குழு: Maudlin of the well
ஒவ்வொரு இசைக்குழுவும் தட்டுத்தடுமாறியோ அல்லது சில வேளைகளில் படிப்படியாகவோ தனது இசைவடிவின் உச்சத்தை வந்து அடைய கொஞ்சம் காலமாகிறது. ரசிகனுக்கு ஒரு நுட்பமான இசைக்குழுவைச் சரியாகப் புரிந்து கொள்ள இன்னும் காலமாகிறது. இந்த இருவரும் இந்த கடினமான காலகட்டத்தை தாண்டிய பின்னர், ஒரு அருமையான பொற்காலம் இருவருக்கும் அமைகிறது. தனக்கு கைவரப்பெற்ற கலையாற்றலின் உச்சத்தில் குழுவும், அதன் மதிப்பு தெரிந்து அனுபவிக்கும் ரசிகனும் என இருவருக்குமான ஒரு பொற்காலம் அது.
பல்வேறு காரணங்களால் இசைக்குழுக்கள் கலைந்தாலும், ஒரு இசைக்குழு கலைவதற்கு மோசமான காலகட்டம் என்றால் இந்த பொற்காலம் தொடங்க இருக்கும் வேளைதான். தங்களது உச்சத்தை அடைந்த உடனோ அல்லது அதற்கு சற்று முன்பாகவோ, இசைகுழுக்கள் கலையும் போது, அந்த குழுவின் இசைவடிவத்திற்கு பழக்கப்பட்டு, ருசி கண்ட ரசிக மனம், நிகழ்ந்திருக்கக் கூடிய சாத்தியங்களை எண்ணிப் புலம்பாமல் இருக்க முடிவதில்லை. Maudlin of the well இப்படி நடுவழியில் கலைந்த ஒரு இசைக்குழு.
Maudlin of the wellன் முதன்மையான கலைஞர் Toby Driver சிறு வயது முதலே பல்வேறு இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்றவர். இவருக்குத் தெரிந்த இசைக்கருவிகளை விட தெரியாத கருவிகளை கணக்கெடுப்பது எளிதெனத் தோன்றுகிறது. Metal இவருக்குப் பிடித்த வகைமை. 18 வயதில் குழுவை ஆரம்பித்து தொகுப்புகள் வெளியிடத்தொடங்குகிறார். இளரத்தம். புதுமை செய்யாமல் இருக்க முடியுமா? தனக்குப் பிடித்த metal இசையும் தனக்குத் தெரிந்த செவ்வியல் இசையுமென ஒரு கலவையாக இவர்களது இசை ஆரம்பிக்கிறது. முதலிரண்டு தொகுப்புகள் படிப்படியான வளர்ச்சியா, இல்லை தடுமாற்றமா எனத்தெரியவில்லை. ஆனால் Bath ஆரம்பித்த நொடியிலிருந்து தெரிந்து விடும். இது ஒரு மடைதிறப்பானத் தொகுப்பு என்று. இதன் இரட்டைத் தொகுப்பான Leave your body map (இத்தொகுப்பின் அட்டைப்படம் Bath தொகுப்பிலும், அதன் அட்டைப்படம் இதிலும் இருக்கும்) உடன் சேர்த்து ProgMetalல் ஒரு புதிய பாய்ச்சல் என்றே சொல்ல வேண்டும்.
இதற்கு அடுத்த இவர்களின் தொகுப்புகளைக் கேட்க பேராவலாக இருந்த போது இவர்கள் இத்தொகுப்போடு நின்று விட்டார்கள் என்று தெரிந்தது பெரிய ஏமாற்றம்.
இத்தொகுப்பிற்குப் பிறகு, பல்வேறு காரணங்களால் மூன்று தொகுப்புகளை மட்டுமே வெளியிட்டு இருந்த இக்குழு Kayo Dot என, பெயர் மற்றும் இசைவடிவத்திலும், மாற்றம் அடைந்தள்ளது. இது நடந்து ஆண்டுகள் ஆனாலும் MOTW குழுவை ரசிகர்கள் மறந்த பாடில்லை. Kayo Dot நிகழ்ச்சிக்குச் செல்லும் ரசிகர்கள் தவறாமல் MOTW பாடல்களை இசைக்க விண்ணப்பிக்கிறார்கள். இது பொதுவாக நடப்பதுதான் என்றாலும் MOTW விஷயத்தில் இன்னும் ஒரு படி மேலாக ஒரு ரசிகர் புதிதாக ஒரு தொகுப்பை செய்ய முழுவதுமாக சொந்த காசை கொடுத்து 2009ல் நான்காவது தொகுப்பை MOTW வெளியிட்டது.
முந்தைய பதிவில் குறிப்பிட்ட Porcupine Tree, (Rock இசையில்) Progressive பாணியை கையாளும் முறை, வழக்கமான ஒன்று. அதாவது ஒரு வகைமையில், பிற வகைமையின் கூறுகளையும், இசைக் கலைஞர்களின் நுணுக்கத்தையும், பாடல்களின் அமைப்பில் மாற்றங்களையும் கொண்டு ஒரு நகர்வை நிகழ்த்துவது. இது அவ்வகைமைக்கு உள்ளிருந்து மாற்றங்களை முயன்று பார்க்கும் செயல். Metalஐ பொருத்தவரையில் Between the Buried and Me குழுவின் Colors இவ்வகையில் பிரமாதமான தொகுப்பு.
