குழு: Porcupine Tree
Progressive Rockன் பொற்காலம் 1960s,1970s தான். King Crimson, Yes, ELP, Genesis என இவ்வகைமையின் முக்கிய கலைஞர்கள் கோலோச்சிய காலம் அது.
ஒவ்வொரு வகைமையும் அதற்கு முன்பிருந்த பாணியின் போதாமைகளைக் கொண்டே உருவாகிறது, நிலைபெறுகிறது. தனக்கே தெரியாமல் தன்னிலும் ஒரு போதாமையை உருவாக்கி விடுகிறது.
Classical Rock இசையின் வெகுஜனத்தன்மை, கலையம்சத்தின் போதாமை – இவையே Progressive Rockன் மூலாதாரம். ஆனால் இதன் ஆரம்பங்கள் Classical Rock குழுக்களான Beatles, BeachBoys போன்றோரிடமும் இருந்தன. இக்குழுக்களும் தங்களது இசையினை மேலும் நுட்பமாக்கவும், psychedlic போன்ற அசாதாரண உணர்வு நிலைகளை வேண்டியும் தங்களது இசையில், அணுகுமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வரத்தொடங்கின. Sgt Pepper, Pet Sounds போன்ற தொகுப்புகள் இந்த போக்கை ஆரம்பித்து வைத்தன.
Classical Rock இசையின் வெகுஜனத்தன்மைக்கு மாற்றாக, கலையம்சமமும், இசைநுட்பமும் முதன்மையாகக் கொண்டு வெளிவந்த Rock இசையே Progressive Rock என்றழைக்கப்பட்டது. இசைவடிவத்தில், தாளஅமைப்பில், வித்தியாசமான கருவிகளின் சேர்ப்பில், பாடல் வரிகளில், உணர்வுகளில், வாத்தியக்கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தில் என சிக்கலாகவும், புதிராகவும், ஆழமாகவும் Rock இசை ProgRockஆக உருமாறியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இம்முயற்ச்சிகள் ஆரம்பித்தாலும் King Crimsonன் In the court of King Crimson கரைகளை உடைத்த தொகுப்பு. பிறகு ProgRock இசையின் பொற்காலம்.
பிறகு இந்த நுட்பமே அளவுக்கு மீறி நஞ்சாகி ProgRockன் வீழ்ச்சிக்குக் காரணமானது. நுட்பம் என்ற பெயரில் பம்மாத்து முதன்மையானது. இசையமைப்பு ஏதுமின்றி பாடல்கள் நீண்டுகொண்டே இருந்தன. வெகுஜனஇசை ரசிகர்களைக் குறி வைத்து செய்யும் கேலிக்கூத்துகளுக்கு கொஞ்சமும் குறைவின்றி ProgRock குழுக்கள் நடந்து கொண்டன. தங்களைச் சுற்றி மாய பிம்பங்களை, தொகுப்புகளைச் சுற்றி வெற்றுப் புதிர்களை கட்டமைத்து ஒரு போலியான அறிவுஜீவித்தனத்தை வளர்த்தெடுத்தன. இந்த மேட்டிமைத்தனத்திற்க்கு எதிராக உருவான கலாச்சாரம் Punk Rock இசையாகி ProgRock அலையை முடிவுக்குக் கொண்டுவந்தது.
ஆனாலும் காலம் ProgRockஐ மறக்கவில்லை. தற்போது நாம் ஒரு ProgRockன் மறுமலர்ச்சி காலத்திலிருக்கிறோம் என்றே சொல்லலாம். தினமும் ஒரு புதிய தொகுப்பு இவ்வகைமையில் வெளிவருகிறது. ProgRock முன்னிருத்தும் நுட்பமும், சுதந்திரமுமே இந்த கவர்ச்சிக்குக் காரணம்.
இத்தகைய மறுமலர்ச்சிக்குக் காரணமான குழுக்களுள் முதன்மையானதாக Porcupine Treeஐ சொல்லலாம். Porcupine Tree தொகுப்புகளுள் முக்கியமானதாக In Absentia என்ற இத்தொகுப்பைச் சொல்லலாம்.
ProgRock தவிர பிறிதொன்றை Porcupine Treeன் முதன்மையாளரான Steve Wilson செய்ய வாய்ப்பே இல்லை. ஏனெனில் 80 களில் இசை கேட்கத்தொடங்கிய Steve Wilsonனுக்கு கனவுலகமாகத் திகழ்ந்தது 60,70 களின் ProgRock இசையே. ஆனால் அவர் இசைக்க வரும் 90 களிலோ அது காணாமல் போன ஒன்று. அதனை மீட்டெடுக்கும் முயற்ச்சியில் தனியாகவும், குழுவாகவும் தொகுப்புகளை செய்து வந்த Steve Wilsonனுக்கு வெற்றியாக அமெரிக்காவின் பிரபலமான Lava Records இசைத்தொகுப்பு வெளியிட முன்வந்து In Absentia உருவானது.
ஆனால் Lava Recordsஐ விட இந்த தொகுப்பினால் விளைந்த இன்னொரு கூட்டணி மேலும் முக்கியமானது. அது குழுவிற்கு புதிதாகச் சேர்ந்த Drummer Gavin Harrison தான். முதல் முறை அவர் வாசித்ததை கேட்டு குழுவே பரபரப்பானதாகவும், எல்லோரும் தங்கள் வாசிப்பற்றலை ஒரு படி உயர்த்திக்கொள்ள வேண்டி இருந்ததாகவும் Wilson குறிப்பிடுகிறார். சிக்கலான தாளஅமைப்புகள், வேகம், துல்லியம், இவற்றிற்கு ஊடே மிக மென்மையான கீற்றுகள் என Gavin நிகழ்த்தும் அற்புதம் நிச்சயமாக நவீன காலத்தின் தலைசிறந்த Drummerகளில் அவரை ஒருவராக்குகிறது. Steve Wilsonன் கற்பனை வளமிக்க Guitar சேர்ந்து கொள்ள இந்த தொகுப்பு நம்மை 70 களின் பொற்காலத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது.
