தொகுப்பு: The Mantle (2002)


தொகுப்பு: The Mantle (2002) குழு: Agalloch


Agalloch என்ற  இக்குழு, தெற்கு ஆசிய நாடுகளில் (இந்தியா உட்பட) அதிகமாக காணப்படும் Agallochum (நம் அகர்/அகில் மரம்) மரத்தின் பெயரைத் தமது பெயராகக் கொண்டுள்ளது. நறுமணம் கமழும் மரத்தோடு தங்களது இசையை அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது என இவர்கள் சொல்வது அதீதமாகத் தோன்றினால் அது “The Mantle” என்ற இந்த தொகுப்பை கேட்கும் வரையில் மட்டுமே. The Mantle WP

இந்த குழுவிற்கு கோபம் வரவைக்கும், ஆனாலும் ஒவ்வொரு பேட்டியிலும் தவறாமல் கேட்கப்படும் கேள்வி இதுதான். “உங்களது இசை எந்த வகைமையைச் சார்ந்ததாக கருதுகிறீர்கள்?” கேள்வி கேட்பதிலும் ஒரு நியாயம் இருக்கிறது.

The Mantle என்ற இந்த தொகுப்பு Ambient metal, doom metal, neofolk, atmosphericfolk, black metal, darkneofolkmetal, apocalyptic என பலதரப்பட்ட வகைமைகளில் விமர்சகர்கள், ரசிகர்களால் பந்தாடப்படுகிறது. எந்த வகைமையிலும் முழுதாக அடங்காத, அதே வேளையில் எல்லாவற்றின் கூறுகளையும் கொண்டுள்ள இந்த தொகுப்பின் இசைமொழியே இதற்குக் காரணம். சரி அவர்களிடமே கேட்டுவிடுவோம் என பேட்டி காண்பவர்கள் நினைக்கிறார்கள்.

Agalloch கோபப்படுவதிலும் நியாயம் இருக்கிறது. ஏனெனில் வகைமைப்படுத்துவது என்பது ஒரு வசதிக்காகவே என்பதைத் தாண்டி, வகைமையின் குறுகிய சட்டகத்திற்குள் நின்று கொண்டு விமர்சிக்கும் போக்கு  இக்குழுவிற்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது. எடுத்துக்காட்டாக இதில் guitar இசை அதிநுட்பமாக இல்லை என்ற சிலரது விமர்சனம், ஏன் இருக்க வேண்டும் என்ற எதிர்கேள்வி பற்றி யோசிக்காமல் வைக்கப்படுகிறது. இந்த விமர்சனம் காலம் காலமாக நுட்பமான guitar இசையே பிரதானமான Metal வகைமையில் ஊறிய ரசிக, விமர்சன மனதிலிருந்தே வருகிறது. இது ஒரு metal தொகுப்பு என்ற அடிப்படைத் தவறைச் செய்த பின்னர்.

இருக்கும் கோட்டைகளைக் கலைத்து புதிதாய் செய்வது, கலைஞர்களுக்கு எளிதாக இருக்கிறது.ரசிகர்கள் தான் திண்டாடுகிறார்கள்.

எனில் இதில் Metal இல்லையா, Folk இல்லையா என்றால்: இருக்கிறது. ஆனால் இவை இருப்பதற்கான காரணமே வேறு.அணுகுமுறையும் வேறு. இதை பின்வருமாறு புரிந்து கொள்கிறேன்.