MOTW இதற்கு மாறாக Metalஐ அதற்கு வெளியில் நின்று அணுகுவதாகச் சொல்கிறார்கள். இதனை நான் இவ்வாறு புரிந்து கொள்கிறேன். Deadwing, Colors தொகுப்புகளை கேட்டவுடன் இது rock என்றும், இது Metal என்றும் நம்மால் சொல்ல முடியும். அதே நேரத்தில் வழக்கமான Rock, Metal அல்ல என்றும் சொல்ல முடியும். ஏனெனில் அதில் பெரும்பாலும் Rock/Metal கூறுகளே. ஆனால் பிற கூறுகள் ஒரு மாற்றுக் கண்ணோட்டத்தைக் கொண்டு வருகின்றன. ஆனால் Bath தொகுப்பை கேட்பவர்க்கு இது Jazz என்றோ, Indie Folk என்றுதான் தோன்றும். இசைக் கருவிகள், பாடல் முறை இப்படி பலவும் நேரடியாகப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் இவற்றின் மூலமாக அவர்கள் உருவாக்கும் அல்லது உருவாக்க நினைக்கும் சூழலே இதனை Metal ஆக்குகிறது.
முதல் பாடலான Blue Ghost ஒரு நல்ல முன்னோட்டம். பாடல் ஆரம்பிப்பது ஒரு அருமையான Jazz தடத்தில். போதா குறைக்கு Sax வேறு. ஆனால் சுமார் 6.40 நிமிடங்களில் இதே வரியை Electric Guitar வாசிக்கும் போது முதல் மெல்லிசையின் வன்மை புரிகிறது. கிட்டத்தட்ட இதே சிந்தனையினை தொகுப்பு முழுதும் காணலாம். Acoustic Guitar, Sax, Keyboard இவற்றில் மெல்லிசையாக ஆரம்பித்து வல்லிசையாக electric guitar, Drums பாடலைக் கடத்துகிறது. ஆனால் முன் பாதியில் வரும் Jazz பாணியிலான பகுதி பெரும்பாலும் ஒரு வன்மையும், பதட்டத்தையும், அசாதாரண அமைதியும் கொண்ட பகுதி. பாய்ச்சலுக்கு முன்பான பதுங்குதலைப் போல. இதுவே ஒரு கனத்த சூழலை உருவாக்க, Metal கூறுகள் அதை நிறைவு செய்கின்றன. இந்த தொகுப்பின் பிரபலமான பாடலான Heaven and Weak இதற்குச் சிறந்த உதாரணம்.
சில விதிவிலக்குகளும் உண்டு. ஒரு முழு தாலாட்டுப்பாடல் உட்பட. Metal தொகுப்பில் என்னவெல்லமோ கேட்டு இருந்தாலும், இது ஒரு உலக சாதனைதான்(இதையெல்லாம் எப்படி தைரியமாக metal நிகழ்ச்சிகளில் பாடினார்களோ!!).
இந்த தொகுப்பைக் கேட்கும் போது இது வழக்கமான வகையில் உருவாக்கம் அடைந்திருக்கும் என்று தோன்றியது. அதாவது ஒரு மைய இசைவரியை வைத்துக்கொண்டு, கலைஞர்கள் நிகழ்த்திய(impromptu) இசையாகத் தோன்றியது. Jazz பாணியிலான சுதந்திரம் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்பட்டதாகத் தோன்றியது. ஆனால் இவர்கள் பேட்டியில் இது முழவதுமாக இசைஅமைக்கப்பட்டதாகவும், கொஞ்சம் கூட பதிவின் போது மாற்றப்படவில்லை என்றது நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
பொதுவாகவே மேற்கின் இசைக்குழுக்களின் சித்தாந்தங்கள் விபரீதமாக இருக்கும். இந்த இசைத்தொகுப்பை செய்ய Astral Projections, Lucid Dreams போன்றவற்றை இவர்கள் சொன்னார்கள். சொன்னார்கள் எனச் சொல்லக்காரணம் இது பற்றி இப்போது கேட்டால் Toby Driver சிரிக்கிறார். ஆமோதிக்கிறாரா, மழுப்புகிறாரா தெரியவில்லை.
இத்தொகுப்பின்,ஏன் MOTW இசையின், உச்சமாக எனக்குத் தோன்றும் Girl with a Watering Can பாடல், முதல் பாடலின் இசையோடு ஆரம்பிக்கிறது. பிறகு வரும் பெண் குரல் தெய்வீகம் (Maria Stella Fountoulakis). ஆனால் அது முடிந்தவுடன் Toby Driver குரலில் ஒரு பகுதி வருகிறது. இதைக் கேட்கும் போது Toby இது Astral projection, Lucid Dreams என்ன, கடவுள் தோன்றினார் என்றாலும் நான் தலையாட்டவே செய்வேன்.
சில தேர்வுகள்:
1. Girl with a watering can
2. Heaven and Weak
[
குழு குறித்து:
Toby Driver (front man), Jason Byron, Massi போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இக்குழு மேற்குறிப்பிட்டது போல தற்சமயம் Kayo Dot ஆக உருமாற்றமடைந்துள்ளது. Bath தொகுப்பின் மூலம் தனது இருப்பை என்றென்றைக்குமாக நிறுவியுள்ளது.