ProgRock சட்டப்படி இதுவும் ஒரு Concept Album. In Absentia என்று எந்த இல்லாமயைக் குறிக்கிறது என்பதற்கு ஒரு பேட்டியில் Wilson ஆன்மா என்று குறிப்பிடுகிறார். பாடல்களும் கொலையாளிகள், குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றவாளிகள் அவர்களது மனப்பிறழ்வு குறித்து இருப்பதால் இத்தொகுப்பு ஆன்மாவை இழந்தவர்கள் பற்றியதாகிறது.
இந்த தொகுப்பில் குறிப்பிட வேண்டிய இன்னொன்று இதில் வரும் Metal Guitar பகுதிகள். இந்த காலகட்டத்தில் தான் Steve Wilson மற்றும் Opeth குழுவின் முதன்மையாளரான Mikael Akerfeldt, இருவரின் நட்பும் உருவாகத் தொடங்கியது. அதன் பாதிப்பை நாம் இத்தொகுப்பில் தெளிவாகக் காணலாம்.
இவை போக தொகுப்பு முழுதும் Steve Wilsonனின் முத்திரைகள் நிரம்பி வழிகின்றன. அருமையான வாத்திய பகுதிகள், வசீகரமான chorus பகுதிகள், Keyboard பகுதிகள், Pink Floyd பாணியிலான Space Rock, புத்திசாலித்தனமான துவக்கங்கள் மற்றும் மடைமாற்றுகள் என ரசிக்க குறைவில்லாத் தொகுப்பு.
இந்த தொகுப்பின் பலத்தையும், பலவீனத்தையும் Trains என்ற ஒற்றைப் பாடலிலேயே கண்டு கொள்ளலாம். பாடல் Acoustic Guitarல் ஆரம்பிக்கிறது. ஆனால் வெகு நவீனமாக, மிக எளிமையாக. பிறகு Steve Wilson இரண்டு வரிகள் பாடுகிறார். வழக்கம் போல மிகச் சாதாரணமாகப் பாடுகிறார். பல அருமையான விஷயங்கள் இருப்பதால் Wilsonன் பாடலை மன்னிக்கலாம். ஆனால் குரல் பகுதிகளை மட்டுமே கேட்கும் ஒருவர் இது ஒரு Teenage Boy Band என்று நினைக்கக் கூடும். குரல் முடிந்ததும் ஒரு மிதப்பான Heavy Guitar. குரலும், Drums சேர்ந்து கொள்ள ஒரு நல்ல பாடலாகிற்து. இடையில் Guitarன் `அழகான தனி ஆவர்த்தனம். பிறகு மீண்டும் பாடல், ஒரு நல்ல Chorus. பிரமாதமாகப் போய் கொண்டிருக்கும் பாடலில் மகுடம் சூட்டினாற் போல சுமார் 3.20 நிமிடங்களில் அத்தனையும் நின்று ஒரு கைத்தட்டல், Banjo இசை. இதை முதல் முறை கேட்ட போது அசூயையிலிருந்து பரவசமாக மாறியதை மறக்கவே முடியாது. இது எப்படி சம்பந்தமில்லாமல் நுழைந்தது, ஆனால் பாடலின் ஜீவனாகியது, எப்படி இத்தனை நுட்பதிற்கு நடுவில் இந்த எளிமை நம்மை மெய்மறக்கவைக்கிறது, இத்தனை நவீன கருவிகளுக்கு இடையில் Banjos தோரணையாக வருகிறது என நினைக்க வியப்பளிக்கும் பகுதி இது.
இத்தகைய தருணங்களால் ஆனதே Porcupine Treeன் இசை.
சில தேர்வுகள்:
1. Trains
மேற்கூறிய பாடல்
2. The sound of Muzak
அசாதாரணமான ஆனால் Porcupine Tree குழுவிற்கே உரிய தாள மற்றும் Guitar இசை. “One of the wonders of the world ..going down” என்ற தற்கால இசை குறித்த விமர்சன வரி அருமையான Chorus ஆகி அக்கருத்தை நிராகரிக்கிறது.
குழு குறித்து:
தனது இசைக்கான இன்னொரு தளமாக Steve Wilson 1992ல் இக்குழுவை ஆரம்பித்தார். Edwin (Bass), Barbieri (Keyboard), Harrison (Drums), Wilson (Guitar, song writing) என்ற நால்வர் குழுவாக இதுவரையில் பத்து ஆல்பங்களும் பிற வெளியீடுகளும் வந்துள்ளன. Steve Wilson தனியாக பல்வேறு முயற்ச்சிகளையும் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இது தவிரவும் பல முக்கியமான குழுக்களுக்கு இவர் இசை தயாரிப்பாளராக. தனது ஆதர்சமான 70 களின் கலைஞர்களோடும் சேர்ந்து பணியாற்றுகிறார். ஒரு இயக்கமாகவே திகழ்கிறார் Steve.
Steve Wilson இந்தியாவிலும் கொஞ்சம் பிரபலம். 2009ல் இந்தியாவில் இவரது இசை நிகழ்ச்சி நடந்தது IIT Mumbaiல். மேலே குறிப்பிட்ட Sound of Muzak அந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல்களுள் ஒன்று.