என்பது ஒருவகையில் வழக்கமான ஒன்று தான். இல்லாவிட்டால் தான் அதிசயம். இத்தகைய முனைப்பான சூழலில் முற்றிலும் தனித்துவமாக ஒரு முயற்சி அமைந்து அசரடிப்பது மிக உற்சாகமான ஒரு நிகழ்வு. அதுவும் நாம் எதிர்பார்க்கும் குழுக்களும், ஜாம்பவான்களும் புதிய இசைக்காக தவமாய்தவமிருக்கும் போது, விளையாட்டாக (Sigur Ros போல) முற்றிலும் எதிர்பாராத திசையில், வகையில் நம்மை ஒரு இசை கொள்ளை கொள்ளும்போது நேரும் உற்சாகம் அளவற்றது. நவீன இசையின் போக்கில், வல்லமையில் மேலும் நம்மை நம்பிக்கை கொள்ளச் செய்யும் நிகழ்வு.
Sigur ros என்ற இந்த Iceland நாட்டின் குழுவிற்கு எல்லாமே விளையாட்டுதான். அவனவன் தன் குழுவிற்கும், இசைதொகுப்புக்கும் பெயரிட Immanual kant, Occultism, Pagan mythology தொடங்கி மண்டையை உடைத்துக்கொள்ளும் போது, இவர்கள் செய்திருப்பதை பாருங்கள். குழுவின் முன்னணி இசையமைப்பாளரான Jonsi தனது தங்கையின் பெயரை குழுவிற்கு வைத்ததுவிட்டார். Sigur என்றால் Victory, ros என்றால் Rose. Icelandic சொல் என்பதால் Exotic ஆகி தப்பிவிட்டார்கள். தொகுப்பின் முதல் பாடலை ஒத்திகையின்போது கேட்ட ஒருவர், இது நல்ல துவக்கம் என்று சொல்ல அதையே தொகுப்பின் பெயராக்கிவிட்டார்கள். இவர்களின் கொடுமையான ஒற்றைவரி பேட்டிகள் வேறு. மோசமான இசை பேட்டிகள் பட்டியலில் இவர்களுக்குத் தனியிடம் உண்டு.
ஆனால் இவர்களின் Agaetis Bryjun தொகுப்பைக் கேட்டவுடன் எத்தனை குழுக்கள், “இந்த இசையை அடையத்தானே நாம் இத்தனை காலம் மெனக்கிட்டுக்கொண்டிருந்தோம்” என்று புலம்பியிருக்குமோ. 1999ஆம் வருடம் வெளிவந்து Iceland நாட்டில் பிரபலம் பெற்றது இத்தொகுப்பு. பின்னர் வாய்மொழியாகவும், இணையத்தின் மூலமும் வெளியுலகிற்கு தெரிய வந்தது. RadioHeadன் Thom Yorke வியந்து பாராட்ட, பிற பிரபலங்களும் சேர்ந்து கொள்ள, 2001ல் உலக அளவில் மறுவெளியீடு செய்யப்பட்டது. பல்வேறு பட்டியல்களில் இந்த நூற்றாண்டின் சிறந்த தொகுப்புகளுள் ஒன்றாக Agaetis Bryjun கொண்டாடப்படுகிறது.
இந்த தொகுப்பின் Intro இசையை cassette வடிவில் கேட்டிருந்தால் நிச்சயம் tape சிக்கியிருக்கிறதோ என்றுதான் நினைத்திருப்பேன். அப்படி ஒரு துவக்கம். பிறகு Jonsiன் குரல் கொஞ்சம் தெளிய வைக்கிறது. ஆனால் கட்ட கடைசியில் சரியாகத்தான் கேட்கிறோமா என ஆரம்பிக்கும் மணியோசை நிமிரவைக்கிறது. பின்னர் அதுவே தீர்க்கமாக ஒலிக்க, அதனை அடியாகக் கொண்டு முதல் பாடல், Svefn-g-englar. முழு உன்மத்தம். புத்தருக்கு போதி மரத்தடியில் இந்த இசைதான் கேட்டிருக்கும் என்றும், பிரபஞ்ச தோற்ற, முடிவில் ஒலிக்கும் இசை இப்படித்தான் இருக்கும் என்றும் இவ்விசை குறித்து இணையத்தில் ரசிகர்கள் புலம்பக்காணலாம். வேறு வழியில்லை. இசை அதுவும் இது போன்ற இசை தரும் அனுபவங்களை பிதற்றலல்லாமல் எப்படி விவரிக்க. நவீன வாழ்க்கையின் பிசுபிசுப்புகளுக்கு இடையில், வேலையும், அலைச்சலும், மிச்ச மீதியை குடும்பமும் துவைத்து எடுத்த பிறகான ஆயாசத்தில்,வீட்டின் மூலையில், கலைந்து கிடக்கும் அறையில், இரு வளையங்களை காதில் மாட்டிய சில நிமிடங்களில் பிரபஞ்சம் கடக்கும் உணர்வை அளிக்கவல்ல இசையை எவ்வளவு போற்றினாலும் தகும்.