இந்த இசையைக் கேட்டதும், இது ஐரோப்பிய இசை அதுவும் நார்டிக் இசை என பழகியவர்கள் கண்டுபிடித்து விடலாம். அது தவறு. ஆச்சர்யமான விஷயம் இவர்கள் அமெரிக்க குழுவினர். அமெரிக்காவில் இவ்வகை இசைக்குழுக்கள் அரிது. அமெரிக்காவின் மிக அழகிய இயற்கைப் பிரதேசம் என இவர்கள் கருதும் இவர்களின் சொந்த ஊரான Portlandஐ அதன் இயற்கையை பெரிதும் நேசிப்பவர்கள் இக்குழுவினர். மனித இனம் அடிப்படையில் சுயஅழிவிற்கான இனமாகவும், உலகின் நோயாகவும் கருதும் இவர்கள், இதிலிருந்து தப்பும் வழியாக இவர்கள் பாஷையில், “இந்த இனத்தால் வெளிரிப்போன ஒப்பற்ற தோழனான”, இயற்கையை வழிபடுகிறார்கள். இந்த உணர்வு நிலைகளைத்தான் இசையில் வெளிப்படுத்த முயல்கிறார்கள். 1781867_10152206414388606_561791592_n

ஆனால் இது போன்ற பார்வைகள் பலரில், அதுவும் Metalல் எளிதாகக் காணக்கிடைக்கும் பார்வைதான்.”The Mantle”ன் தனித்துவம், இந்த தொகுப்பு பெற்ற வெற்றி, இத்தனை ஆண்டுகள் பின்னரும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு மைல்கல் தொகுப்பாகத் திகழும் காரணம், இந்த பார்வைகளை இவர்கள் இசையில் கடத்திய விதமே. இன்னும் குறுக்கினால் இந்த உணர்வுகளை இசையாக மொழிபெயர்க்க இவர்களுக்கு சாத்தியமாயிருக்கும்,தொனியும் ஒலி நயமுமே (Tone and Texture).

இது எப்படி சாத்தியாமனது என்பதற்கு Agallochன் அணுகுமுறையைத் தான் சொல்ல வேண்டும். எல்லா குழுக்களையும் போல தங்களை பாதித்த இசைக்குழுக்களைப் பற்றி சொன்னாலும் (Ulver, Swans, Godspeed you Black Emperor,Katatonia, Nephilium, Sol Invictus, Death in June..என வாயைத் திறந்தால் ஒரு நூறு குழுக்களை அடுக்குவார்கள்), Agalloch தங்களது முதன்மையான பாதிப்பாகச் சொல்வது சினிமாவைத்தான். இந்த தொகுப்பில் கூட The Hawthorne Passage என்ற பாடலில் Bergmanன் The Seventh Seal படத்தின் புகழ் பெற்ற துவக்க வசனமான “Who are you – I am Death” இடம்பெற்றுள்ளது. Bergman, Jodowrsky, Tarr, Bava, Jarmusch, Tarkovsky, Lynch போன்ற இயக்குனர்களை ,  பேராசிரியர்களாகவும், அவர்கள் தரும் படிமங்களையும், சித்திரங்களையும் தங்களது மிகப்பெரிய பாதிப்பாகவும் குறிப்பிடுகிறார்கள். இதன் தொடர்ச்சியாகவே, இவர்களின் பார்வைகள் சார்ந்த ஒரு படிமத்தொகுதியாகவே இத்தொகுப்பு விளங்குகிறது. எனவேதான் இதில் நுட்பாமான Guitarக்கு வேலையிலலை. Agallochன் குறிக்கோள் படிம மற்றும் உணர்வு நிலை இசையே. அதற்குத் தேவையான இசைமொழியை வடிவமைக்க வாத்தியங்கள், வகைமைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்த தொகுப்பில் ஒவ்வொரு வாத்தியத்தியமும் வகைமையும் ஒரு பிம்பத்தையோ அல்லது உணர்வு நிலையையோ குறிக்கிறது.

Portlandன் பனிபெய்யும் கானகத்தை சில்லிடும் Acoustic Guitar இழைஇழையாக வடிக்கிறது. இவ்வகை Acoustic Guitar – NeoFolkன் கூறு.

கொடிய மனிதனையும், வெளிரிய இயற்கையையும் அலறற்குரல் குறிக்கின்றது. இவ்வகை அலறல்- Metalன் கூறு.

இந்த சூழலின் பதைபதைப்பை, தீவிரத்தை Drums நிலைக்கச் செய்கிறது. இது Doom, Ambient இசையாகிறது.

