குழு: Dance gavin dance
நவீன மேற்கத்திய இசையின் முதன்மையான அடையாளங்களில் ஒன்று இரைச்சல்.
இசை என்றாலே ஒலிகளின் இசைதல், இனிமை என்ற நேர்கோடான சிந்தனைக்கு மாற்றாக ஒவ்வாமையை, இரைச்சலை நவீன இசை முன்னிறுத்துகிறது. இது எல்லாவற்றையும் புரட்டிப்பார்க்கும் மனிதகுணத்தின் முயற்ச்சியாக ஆரம்பித்தாலும், இரைச்சல் மிக இயல்பான இசைமொழியாக மாறியிருக்கும் காலமிது. இனிமை இயல்பற்றதோ என சந்தேகம் வரும் அளவிற்கு.
இரைச்சலை பிரதானமாக கையாளுபவை Rock, Punk(Hardcore), Metal போன்ற வகைமைகளும் இவற்றின் உபகிளைகளுமே. இதில் ஒன்றான PostHardcore வகைமையினை வரையறுக்கும் குழுக்களுள் ஒன்றாக முக்கியத்துவம் பெறுகிறது DanceGavinDance இசைக்குழு. இந்த குழுவின் தனித்துவம் என்பது, நம்மை மண்டை காயவைக்க கூடிய இரைச்சலை, இவ்வளவு கொண்டாட்டமான பேரனுபவமாக மாற்ற முடிந்ததே. இதற்கு காரணமான இவர்களின் இசைமொழி, முந்தைய தொகுப்புகளில் உருவாகத்தொடங்கி, Downtown battle mountain என்ற இந்த தொகுப்பில் தான் முழுமை அடைந்திருக்கிறது.
இந்த தொகுப்பின் இசைமொழி Screamo பாணியின்படி, இரு கூறுகளாலானது. ஒன்று ஒவ்வாமையை உண்டாக்கும் முரணிசையும், கூச்சலும். மற்றொன்று அதை சமன்படுத்தும் சீரான குரல். இப்படி ஒழுங்கையும், ஒழுங்கின்மையையும் வண்டி வண்டியாக கையாளும் பாடல்கள் நியாயமாக நம்மை அயர்வடையச்செய்ய வேண்டும். ஆனால் இசையமப்பும், கலைஞர்களின் ஆற்றலும் நம்மை மேலும், மேலும் நிலைகுலையவே வைக்கின்றன.
இந்த தொகுப்பின் பங்களிப்பை குறித்து பார்க்கையில், Mingusன் Drums கச்சிதமாக, துருத்தாமல் அதே வேளையில் தேவையான தீவிரமும் கொண்டுள்ளது. தொகுப்பின் முதுகெலும்பாக Will Swan, Sullivan கூட்டணியின் கற்பனையும், வேகமும், துல்லியமும் கலந்த guitar இசை. John messன் வறட்டுக் கூச்சல் உணர்வற்றதாக குறைசொல்லப்பட்டாலும் அவருடைய கூச்சல் Rap Vocals போன்று ஒரு தாளகதியைத் தருகிறது. Drums, Guitar, கூச்சல் சேர்ந்து செவியையும், உணர்வுகளையும் அலைகழிக்க, கிடைத்த வாய்ப்பில் புகுந்து விளையாடுகிறார் தொகுப்பின் நாயகன், Jonny craig.
Jonny craig போன்ற RnB பாணியிலான பாடகர்(சில இடங்களில் ஜாக்சனை நினைவூட்டுகிறார்), இந்த வகைமையில் பொருந்தும் ரசவாதம் ஒரு அதிசயந்தான். கீழ், மேல் தொனிகளில், மென்மையும், உற்சாகமும், உணர்ச்சிப்பெருக்கும் கலந்து craig பாடுவது ஒரு மாயாஜாலம்.இந்த தொகுப்பை அற்புதத்தில் இருந்து இணையற்றதாக மாற்றுவது சந்தேகமின்றி Jonny Craigன் குரல் தான்.
தொகுப்பில் மொத்தம் 11 பாடல்கள்.எந்த அறிகுறியும் இன்றி திடீரென துவங்கும் அடைமழையின் ஆரம்ப தூறல் போன்ற ஒரு அறிமுக இசை. அறிமுக இசை முடிந்தவுடன் அதன் சரடைப் பிடித்து, பொட்டில் அறைவது போன்ற guitar இசையில், முதல் பாடல் தொடங்குகிறது. “But now you know that I am cold” என்று Jonny Craig ஆரம்பிக்கும் போது நாம் ஒரு ராட்டினத்தின் தடுப்பு கம்பிகளை பற்றிக் கொள்கிறோம். அங்கு துவங்கி, ஒரு நொடி இடைவெளியின்றி, பற்றிய பிடி சிறிதும் விலகாமல், கேட்பவரைத் தனக்குள் சுருட்டிக்கொள்கிறது இந்த தொகுப்பு.
Posthardcore எல்லாவற்றையும் பார்த்தாகி விட்டது என்று நினைத்த போது, DowntownBattleMountain ஆச்சர்யப்படுத்தியது. தனது தனித்துவமான இசைமொழியினால் இந்த தொகுப்பு தனக்கென ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறது.
சில தேர்வுகள்:
1. And I Told Them I Invented Times New Roman Johny Craigன் மாயம். அட்டகாசமான பாடல். தொகுப்பின் முதல் பாடல்.
2.”Turn Off the Lights, I’m Watching Back to the Future” John messன் கூச்சலும் Guitarம் சேர்ந்து உருவாக்கும் ஒரு மதிமயக்கும் அனுபவம். ‘
இசைக்குழு குறித்து Dance Gavin Dance என்ற இந்த குழு உண்மையில் யார்தான் Dance Gavin Dance என்று கேட்கும் அளவிற்கு (தர்மத்துக்கு சண்டையிட்டுக் கொண்டு) குழுவின் உறுப்பினர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். Will Swan தான் இதனை நிருவியவர். முதன்மை guitarist மற்றும் song writer. இவருடன் Matt Mingus, John Mess இருவரும் பெரும்பாலும் இணைந்துள்ளவர்கள். மொத்தம் 5 தொகுப்புகள் இது வரையில். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த இக்குழு, இந்த பாணியில் மிக அரிதாகி வரும் சுயமான குழுக்களுள் ஒன்று.