Agaetis Bryjun தொகுப்பின் குறிக்கோள் அலாதியான இசையனுபவமே. இது போன்ற இசையின் சவாலென்பது, ரசிகனை தான் எதிர்பார்க்கும் தளத்திற்கு கடத்துவதும், பிறகு கொஞ்சமும் நகர விடாமல் ஆணியடித்து அத்தளத்தில் அமர வைப்பதுமே. இத்தொகுப்பு இரண்டாம் சவாலில் முழுமை அடைந்திருப்பதாக சொல்ல முடியாது. ஆனால் முதல் சவாலை ஊதித்தள்ளுகிறது. மிக எளிதாக ரசிகனை தான் எதிர்பார்க்கும் மோன நிலைக்கு கடத்துகிறது. இதை சாத்தியமாக்குவது இசையின் அமைப்பபைவிட அதன் ஒலிநயமே. சூழலை உருவாக்கும் eletronic இசை, பியானோ, Jonsiன் பெண்குரல் இதற்கு வித்திடுகின்றன. போதா குறைக்கு விசித்திர கருவிகள் வேறு. Jonsi உபயோகிக்கும் Cello bow guitar எழுப்பும் பேரொலி மிரட்டுகிறது. இவ்வாறான கலவையில் அமைந்த ஒலிநயமே இவ்விசையின் பலம். இதுவே கனவுலக, சூழலிசையின் இந்நூற்றாண்டின் அடையாளமாக Sigur Ros கொண்டாடப்படும் காரணம். பல புனைவு திரைப்படங்களிலும், இயற்கை சார்ந்த ஆவணப்படங்களிலும் Sigur Ros இசை ஒலிக்கும் காரணம்.
இந்த தொகுப்பு கொடுத்த அனுபவத்தை இதற்கு முன்பு கொடுத்த தொகுப்பென்றால் அது Pink Floyd குழுவின் Dark Side of the Moon தொகுப்பு தான். Pink Floyd உருவாக்கிய Space Rock பாணியிசையின் இக்காலத்தின் நாயகர்கள் என்றே Sigur Ros பற்றி நினைக்கத் தோன்றுகிறது. இந்த இரு தொகுப்புகளும் ஒரு இசையனுபவத்தின் இரு துருவங்களாகவே எனக்குத் தோன்றும். Floyd எதிர்மறையான இசை. வெறுப்பும், பித்தும் தாங்கியது. Sigur Ros இசை நேர்மறையானது. அழகும், தியானமும், விளையாட்டுத்தனமும் நிரம்பியது. இரண்டிற்கும் பொதுவான மாயநிலையே இரு இசைகளின் கண்ணி. இருவரின் இவ்விரு அற்புத பாடல்களை எடுத்துக்கொள்வோம்.
Pink Floyd இசை வியட்நாம் போரின் பின்னணியில், குழுவைச் சேர்ந்தவரின் மனநலமின்மையின் விளைவு. Sigur Ros இசையின் பின்னணி உலகின மிக அழகான, இயற்கை எழில் நிறைந்த Iceland நாடு. எரிமலையும், பனியும், Northern Lights மற்றும் மிக முக்கியமாக தூய்மையான தண்ணீர் நிறைந்த Iceland. அதன் அற்புத அழகே இத்தொகுப்பெங்க்கும் வியாபித்திருப்பதாகத் தோன்றுகிறது.
எனவே ஒன்று Dark Side of the moon. இத்தொகுப்பு the other glorious side….
சில தேர்வுகள்
1.Svefn-g-englar
2. Staralfur