Minimalistic கதியில் இப்படிமங்களின் நகர்வு.. இப்படி மொத்த சித்திரத்தை வரைய வண்ணங்களே ஒவ்வொரு வாத்தியமும், வகைமையும். Accordion, Mandolin,trombone என ஒவ்வொரு வாத்தியத்திற்கும் தொகுப்பில் இடம் இருக்கிறது. The Lodge பாடலின் ஆரம்பத்தில் செவிகளுக்குள் கூழாங்கல்லை எறிவது போன்ற ஒரு சத்தம் வருகிறது. அருமையான Production Job என்று நினைத்தால், அந்த சத்தத்தை ஒரு மானின் மண்டையோட்டில் தட்டி உருவாக்கினார்கள் என பிறகே தெரிந்தது. agalloch

இந்த  உழைப்பும்,எண்ண ஒட்டங்களும், நேர்மையும் தொகுப்பில் நிதர்சனமாகத் தெரிகிறது.

Agalloch இக்கலவையான இசையின் மூலம் நம்மை Portlandன் பனிபெய்யும் கானகக்தில் நிறுத்தி விடுகிறார்கள். Agalloch எதிர்பார்த்தது இதைத்தான். ஆனால் அதற்கும் மேலாக இக்கலவையான இசைமொழி சிலவற்றை சாதித்திருக்கிறது. அந்தந்த வகைமையை ரசிப்பவர்களுக்கு முழுமையான நிறைவளிக்கவில்லையெனினும், அவர்களை பிற வகைமைகளுக்கு செவி சாய்க்க வைத்திருக்கிறது.பல ரசிகர்கள் தாங்கள் Metal இசைக்குள் நுழைய “The Mantle”ஐ காரணமாகச் சொல்கிறார்கள். இது போன்ற கலவையான இசைமொழி பொதுவாக, இசை மற்றும் வாத்திய நுட்பத்தில் சிறப்பாக இருக்கும். ஆனால உணர்வு ரீதியான ஒற்றைத்தன்மையைத் தருவது அரிது. ஏனெனில் வகைமைகள் தங்களுக்குள் தன்னியல்பான ஒரு உணர்வுநிலையைக் கொண்டுள்ளன. Agallochன் மிகப்பெரிய சாதனை இந்த தொகுப்பின் பல்வேறு விஷயங்களை ஒற்றை உணர்வுநிலையில் கட்டியமைத்த வித்தைதான்.

அதுவே இத்தொகுப்பை சாசுவதமாக்குகிறது.

சில தேர்வுகள்:

1. The Lodge மானெலும்பின் அதிர்வு, பிறகு ஒரு பூட்ஸ் சத்தம், பிறகு Acoustic Guitar…

2. I am the wooden Doors பேசும் ட்ரம்ஸிற்காகவும், 2.30 நிமிடங்களில் திடீரென மெல்லிசைக்குள் புகுந்து வெளியேறும் ஜாலதிற்காகவும்.

3. In the shadow of our pale companion

குழு குறித்து Agalloch முன்பே சொன்னது போல Portland, Oregonஐ சேர்ந்த இசைக்குழு. John Haughm தான் முதன்மையாளர். இத்தொகுப்பில் வரும் metal குரலுக்கு சொந்தக்காரர். இவரோடு Jason Walton, Anderson இணைந்துள்ளனர்.  Haughm ஒரு graphic designer, Anderson ஒரு இலக்கிய பேராசிரியர். இப்படி வேறு பட்ட பிண்ணயில் வரும் பரந்த அனுபவங்கள் இக்குழுவின் பலம். The Mantle மூலம் கொஞ்சம் வெளிச்சத்திற்கு வந்த  இக்குழு இது வரை 5 தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறது. இலக்கியம், சினிமா, ஓவியம், இயற்கை இவை கலந்த அனுபவமே.தங்களது இசை என்கிறது இக்குழு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: